“ ‘குடிஅரசுதொகுப்புகளே முழுமையாக வழக்கு தொடர்ந்தவர்களிடம் இல்லை; ‘குடிஅரசுதொகுப்பை வெளியிடுவதில் எங்களுக்கு எந்தப் பொருள் பயனும் இல்லை; இதை வைத்து நாங்கள் மாட மாளிகைகள் கட்டப் போவதில்லை; எங்களுக்கு கிடைக்கும் பயன், மன நிறைவுதான்என்று கழக வழக்கறிஞர் துரைசாமி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

பெரியார் எழுத்து பேச்சுகளை வெளியிடத் தமக்கு மட்டும் உரிமை உண்டு என்றும், மீறி வெளியிட்டால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கி. வீரமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிஃபுல்லா, எஸ். கிருபாகரன் ஆகியோர் முன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப். 16 ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் செய்திகள், கடந்த வார இதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பிப். 17, 18 தேதிகளில், வழக்கு விசாரணை நடந்தது. இரு நாட்களிலும் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி, கழக சார்பில் வாதிட்டார்.

2003 ஆம் ஆண்டில் கழகம் குடிஅரசு முதல் தொகுதி - 1925அய் வெளியிட்டபோது அந்த இதழில் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதியை நீதிபதி கிருபாகரன் சுட்டிக்காட்டினார்.

“1983 இல் பல பெரியார் பற்றாளர்கள் ஒரு குழுவாக இணைந்து தொடர்ந்து மூன்று கோடை விடுமுறைகளில் பணியாற்றி குடி அரசுஇதழ்களில் இருந்து பெரியார் எழுதியதாக அவர்கள் கருதிய கட்டுரைகள், இதழில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், இரங்கலுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து கையெழுத்துப்படி எடுத்து திராவிடர் கழகத் தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்என்ற பகுதியை சுட்டிக்காட்டி, “இது, வழக்கு தொடர்ந்தவர்களுக்குரிய தொகுப்பு என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்களேஎன்று கேட்டார்.

வழக்கறிஞர் துரைசாமி இதை மறுத்தார். பல பெரியார் பற்றாளர்கள், அவர்களாகவே ஒரு குழுவாக இணைந்து, ‘குடிஅரசுஇதழிலிருந்து, பெரியார் கட்டுரைகளை எழுதி, அதை தி.க. தலைவரிடம் ஒப்படைத்தார்கள். அதை தி.க. தலைமை வெளியிடாமல் கிடப்பில் போட்டதால் அந்தக் குழுவிலிருந்த பெரியார் மய்யத்தைச் சார்ந்த வழக்கறிஞர் பாண்டியன், எங்களிடம் தந்தார். இந்தக் குழு, வழக்கு தொடுத்த கி.வீரமணியால் நியமிக்கப்பட்டது அல்ல; திராவிடர் கழகத்தாலும் அறிவிக்கப்பட்ட குழு அல்ல; பெரியார் பற்றாளர்கள் பலரும் கூடி, அவர்களே தன் விருப்பமாக நடத்திய பணியேயாகும். அவர்களிடமிருந்து பெற்ற குடிஅரசில்பெரியார் எழுதியதாகக் கூறப்பட்ட சந்தேகத்துக்குரிய கட்டுரைகளை எல்லாம் நீக்கிவிட்டு, 2003 இல் அதை வெளியிட்டோம். அதை எதிர்த்து எந்த வழக்கும் எதிர்தரப்பினரால் தொடரப்படவும் இல்லை. பிறகு 2005 இல் நாங்கள் வெளியிட்ட இரண்டு தொகுதிகளுக்குமான குடிஅரசைஇதழ்களை நாங்களே தனியாக சேகரித்தோம்என்றார்.

இரண்டாவதாக - எதிர் தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் உண்மைக்கு மாறான தகவல் தரப்பட்டுள்ளதை வழக்கறிஞர் துரைசாமி சுட்டிக் காட்டினார். பெரியாரின் குடிஅரசுபத்திரிகைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சரசுவதி மகால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நூலக - ஆய்வகங்களிலிருந்து திரட்டினோம் என்று, எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அது பொய். அந்த நூலக ஆய்வகங்களில் குடி அரசுஇதழ்களே கிடையாதுஎன்று அவர்கள், தங்கள் மனுவில் மறுத்திருந்தனர். ஆனால், இப்போது இந்த வழக்கு தொடர்ந்ததற்குப் பிறகு அவர்கள் வெளியிட்டுள்ள 1925 ஆம் ஆண்டு முதல் குடிஅரசுதொகுப்பில் எந்த நூலகங்களில் குடிஅரசுஇல்லை என்று கூறினார்களோ, அந்த நூலகங்களுக்கு தொகுப்புக்கு உதவியதாக நன்றி செலுத்தியிருக்கிறார்கள். ஆக, மனுவில் உண்மைக்கு மாறாக அவர்கள் தகவலை அவர்கள்தான் தந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

