(1928 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டிலிருந்து சில வரலாற்றுத் தகவல்கள்)
சுயமரியாதை இயக்கம், சைவர்களோடு கடும் போராட்டங்களை நடத்தியிருப்பதை ‘ரிவோர்ட்’டில் வெளியான கட்டுரைகளிலிருந்து அறிய முடியும். சுமார் 40 பக்கங்கள் சைவத்துக்கு எதிராக சுயமரியாதை இயக்கம் நடத்திய கருத்துப் போராட்டங்கள் ரிவோட்டில் இடம் பெற்றுள்ளன. சைவ சித்தாந்தங்களை ஆழமாக ஊன்றிப் படித்த நாகர்கோயில் வழக்கறிஞர் பி.சி. சிதம்பரம் பிள்ளை, தமிழ்நாட்டு சைவர்கள் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பதைக் கண்டித்து எழுதிய ஆழமான கட்டுரைகள் இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
சுயமரியாதை இயக்கமே பார்ப்பனரல்லாத வேளாளர்கள் சிலரால் (சைவப் பிரிவு) ஏற்படுத்தப்பட்டது என்றும், எனவே பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கான இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம் என்றும் - சில ஆய்வாளர்கள் உண்மைக்கு மாறான கருத்துகளை முன் வைத்தனர். அதையே பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சில ஆய்வாளர்களும் கூறி வந்தனர். ஆனால் சுயமரியாதை இயக்கம் சைவர்களுடனும் அவர்களது பார்ப்பனிய கொள்கைகளோடும் கடுமையாக போரிட்டதை ‘ரிவோல்ட்’ வரலாற்றுப் பக்கங்கள் தெளிவாக படம் பிடிக்கின்றன.
பெரியார் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்னால், 1928 ஆம் ஆண்டு ஒரு நிகழ்வு நடந்தது. ஜூலை 28 ஆம் நாள் சென்னை இராயப்பேட்டையில் ‘பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை’ என்ற அமைப்பின் ஆண்டு விழாக் கூட்டத்தில் சைவ மதப் பிரிவின் தீவிரவாதியும், தனித் தமிழ் இயக்கத்தை நடத்தியவருமான வேதாச்சலம் என்ற மறைமலையடிகள் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பெரியாரையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் கடுமையாகக் கண்டித்தார். அதே நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்ற சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த என். தண்டபாணிப் பிள்ளை ‘திராவிடன்’ ஆசிரியர் குழு உறுப்பினர் ஜனகசங்கர கண்ணப்பர் (இவர்கள் இருவரும் பிறப்பால் சைவப் பிரிவைச் சார்ந்த சாதியினர்) ஆகியோர் கூட்டத்தில் மறைமலை அடிகளாரைப் பார்த்து கேள்விகள் எழுப்பினர். சைவ மதத்தைப் பரப்பிய ஞானசம்பந்தன் சூழ்ச்சியால் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொலை செய்த கொடுஞ் செயல்களை எல்லாம் சுட்டிக் காட்டினர். கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு, கலவரத்தில் முடிந்தது.
இது பற்றி சுயமரியாதை இயக்க ஆதரவு ஏடுகளான ‘குடிஅரசு’, ‘திராவிடன்’ இதழ்களில் விரிவான செய்திகள் வெளி வந்தன. பெரியார் ஈ.வெ.ராவைக் கொல்ல வேண்டும் என்று சைவர்களை மறைமலை அடிகள் தூண்டியதாகவும், அப்போது, தண்டபாணிப் பிள்ளை அவர்களும், கண்ணப்பரும் தொடுத்த வினாக்களுக்கு பதில் கூற முடியாமல், மறைமலை அடிகள் கூட்டத்தில் கண்ணீர் வடிக்கத் தொடங்கி விட்டார் என்றும் அச்செய்திகள் கூறின.
