ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தி.மு.க. ஆட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துவிட்டது. 1991 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட நளினி, 19 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார். ஆயுள் தண்டனை பெற்றவர்கள், 10 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு, விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. அதையும் 7ஆண்டுகளாக தளர்த்தி, அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க. ஆட்சி, பலரை விடுதலை செய்தது. அதில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உட்பட்ட வழக்குகளில் தொடர்புடையோருக்கு விடுதலை கிடையாது என்று அறிவித்தது. நளினியின் விடுதலையில் தி.மு.க. ஆட்சி, சோனியாவை மகிழ்விக்கும் என்ற ஒரே அரசியல் பார்வையோடு செயல்பட்டு வருகிறது.

சிறை ஆலோசனைக் குழுவை முறையாகக் கூட்டி ஆலோசிக்காமலே, நளினியின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது தி.மு.க. ஆட்சி. நளினியின் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, நளினி சார்பில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் முறையாக சிறை ஆலோசனைக் குழுவைக் கூட்டவேண்டும் என்று உத்தரவிட்டது. அது மட்டுமல்ல, இது தொடர்பாக, மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று, தமிழக அரசு முன் வைத்த காரணத்தையும் வழக்கு கேள்விக்கு உட்படுத்தியது.

இப்போது நன்னடத்தை அதிகாரி நளினியை விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். உளவியல் நிபுணரும் நளினியின் விடுதலைக்கே பரிந்துரைத்துள்ளார். ஆனால், உயர்நீதிமன்ற ஆலோசனைப்படி மீண்டும் அரசு அமைத்த சிறை ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரையை ஏற்று விடுதலை செய்ய முடியாது என்று, தி.மு.க. ஆட்சி அறிவித்துள்ளது. நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட காலத்தில், அரசு தரப்பு வழக்கறிஞர் 19 ஆண்டுகளுக்கு முன் நளினிக்கு தண்டனை தரப்பட வேண்டும் என்று வாதிட்ட அதே வாதங்களை இவ்வளவு ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகும் தி.மு.க. அரசு மீண்டும் அடுக்கிக் காட்டுகிறது. இதில் புதிதாக ஒரு வாதத்தையும் தமிழக அரசு இணைத்துக் கொண்டுள்ளது.

“நளினி விடுதலை செய்யப்பட்டால், அவர் இராயப்பேட்டையில் உள்ள தனது தாயாருடன் வசிப்பார். இராயப்பேட்டையின் காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் பல முக்கியப் புள்ளிகள் வாழ்கிறார்கள். எனவே, நளினி இராயப்பேட்டை பகுதியில் தனது தாயாருடன் இருப்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று இராயப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் கூறுவதால், நளினியை விடுதலை செய்வதற்கு இல்லை” என்று அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நளினியின் விடுதலைக்கு மறுப்பாக அவர் இராயப்பேட்டையில் தாயாருடன் குடியிருக்கப்போவதை ஒரு முக்கிய காரணமாக தி.மு.க. ஆட்சி முன்வைத்திருப்பதை ஒரு நல்ல நகைச்சுவையாகவே கருத வேண்டியிருக்கிறது. நளினியின் தாயார் குடியிருப்பது கூட ஒரு வாடகை வீடுதான். வேறு பகுதியில் வீட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்தால்கூட, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். ஆனால், முடிவை உறுதி செய்துக் கொண்டு, காரணத்தைத் தேடி அலைவதால் தான், இத்தகைய நகைப்புக்கிடமான வாதங்களை தி.மு.க. ஆட்சி முன் வைக்க நேரிடுகிறது. தி.மு.க. ஆட்சியின் முடிவை ‘இந்து’ போன்ற பார்ப்பன நாளேடுகள் வரவேற்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலையச் செய்தி தொடர்பாளர் மனிஷ்திவாரி, ‘தமிழக அரசு எடுத்த முடிவு சரியானது’ என்று பாராட்டிவிட்டார். “தேசபக்தர்” ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனும் பாராட்டிவிட்டார். நளினியை விடுதலை செய்யவே கூடாது என்று வழக்கில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்ட பார்ப்பனர் சுப்ரமணியசாமியின் கோரிக்கையும் வெற்றி பெற்றுவிட்டது. அவரது வழக்கறிஞர் இந்த வழக்கில் தமது கட்சிக்காரரின் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

சோனியாவின் மகள் பிரியங்கா, நளினியை வேலூர் சிறையில் ரகசியமாக சந்தித்துப் பேசியபோது, நளினியின் மீது சோனியாவின் குடும்பம் பரிவு காட்டுவதாக ஒரு கற்பனைக் கருத்து பரப்பப்பட்டது. இந்த ரகசிய சந்திப்பை தகவல் அறியும் சட்டத்தின் வழியாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், நளினியின் வழக்கறிஞருமான எஸ். துரைசாமி தான். பிரியங்கா, நளினியை சந்தித்து டெல்லி திரும்பிய பிறகு, ஈழப் போராட்டத்தை முற்றிலும் ஒடுக்கவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஒழித்திடவும், புதிய திட்டங்களை இந்தியப் பார்ப்பன ஆட்சி தீட்டியது. இலங்கை இராணுவத்துக்கு பல்வேறு மட்டங்களில் இராணுவ பொருளாதார உதவிகளை வாரி வழங்கினார்கள். 3லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, மக்களின் எதிர்ப்பு உணர்வுகளுக்கு முதலில் செவி சாய்ப்பது போல் நடித்து, பிறகு, உணர்வலைகளை திசை திருப்பி, மாபெரும் இனப்படுகொலையை முற்றாக மறைப்பதற்கு துணை நின்ற துரோகத்தை செய்து முடித்தது. இவ்வளவுக்கும் பிறகு, ராஜீவ் மரணத்தை ‘தேசத்துக்கே எதிரானது’ என்று தி.மு.க. ஆட்சி கூறுவதுதான், விசித்திரம்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு காரணமாக இருந்தது போபால் விஷவாயுக் கசிவு. அந்தக் கொடூரமான படுகொலைக்குக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவன் ஆண்டர்சன், 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் குற்றக்கூண்டில்கூட நிறுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் கிடைக்கவில்லை.

