சுயமரியாதை இயக்கத்தின் முதல் ஆங்கில வார ஏடான ‘ரிவோல்ட்’ 1928 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் புரட்சி நாளான நவம்பர் 7 இல் தொடங்கி, 1930 வரை வெளிவந்தது. அப்போது தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் 7 சதவீதம் மட்டுமே.
 
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை தமிழ்நாட்டுக்கு வெளியே கொண்டு செல்வதற்கும், பார்ப்பன சுயநல சக்திகள் சுய மரியாதை இயக்கத்துக்கு எதிராக நடத்திய பிரச்சாரங்களை எதிர் கொள்ளக்கூடிய ஆங்கில அறிவு வட்டாரம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடும் பெரியார் ஆங்கில ஏட்டைத் தொடங்கும் துணிவான எதிர்நீச்சல் முயற்சியில் இறங்கினார்.
 
தேசிய - சர்வதேசியப் பிரச்சினைகளை ‘ரிவோல்ட்’ வார ஏடு அலசியது. ஆப்கானின் சீர்திருத்தவாதி அமீர் அமானுல்லா மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தீண்டாமை ஒழிப்பில் காங்கிரசின் இரட்டைவேடம், காதரின் மேயோ என்ற அம்மையார், பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி எழுதிய ‘மதர் இந்தியா’ நூல் தொடர்பாக காந்தி தெரிவித்த எதிர்ப்புகள், அதற்கு சுயமரியாதை இயக்கம் தந்த பதிலடி, சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவு போராட்டங்கள், டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எழுந்த எதிர்ப்புக்கு பதிலடி, பால்ய விவாக தடுப்பு மசோதா வந்தபோது தேசியவாதிகள் காட்டிய எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளை கூர்மையான வாதங்களோடு அலசும் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. குத்தூசி குருசாமியின் ஏராளமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘இராமாயணம்’ பற்றி குத்தூசி குருசாமி எழுதிய ஆங்கிலத் தொடர் வெளிவந்த இதழ்கள் காந்தியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றைப் படித்த பிறகுதான் காந்தி - நான் கூறும் இராமன் இராமாயண இராமன் அல்ல என்று தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.
 
‘ரிவோர்ட்’ மொத்தம் 55 இதழ்கள் வெளிவந்துள்ளன. சில இதழ்கள் படிக்க முடியாத நிலையில் செல்லரித்தவையாகவே கிடைத்தன. 55 இதழ்களில் உள்ள முக்கிய கட்டுரைகளைத் தொகுத்து, மெய்ப்புத் திருத்தி, உயர்ந்த தரத்தில் நூலாக உருவம் தரும் பணி வரை கடும் உழைப்பை ஆர்வத்துடன் நல்கி, பெரியாரியலுக்கு தங்களின் உன்னதமான பங்களிப்பை தோழர்கள் வ. கீதா, எஸ்.வி. இராஜதுரை ஆகியோர் இணைந்து வழங்கியிருக்கிறார்கள். 622 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில், 4 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.300. ‘குடிஅரசு’ முன் பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு இந்நூலும் வ.கீதா - எஸ்.வி. இராஜதுரை எழுதிய “பெரியார் சுயமரியாதை சமதர்மம்” எனும் 988பக்கங்களைக் கொண்ட ரூ.600 விலையுள்ள நூலும் அன்பளிப்பபாக வழங்கப்படுகின்றன.
 
குறிப்பு: ‘ரிவோல்ட்’ தொகுப்பில் பக்.204 இல் “A Religious Rally” எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் நான்காவது வரியில் “Rationalist Movements” என்று இருப்பதற்கு பதிலாக “Nationalist Movements” என்ற ஒரே ஒரு அச்சுப்பிழை மட்டும் வந்துவிட்டது. தவறுக்கு வருந்தி, திருத்திப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

Pin It