மறைமலை அடிகளோ, தமது நாட்குறிப்பில் இதற்கு நேர்மாறாக எழுதினார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் சரியான விடை அளித்ததாக அவர் எழுதி வைத்துள்ளார். ‘குடிஅரசு’ இதழில் மறைமலை அடிகளைக் கண்டித்து தலையங்கங்கள், கட்டுரைகள் வெளி வந்தன. பின்னர் பெரியாருக்கும், மறைமலையடிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகளை தமிழ் அறிஞரும், சைவரும், பெரியாரின் உற்ற நண்பருமான திரு.வி.கல்யாணசுந்தரம் (திரு.வி.க.), தமிழ் அறிஞரும், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவரும், பிறப்பால் சைவருமான கி.ஆ.விசுவநாதமும் சமரசம் மேற்கொண்டனர். சமரசத் திட்டத்தின்படி பெரியாருக்கு நட்பு ரீதியாக மறைமலை அடிகள் கடிதம் ஒன்றை எழுதினார். அதில்
“கடவுளைப் பற்றியும், அடியார்களைப் பற்றியும் தாங்கள் கொண்டுள்ள கோட்பாடுகளில் மட்டும் யான் கருத்து உடன்பாடுடையேனல்லேன்; (உடன்படாதவன்) பத்திரிகைகளில் வெளிவந்த சிலவற்றைப் பார்த்து தாங்கள் வருந்தியிருந்தால், அவ்வருத்தத்தை தாங்கள் அன்புகூர்ந்து நீக்கிவிடல் வேண்டும்” என்று எழுதியிருந்தார். இக்கடிதத்தை ‘திராவிடன்’ ஏடு ஆசிரியர் குழு பெரியாரைக் கலந்து ஆலோசிக்காமலே மறைமலை அடிகளின் “மன்னிப்புக் கடிதம்” என்று தலைப்பிட்டு வெளியிட்டு விட்டது. பெரியார் கோபமடைந்தார். பெரியாரின் பெருந்தன்மையை இங்கே புரிந்து கொள்ள முடியும். திராவிடன், இப்படி தவறான தலைப்பில் வெளியிட்டதற்கு மறைமலை அடிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்.
அதே கட்டுரையில் - “நாம் நம் கொள்கையிலோ அபிப்பிராயத்திலோ, ஒரு சிறிதளவுகூட விட்டுக் கொடுக்கவோ, திரு. வேதாசலத்தினுடையவோ (மறைமலை அடிகளாரின் உண்மைப் பெயர்) அல்லது வேறுபாடுடையவோ நட்பைக் கருதியானாலும், கடுகளவு மாற்றிக் கொள்ளவோ சிறிதும் தயாராக இல்லை” என்று தமது கொள்கை உறுதியையும் பெரியார் வெளிப்படுத்தினார்.
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டு புரட்சிகர தீர்மானங்கள் வைதீகக் கோட்டையை கலங்கடித்தன. தீண்டாமை, சாதி ஒழிப்பு, புரோகிதரை நீக்கி வைத்தல், பெண்ணுரிமை ஆகிய தீர்மானங்களோடு, பெயருக்குப் பின்னால் போடும் சாதிப் பட்டங்களை நீக்க வேண்டும். மதச் சின்னங்களை அணியக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெற்றியில் விபூதியும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையுமாக காட்சி அளித்த சைவர்கள். இத் தீர்மானங்களைக் கண்டு வெகுண்டனர். தனியாக ஆலோசனை கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தத் தொடங்கினர். திருநெல்வேலியிலும், திருப்பாதிரிப்புலியூரிலும் (கடலூரில் ஒரு பகுதி) சைவர்கள் மாநாடு நடத்தினர். சைவர்கள் நடத்திய மாநாடுகளில், சைவர்களிலேயே அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. சைவ மதம் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு விடை தெரிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த மாநாடுகளைப் பற்றிய விமர்சனங்களையும், பிற்போக்கான தீர்மானங்களுக்கு உரிய விடைகளையும் வழங்கி, ‘ரிவோல்ட்’ ஆழமான கட்டுரைகளையும் தலையங்கங்களையும் தீட்டியது. அவை பற்றி அடுத்து எழுதுவோம்!