சிவராத்திரி அதுவும் மகாசிவராத்திரி ஆன்மீகம் வணிக மயமாக ஆக்கப்பட்ட பின் சிறு வியாபாரி முதல் பெரிய முதலாளி வரை எல்லா சடங்குகள், மத விழாக்கள் அனைத்தையும் மக்கள் மீது திணிக்கிறார்கள். ஊடகங்களும் அதில் உள்ள உட்பொருள் தெரிந்தும் விழாக்களையும் பண்டிகைகளையும், மதச் சடங்குகளையும் ஊதிப் பெரிதாக்குகின்றன. அதுபோல்தான் இச் சிவராத்திரியும், வீடுகளிலும்,கோவில்களிலும் மிகவும் சாதாரண முறையில் நடந்து வந்த நிலைமாறி, தற்போது சென்னையில் பல இடங்களில் பொது நிகழ்ச்சியாக சாலைகளிலும் மைதானங்களிலும் நடத்தப்படுகிறது. சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான சிவன் பூங்கா (ஜீவா நினைவாக பெயரிடப்பட்ட இந்தப் பூங்கா, திட்டமிட்டு, ‘சிவன்’ பூங்காவாக பெயர் திரிக்கப்பட்டுள்ளது)வில் சிவராத்திரி விடிய விடிய நடைபெறுவதாக தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

செய்தி அறிந்ததும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அப்பூங்காவிற்கு எதிரில் உள்ள காவல் நிலையத்தில் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்ததோடு,அரசுக்கு சொந்தமான இடத்தில் மத வழிபாடு செய்யக் கூடாது என அரசின் சுற்றறிக்கைகளை கையளித்தனர். காவல்துறை முதலில் தயங்கினாலும் பின்னர் தோழர்களின் உறுதியினால் தொடர்புடைய ஆட்களை அழைத்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் கழகத் தோழர்கள் முன் பூங்காவில் இருந்த ஒலி பெருக்கி, பந்தல், முகப்பு,வாழை மரம், தோரணம் ஆகியவற்றை இரவோடு இரவாக அகற்றி சிவராத்திரியை நடத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். அதையடுத்து ஆர்ப்பாட்ட அறிவிப்பை கழகத் தோழர்கள் திரும்பப் பெற்றனர். மேலும் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சிவன் சிலையையும் (இந்த சிலை ஒரு சினிமா படப்பிடிப்புக்காக தயாரிப்பாளர் நாகிரெட்டி அவர்களால் பூங்காவில் வைக்கப்பட்டதாகும்) அகற்ற மேல் நடவடிக்கையை மாநகராட்சி மூலம் எடுத்து வருகின்றனர்.

வழக்கறிஞர் சு.குமாரதேவன், தபசி. குமரன், அன்பு தனசேகர், சைதை தியாகு, சிவா, ராசு, இராமாவரம் க. சுப்பிரமணியம், குலசேகரன், துரைராசு, தஞ்சைத் தமிழன் ஆகியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, சிவராத்திரி கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தினர்.