காவல் நிலையங்கள் இந்து மத பூஜை மடங் களாக மாறிவிடக் கூடாது. அது மதச்சார் பின்மையைக் குலைத்துவிடும் என்று பெரியார் திராவிடர் கழகம் சுட்டிக் காட்டியது. அரசு ஆணைகள் மத பூஜைகளை அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில்  தடை செய்தாலும், அதையும் மீறி ‘ஆயுத பூசை’கள் நடக்கின்றன.

 இதன் காரணமாக காவல்துறை மதரீதியாக பிளவுபடும் ஆபத்துகள் தோன்றியுள்ளன. ‘தினமலர்’ (அக்.20) நாளேட்டில் ‘டீ கடை பெஞ்ச்’ பகுதியில் வெளிவந்துள்ள செய்தி இது:

“போலீஸ் துறையில் வேலை பார்க்கிற கிறிஸ்தவர்களை ஒன்று சேர்க்கும் வகையில் ஒரு அமைப்பு உருவாகி இருக்குங்க.” 

“காவலர்கள் பரிசுத்த சேனை ஜெபகுழுன்னு இதுக்கு பேர் வெச்சிருக்காங்க... ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தனியார் பள்ளிக் கூடத்தில் இந்த அமைப்பின் கூட்டத்தில் , மதுரையில் வேலை பார்க்கும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த போலீசார் கலந்துக்கிறாங்க... கூட்டு ஜெபம் ஆலோசனைன்னு நடத்திட்டு கலைஞ்சிடறாங்க....” 

- என்கிறது, ‘தினமலர்’ செய்தி. அடுத்து முஸ்லீம் அதிகாரிகள். தனியாக அமைப்பு தொடங்கினால் வியப்பில்லை. காவல் நிலையங்களில் இந்து மத சடங்குகளை நுழைத்தால், அதன் எதிர்வினைகள்  இப்படித்தானே போய் முடியும்? மத-சாதி அடிப் படையில் காவல்துறை பிளவுபட்டால், என்னவாகும் என்பதை, ஆட்சியாளர்கள் சிந்திக்காமல், எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று வேடிக்கை பார்க்கலாமா? 

போர்க் குற்றவாளி  

டெல்லி காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவின்போது, ராஜபக்சேவின் அருகில் இங்கிலாந்து அரசு குடும்பத்தினர் அமர்ந்து இருந்தனர். ‘போர்க் குற்றவாளியான ராஜ பக்சேவுடன், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் எப்படி அமரலாம்?’ என இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் இப்போது அமளி துமளி. “மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு குற்றவாளியுடன் எப்படி ராஜ குடும்பத்தினர் அமரலாம்?’ என விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சோப்பி மக்க்ளஸ். நீங்களாவது நல்லா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி கேளுங்க!

நன்றி: ‘ஆனந்த விகடன்’ அக். 27

கழகத் தோழர் கேசவன் கைது  

சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் அரசு ஆணைக்கு எதிராக ஆயுத பூசை நடத்தியதை எதிர்த்து, கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தி கடந்த இதழில் வெளிவந்துள்ளது. அதற்குப் பிறகு, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி மாலை 6 மணி யளவில் வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் கேசவன், தனது வணிக நிறுவனத்தில் இருக்கும் போது, காவல்துறையினர், பலவந்தமாக கைது செய்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றி, சென்னை உயர்நீதிமன்ற வளாக காவல் நிலையத்தில் இருந்த துணை ஆணையரிடம் கொண்டு போய் நிறுத்தி, அங்கிருந்து புளியந்தோப்பு காவல்நிலையம் கொண்டு போய் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சேதி அறிந்த ஏராளமான தோழர்கள் திரண்டு காவல்நிலையம் சென்றனர்.  உடனே ஏராளமான ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டனர். 

பலத்த பாதுகாப்புகளோடு சைதை நீதிமன்றம் கொண்டு சென்று, ‘ரிமாண்ட்’ செய்து புழல் சிறை யில் அடைத்தனர். கழக வழக்கறிஞர் குமார தேவன் தாக்கல் செய்த பிணை மனுவின் கீழ் 22 ஆம் தேதி கேசவன் விடுதலை செய்யப்பட்டார். கைதைக் கண்டித்து சென்னை முழுதும் கழக சாhபில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

Pin It