அடுத்து, கழகம் வெளியிட்ட முதல் தொகுப்பில் பெரியாரின் கட்டுரை குடிஅரசில் வெளிவந்த சில பக்கங்கள் கிழிந்து, மறைந்து போயிருந்ததால், அந்தப் பகுதியை அப்படியே இடைவெளியிட்டு வெளியிட்டிருந்தோம். ஆனால், வீரமணி நிறுவனம் வெளியிட்ட தொகுப்பில் அதே கட்டுரை, வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. எங்களின் தொகுப்பு வேறு; அவர்களுடையது அல்ல என்பதற்கு, இது ஒரு சான்று என்று கூறினார். இரண்டு தொகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்த நீதிபதி, அவர்களுக்கு கிடைத்த குடிஅரசில்’, எழுத்துகள் மறையாமல் இருந்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் துரைசாமி, “நீதிபதி அவர்களே, அவர்களிடம் 1925, 1926 ஆம் ஆண்டுகளுக்கான குடிஅரசுகளே கிடையாது. தங்களிடம் அவைகள் இல்லை; இருப்பவர்கள் அனுப்பி உதவுங்கள்என்று 2008 இல் அவர்கள் விளம்பரமே செய்திருக்கிறார்கள். 1925 ஆம் ஆண்டு குடிஅரசேதங்களிடம் இல்லை என்று அவர்களே விளம்பரம் செய்துவிட்டு, அவர்களிடமிருந்த தொகுப்பைத் தான் நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று கூறுகிறார்கள் என்று எடுத்துக் கூறி, வீரமணியின் வேண்டுகோள் விளம்பரம் வெளிவந்த விடுதலைஏட்டையும் நீதிபதிகளிடம் காட்டினார். இதை, வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளீர்களா, என்று நீதிபதிகள் கேட்டதற்கு - ஆம், குறிப்பிட்டுள்ளோம் என்று கூறி, அப்பகுதியைப் படித்துக் காட்டினார்.

பெரியார் தனது கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்றுதான் விரும்பினாரே தவிர, அதற்கு பதிப்புரிமை கோர விரும்பவில்லை. எனவே, எழுத்துப்பூர்வமாக இதற்காக எதையும் எழுதித் தரவில்லை என்று வழக்கறிஞர் துரைசாமி கூறியபோது, நீதிபதி, கொளத்தூர் மணி, பெரியார் இருந்த காலத்திலேயே அவருடன் இருந்தவரா என்று கேட்டார், ‘ஆம்என்று வழக்கறிஞர் கூறினார்.

இதுவரை வெளிவந்த தொகுப்புகள் பற்றி நீதிபதி கேட்டபோது - “2003 ஆம் ஆண்டிலேயே தொடங்கி, 2005 ஆம் ஆண்டு வரை குடிஅரசைவெளியிட்டுள்ளோம். 1926 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது தொகுதியும் வெளிவந்துள்ளது. இனி வெளியிடப்பட வேண்டிய, தொகுதிகளைத்தான், இங்கே இதோ, அடுக்கி வைத்திருக்கிறோம். இவைகளையெல்லாம் கரையான் அரித்துவிடாமல் நாங்கள் காப்பாற்ற வேண்டியிருக்கிறதுஎன்று வழக்கறிஞர் துரைசாமி கூறியபோது, நீதிபதிகள் சிரித்துக் கொண்டனர். அன்று விவாதம் முடிந்தது.

பிப். 18 ஆம் தேதி மீண்டும் வழக்கறிஞர் துரைசாமி வாதத்தைத் தொடர்ந்தார்.

பதிப்புரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வந்த சில வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை, தமது வாதத்துக்கு வலிமை சேர்த்திட எடுத்துக் காட்டினார். இந்த வெளியீட்டின் வழியாக நாங்கள், ஏதோ பொருளீட்டப் போவதாக கி. வீரமணி மனுவில் கூறுவதை மறுத்த வழக்கறிஞர், “நாங்கள் அதிகமாகப் போனால் 1000 பிரதிகளைத்தான் அச்சேற்றுகிறோம். அதுவும்கூட அரசு நூலகங்களில் எங்கள் பதிப்புகளை வாங்க மாட்டார்கள். நாங்கள், பல நூலகங்களுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம். இந்த நிலையில் இதை வெளியிடுவதன் மூலம், அரண்மனைகளையும், மாளிகைகளையுமா கட்டப் போகிறோம்? இதை வெளியிடுவதில் எங்களுக்கு பயன் ஏதாவது இருக்கிறது என்றால், அது எங்களுக்கு ஏற்படும் உள்ளத் திருப்தி ஒன்றுதான்என்று கூறினார்.

