தஞ்சையில் வீரமணி நடத்தும் பொறியியல் கல்லூரிக்கு நிகர்நிலைத் தகுதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கி.வீரமணி, புதிய சொல்லாடல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அவர் நடத்தும் பல்கலைக்கழகம், மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் பல்கலைக்கழகமாம். எனவே, மக்களே, உச்சநீதிமன்றத்தில் வழக்காட வழக்கு நிதி தாருங்கள் என்று வழக்கு நிதி திரட்டத் தொடங்கியுள்ளார்.

நிகர்நிலை பல்கலைக்கழகம் நடத்தும் “கோடீசுவரர்கள்”, கூட்டாக நீதிமன்றத்தில் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களைப் பிடித்து வழக்கை நடத்துகிறார்கள். வீரமணி ஒன்றும் தனியாக வழக்கை நடத்தப் போவது இல்லை. ஆனாலும் ‘மக்கள் பல்கலைக் கழகம்’என்று கூறிக் கொண்டு, வழக்கு நிதி திரட்டுகிறார்கள்.

“பெரியாரின் ‘குடிஅரசு’ம் அதில் அடங்கி யுள்ள எழுத்துகளும்,மக்களுக்கானவை. அதை வீரமணி அறக்கட்டளைக்குள் முடக்க வேண்டாம்” என்று நாம் - வீரமணி ‘குடி அரசு’க்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்த போது எழுதினோம்.

வீரமணி பார்வையில் மக்களுக்கான பெரியாரின் ‘குடிஅரசு’எழுத்துகள் மக்களிடம் போய்ச் சேரக் கூடாது என்பார். அதை வெளியிடும் உரிமை அறக் கட்டளைக்கே உண்டு என்பார். மக்கள் பணத்தைச் சுரண்டி, வணிக ரீதியில் நடக்கும் இடஒதுக்கீடே இல்லாத நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்தால், அந்த வணிக நிறுவனத்தை மக்கள் பல்கலைக்கழகம் என்பார்.

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ பெரியார் எழுத்து-பேச்சுகளை வெளியிட் டால், 15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று வழக்கு தொடருவார். அவர் நடத்தும் வர்த்தகப் பல்கலைக் கழகத்துக்கு மட்டும் மக்களிடம் வழக்கு நிதி திரட்டுவார்.

அம்பானியின் ரிலையன்ஸ், வால்மார்ட் நிறு வனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டால், “மக்களே,உங்களுக்காக தொழில் நடத்த நாங்கள் முன்வரும்போது, அரசு தடுக்கிறது. நாங்கள் மக்களுக்காக, மக்களால் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து, வழக்கு தொடரப் போகிறோம். எனவே வழக்கு நிதி தாருங்கள்” என்று அறிவித்தால் எப்படி இருக்கும்? அதற்கும் வீரமணி திரட்டும் வழக்கு நிதிக்கும் வேறுபாடு ஏதாவது உண்டா?