இந்திராகாந்தி இறந்தவுடன், புதுடில்லியில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர் கொத்து கொத்தாக படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன.  குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ்காரர்கள், சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ‘அண்ணன் - தம்பி’ அதிகார மோதலில் ‘தினகரன்’ நாளிதழ் ஊழியர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் விடுதலையாகிவிட்டனர். அரசு மேல் முறையீடுகூட செய்யத் தயாராக இல்லை.

தி.மு.க.வின் அமைச்சரும், மாவட்ட செயலாளராக இருந்தவருமான தா. கிருஷ்ணன் படுகொலையில் சொந்தக் கட்சிக்காரர்களே கைதுசெய்யப்பட்டு வழக்கு நடந்தது. வழக்கில் குற்றம் சட்டப் பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டு, விடுதலை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. இறந்தது சொந்தக்கட்சிக்காரராயிற்றே என்ற வருத்தம்கூட இல்லை. அரசும் மேல்முறையீடு செய்யவில்லை.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி பெண் உறுப்பினர் லீலாவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற தி.மு.க.வினர், அண்ணா நூற்றாண்டின் ‘விசேடமான’  7 ஆண்டு தண்டனைக் குறைப்பு ஆணையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள்.

லோக குரு என்று கூறிக்கொண்டு பார்ப்பனர் களின் தலைவராக வலம் வந்த காஞ்சி சங்கராச் சாரி, வரதராசப் பெருமாள் கோயிலுக்குள்ளேயே சங்கரராமன் என்ற அர்ச்சகரைக் கொலை செய்த வழக்கில், அரசு சாட்சிகள் எல்லாம் சங்கராச்சாரி பக்கம் சாய்ந்துவருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக முள்ளி வாய்க்கால் பகுதியில்,ஒரே நாளில் 30000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை நின்றது மன்மோகன் சிங் ஆட்சி. குற்றங்களை மூடி மறைத்தது தி.மு.க. ஆட்சி. இப்போது போர்க் குற்றவாளியாக ராஜபக்சே குற்றக்கூண்டில் நிற்கும் நேரம் வந்துவிட்டது. உலக நாடுகள் கண்டனக் குரல் எழுப்புகின்றன. ராஜபக்சேயைக் காப்பாற்ற அய்.நா.வில் அனைத்து “பகீரதப் பிரயத்தனங்களிலும்” இந்தியா ஈடுபட்டது.  இவை பற்றியெல்லாம் ஒரு வார்த்தைக் கண்டனம்கூட மன்மோகன்சிங்கிடமோ, சோனியாவிடமோ தெரிவிக்காத தி.மு.க. ஆட்சி, நளினி விடுதலையில், மத்திய அரசின் கருத்தே தங்களுடைய கருத்து என வெளிப்படையாக அறிவிக்கிறது. ராஜீவ் உத்தரவுப்படி,இந்திய ராணுவம், இலங்கைக்குச் சென்று பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்துத் திரும்பிய போது எமது தமிழ்ச் சகோதரிகளை கற்பழித்து, தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய இராணுவத்தை நான் வரவேற்கப் போக மாட்டேன் என்று சட்டசபை யில் அப்போது அறிவித்தவர், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிதான்.

அதைவிட மோசமான இனப்படுகொலை இப்போது நடந்து முடிந்தாலும், கூட்டணியும், பதவி அரசியலும் அவரது வாயை அடைக்கிறது. இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவு ஒரு கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்குகிறது. அந்த உரிமையைப் பயன்படுத்த மாட்டோம் என்று ‘மாநில சுயாட்சி’ பேசும் தி.மு.க. மறுக்கிறது.  என்னே அவலம்!

இந்த வாதத்தை நளினி தரப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் எடுத்து வைத்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் தந்த பதில் என்ன?

பி.எஸ். இராமன் (அரசு தரப்பு வழக்கறிஞர்), அரசியலமைப்பு சட்டம்161வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால்,நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அவரது வழக்கு அதற்கான தகுதியைப் பெற்றுள்ளதா? என்பதை முடிவு செய்வதற்கு நாங்களே எங்களுக்கு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண் டோம். அதன்படி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல், செய்யப்பட வேண்டாம் என்று எங்களுக்கு நாங்களே சுயகட்டுப்பாடு விதித்துக் கொண்டோம்.

நீதிபதி தன்மராவ் : அப்படி சுய கட்டுப் பாடு விதிப்பதற்கு முடியுமா?

பி.எஸ். இராமன் : வழக்கின் தகுதியைக் கருதி அவ்வாறு செய்ய முடியும்.”

(‘தினத்தந்தி’ நாளேடு 30.3.2010)

இதன் மூலம் ‘சுயகட்டுப்பாடு’ என்பதற்கு அரசியல் தனது அகராதியில் “சந்தர்ப்பவாதம் - பதவி அரசியல்” என்ற புதிய பொருள்களை தி.மு.க. அரசு வழங்கியிருக்கிறது.