இந்தத் தொகுப்புகளை வெளியிடுவது பெரியார் திராவிடர் கழகம்என்ற அமைப்புதான். காசோலை அனுப்புவோருக்கு, வங்கிக் கணக்கு வேண்டும் என்பதற்காகவே தா.செ.மணிபெயரில் அனுப்பும்படி வேண்டுகோளை வைத்தோம்என்று கூறி வழக்கறிஞர் துரைசாமி தமது வாதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து கழக பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிளாடியஸ்- பதிப்புரிமை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக்காட்டினார். “1914 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டப்படி ஒரு எழுத்தாளர் தனது படைப்புகளுக்கு பதிப்புரிமை கோரினால் எழுத்துப்பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். அப்படி எழுத்துபூர்வமாக வெளிப்படுத்திய பிறகும், 25 ஆண்டுகள் வரைதான் அது செல்லும். பெரியாரின் குடிஅரசு - 1925லிருந்து 1938 வரை வெளியிடப்படுவதால், இந்த வழக்கில், 1914 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் பிரிவுகள்தான் பொருந்தும்.

புதிய பதிப்புரிமை சட்டம் 1957 ஆம் ஆண்டுதான் வருகிறது. புதிய பதிப்புரிமைச் சட்டத்தின்படி எழுத்துப் பூர்வமாக ஒருவர் கோரியுள்ள பதிப்புரிமை 60 ஆண்டுகளுக்கு நீடிக்கும். 1957 ஆம் ஆண்டு புதிய பதிப்புரிமை சட்டத்திலேகூட, 1914 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம், புதிய சட்டம் அமையும் கால இடைவெளியில் பொருந்தக்கூடியவையே என்பதற்கான பிரிவுகள் இடம் பெற்றுள்ளனஎன்று வாதிட்டார். நீதிபதிகள், பதிப்புரிமை சட்டப் பிரிவுகள் தொடர்பான விளக்கங்களை கேட்டனர். இதற்கு தெளிவான விளக்கங்களை கிளேடியஸ்முன் வைத்தார்.

தொடர்ந்து, கி. வீரமணியின் வழக்கறிஞர், “1957 ஆம் ஆண்டு வந்த புதிய பதிப்புரிமை சட்டம்தான், இந்த வழக்கிற்கு பொருந்தும் என்றும், காரணம், இந்த சட்டம் வந்ததற்குப் பிறகும் 1973 வரை பெரியார் உயிருடன் இருந்திருக்கிறார்என்றும் வாதாடினார். இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதற்கான சட்டப் பிரிவுகள் இருந்தால் காட்டுங்கள்என்று கேட்டனர்.

பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையில், தனது நெருங்கிய உறவினர்களையே உறுப்பினர்களாக்கினார் என்றும், அப்படி நெருங்கிய உறவினர்களிடம் அறக்கட்டளை இருக்கும்போது, 25 ஆண்டுகளுக்கும் மேலும் பதிப்புரிமை சட்டம் செல்லும்என்று, வீரமணியின் வழக்கறிஞர் முன் வைத்த மற்றொரு வாதத்தையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. பெரியார் அறக்கட்டளையில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இல்லை; வெளியில் இருந்து பலரும் உறுப்பினர்களாக இருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உறவினர்களைக் கொண்ட அறக்கட்டளைக்கு காப்புரிமையின் காலம் 25 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும் என்ற சட்டப் பிரிவை ஏற்க வேண்டுமானால், அதையும், நூலாசிரியர் தான் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவுகளில் இடம் பெற்றுள்ளதை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சுட்டிக்காட்டினார்.

மீண்டும் மீண்டும் அதே சட்டப் பிரிவையே சுட்டிக்காட்டி வீரமணியின் வழக்கறிஞர் வாதிட்டபோது, நீதிபதி கலிபுல்லா அவர்கள், “மீண்டும் மீண்டும் எத்தனை முறை அதையே கூறுவீர்கள்? உங்கள் வாதப்படியே ஆனைமுத்துவுக்கும், ஸ்டார் வெளியீட்டு நிறுவனத்துக்கும் பெரியார் வழங்கியதைத் தவிர, அனைத்து உரிமைகளும் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டே கேட்கிறோம்; அப்படியே இருந்தாலும், நூலின் உரிமைமையாளர் இறந்து 25 வருடங்கள் வரைதான், அது செல்லும். எனவே பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பிறகு எங்கே இருக்கிறது, உரிமை?” என்று நீதிபதி கேட்டார்.

தொடர்ந்து தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த இரத்தினகிரி, தம்மையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி செய்திருந்த மனுவை விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்று அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேங்கடபதி கூறினார். இரத்தினகிரி மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமார் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் முறையீடு செய்து, இரத்தினகிரி நீதிமன்றத்துக்கு இப்போது வந்திருக்கிறார். மனுவை நீதிபதிகள் ஏற்று, தாக்கீது அனுப்ப உத்தர விட்டனர். மீண்டும். பிப். 23 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது