“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே, சுத்தி வந்து மொணமொணன்னு சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்று சித்தர் சிவவாக்கியர் பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல், இந்தக் கருத்துக்களை படக் காட்சிகள் வாயிலாகவும் எடுத்துச் சொல்வது தவறு அல்ல; இந்தப் படத்திலே இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துக்கள், சீர்திருத்த கருத்துக்கள் நிறைய வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன்; பயப்படக் கூடாது.”
- நடிகை குஷ்பு சுந்தரின் தயாரிப்பான ‘நகரம்’ திரைப்பட விழாவில், பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்படி பகுத்தறிவு பேசியிருக்கிறார். மகிழ்ச்சி; வரவேற்க வேண்டிய கருத்துதான்.
ஆனால், தமிழக அரசுத் துறை, எங்கே போய்க் கொண்டிருக்கிறது? அரசு வளாகத்துக்குள் கோயில்கள் கட்டப்படுகின்றன. தலைமைச் செயலகம் உள்பட அரசு கட்டிடங்கள் கால்கோள் விழாவுக்கு பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து, ‘பூமி பூஜை’கள் நடத்தப்படுகின்றன. காவல் நிலையங்களில் கடாவெட்டி, ‘பரிகாரம்’ செய்யப்படுகிறது.
‘வாஸ்து மீன்’களை வாங்கி வைத்திருக்கும் காவல் நிலையங்கள் உண்டு. அதை காவல்துறை அதிகாரிகளே விழா நடத்தி தொடங்கி வைத்த செய்திகளும் வந்தன.
அண்மையில் வந்த ஒரு செய்தியை உதாரணத்துக்காக மட்டும் சுட்டிக் காட்டுகிறோம்.
“தியாக துருவம் போலீஸ் ஸ்டேஷனில் வாஸ்து முறைப்படி விநாயகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைவலி ஏற்படுத்தும் சம்பவங்களும், மர்மச் சாவுகளும் நடந்ததால், கலக்கமடைந்த நிலையில் போலீசார் இருந்தனர். வாஸ்து சாஸ்திரப்படி தெரு முடியும் இடத்தில், அதற்கு எதிரில் ஸ்டேஷன் அமைந்துள்ளதால், அதற்கு பரிகாரமாக விநாயகன் சிலையை ஸ்டேஷன் எதிரில் பிரதிஷடை செய்தால் பிரச்னை தீரும் என்று சிலர் ஆலோசனை அளித்துள்ளனர். அதன்படி போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் மீது விநாயகர் சிலை சில தினங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது” - ‘தினமலர்’ 31.8.2010 (கோயில் படத்தையும் அந்த ஏடு வெளியிட்டுள்ளது)
அரசுத் துறைகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ‘இந்து’ மதமாக்கப்பட்டு வருவதை தமிழக முதல்வர், தடுத்து நிறுத்தாதது ஏன்? பகுத்தறிவு ‘உபதேசம்’ மேடைப் பேச்சுக்கு மட்டும் தானா?