மண்டல் பரிந்துரைக்கு பட்டை நாமம்!

மண்டல் பரிந்துரையின் கீழ் மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு 17 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி, டி பிரிவுகளில் நியமிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 6.87 சதவீதம் மட்டும் தான். இந்த அதிர்ச்சியான உண்மை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், இப்போது அம்பலமாகியுள்ளது. 20 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சமூக நீதிப் போராளியும், பொறியியல் விஞ்ஞானியும், சென்னை அய்.அய்.டி. பார்ப்பன நிறுவனத்துக்கு எதிராக போராடி வருபவருமான சென்னை பேராசிரியர் ஈ. முரளிதரன், மத்திய அரசின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விளக்கம் கேட்டு விண்ணப்பித்தார்.

ஏ, பி, சி, டி பிரிவுகளுக்கான மத்திய அரசு வேலைகளில், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை, விகிதாசாரம் பற்றிய தகவல்களை தெரிவிக்கக் கோரி இருந்தார். இதற்கு மத்திய வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இதன்படி, 2008 ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, மத்திய அரசில், மேற்குறிப்பிட்ட ஏ, பி, சி, டி பிரிவுகளில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையே 1,93,228 மட்டும் தான். இவற்றில் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சார்ந்த 2430 துப்புறவுத் தொழிலாளிகளும் அடங்குவர். சிவில் துறை வேலைகளிலும், அய்.ஏ.எஸ். போன்ற அதிகாரப் பதவிகளிலும், பிற்படுத்தப்பட்டோருக்கான நேரடி நியமனங்கள், 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் அமுலாகி வருகிறது. இதில் 5031 பேர் மட்டுமே ‘ஏ’ பிரிவு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரிவில் மொத்தம் நியமிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,881. இதில் பிற்படுத்தப்பட்டோர் 5.5 சதவீதம் மட்டுமே.

அதேபோல் ‘பி’ பிரிவில் 1,37,272 பிற்படுத்தப் பட்டோர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இது 3.9 சதவீதம் மட்டுமே! ‘சி’ பிரிவில் 18,10,141 பேர் நியமிக்கப்பட்டனர். இது 8.1 சதவீதம் ‘டி’ பிரிவில், துப்புறவு தொழிலாளர் நீங்கலாக நியமிக்கப்பட்டவர்கள் 6,96,891. அதாவது 5 சதவீதம் மட்டும்! துப்புறவு தொழிலாளர்களுக்கான காலி இடங்களில் 3.2 சதவீத பிற்படுத்தப்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்புறவு தொழிலில் பிற்படுத்தப்பட்டோரைவிட, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரே பெருமளவில் ஈடுபடுகின்றனர். 75,901 துப்புறவுத் தொழிலாளர் பணிகளில் 51.4 சதவீதம் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களும், 6 சதவீதம் பழங்குடியினப் பிரிவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு நிலவரப்படி மத்திய அரசுப் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரத்தை பேராசிரியர் முரளிதரன் கேட்டிருந்தார். மொத்த பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை ஒருமுகப்படுத்தி, தகவல்களை சேகரிக்கும் நிர்வாக அமைப்பு முறை எதுவும் இல்லை என்று, மத்திய அமைச்சகம், இதற்கு பதில் அளித்துள்ளது. 2008 ஜனவரி முதல் தேதி வரை மட்டுமே ஒவ்வொரு பிரிவு வாரியாக விவரங்கள் உள்ளன என்றும், 2009 ஆம் ஆண்டு நிலவரம் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது தந்துள்ள தகவல்கள்கூட மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கானது அல்ல. மத்திய அரசின் கீழ் உள்ள 6 துறைகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நியமனம் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால் இதில் சேர்க்கப்படவில்லை என்று அமைச்சகம் கூறிவிட்டது. அந்த 6 அமைச்சகத் துறைகளின் பெயர்களை வெளியிடவும் மறுத்து விட்டது.

பட்டியல் இனப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய 22 சதவீத இடங்களில் 17.45 சதவீதமும் (4,90,773 வேலைகள்) பழங்குடியினருக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 6.83 சதவீதமும் நிரப்பப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்துவிட்டதால், நிர்வாகத் திறன் சீர்கெட்டு விட்டதாகவும் பார்ப்பனர் முன்னேறிய சாதியினரின் வேலை வாய்ப்புகள், பறிக்கப்பட்டு விட்டதாகவும், பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் எழுதியும் பேசியும் வருகின்றன. இந்த நிலையில் உண்மை நிலவரத்தை இந்தப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்திய அரசு இன்னும் பார்ப்பன அதிகாரப் பிடியில் நீடிக்கிறது. அதன் காரணமாகவே, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் நிரப்பப்படாமல், அலட்சியப்படுத்தப்படுகின்றன. அதிலும், 6 மத்திய அரசு துறைகள், பிற்படுத்தப் பட்டோர் நியமனம் பற்றிய தகவல்களையே தர மறுக்கின்றன.

அப்படியானால், அங்கு இட ஒதுக்கீடுகளே செய்யாத நிலைதான் நீடிக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. உண்மை வெளியே தெரியக் கூடாது என்பதால், மூடி மறைக்கின்றன. 

Pin It