பெரியாரின் சொத்துகளை அவசர அவசரமாக விற்பனை செய்யும் முயற்சிகளில் தி.க. தலைவர் கி.வீரமணி இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இது பற்றி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (ஜூலை 22) இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியிலிருந்து:
 
“குடிஅரசு இதழில் வெளியான பெரியாரின் கருத்துரைகளை 28தொகுதிகள்  கொண்ட தொகுப்பாக வெளியிட நாங்கள் முயற்சி எடுத்துக் கொண்டோம். அதற்கு எதிராக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கடந்த ஆகஸ்ட் 2008 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை பெற்றார். அது தொடர்பாக நடந்த மேல்முறையீட்டின்போது, ‘பெரியாரின் அறிவுசார் சொத்துரிமை தங்களுக்குச் சொந்தமானது!’ என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கவில்லை.
 
‘உங்களிடம் உரிமையிருப்பதற்கு எந்த ஆவணம் இருக்கிறது? அந்த ஆவணத்தைக் காட்டினால் மட்டுமே நீங்கள் சொல்வதை நீதிமன்றம் ஏற்கும். அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் தாமாகவே அது மக்கள் சொத்தாக மாறி விடுகிறது’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இந்தத் தீர்ப்புதான் பெரியாரின் சொத்துகள் தொடர்பாக ஒரு தெளிவை எங்களுக்கு ஏற்படுத்தியது. திராவிடர் கழகத்தில் நீண்ட காலம் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவரும், அதற்காக பல வழக்குகளில் வாதிட்டவருமான வழக்குரைஞர் துரைசாமி, பெரியாரின் எந்தச் சொத்துப் பரிமாற்றமும் அறக்கட்டளைக்கு ஆவணங்கள் வழியாகச் செய்யப்படவேயில்லை என்பதை எங்களிடம் உறுதிப்படுத்தினார். கடந்த ஜூன் 11 ஆம் தேதி சென்னை பிரஸ்கிளப்பில் ‘பெரியார் கருத்துரைகள்’ புத்தக வெளியீட்டின்போது, ‘பெரியாரின் அசையாச் சொத்துகளுக்கான உரிமை யாருக்கு என்பதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவை தாமாகவே மக்கள் சொத்தாக மாறிவிடுகின்றன என்பது தான் தற்போதுள்ள சட்ட பூர்வமான நிலை’ என்று அவர் பேசினார்.
 
பெரியாரின் மறைவு வரையில் தனது சொத்துக்களை யாருக்கும் அவர் எழுதி வைக்கவில்லை. பெரியாரின் பெயரில்தான் அவை இருந்தன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பெரியார் பதிவு செய்தாரே தவிர, தனது சொத்துகளை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்காக அவர் எழுதித் தரவில்லை.
 
எனவே, பெரியாரின் சொத்துகளுக்கு  அந்த அறக்கட்டளை உரிமை கோர முடியாது. சட்டப்படி அதுவும் மக்கள் சொத்தாகத்தான் கருதப்படும். அதனை உடனே அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் போராடுவோம் என்று எங்கள் ‘பெரியார் முழக்கம்’ இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
 
இதுபற்றி அவசர அவசரமாக விவாதித்ததாகக் கூறப்படும் தி.க. தலைமை, பெரியார் பெயரிலிருக்கும் சொத்துகளை விரைவில் விற்றுவிடுவதற்காக ஒரு குழுவை கடந்த 7 ஆம் தேதி ஏற்படுத்தியிருப்பதாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.
 
சென்ற மாதம் சென்னை செனாய் நகரில் ஒரு சொத்தும், கடந்த 9ஆம் தேதி திருவிடைமருதூரில் இரு சொத்துகளும் விற்கப்பட்டுள்ளதாக தி.க. தரப்பிலிருந்தே எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன. மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. இது உண்மையாக இருக்குமேயானால் அதனைத் தடுப்பதற்காக நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம்.
 
பெரியாரின் சொத்துகள் மக்கள் சொத்தாக மாற்றப் பட்டு, அரசின் கண்காணிப்பில் அது நிர்வகிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை நாங்கள் வலியுறுத்தும் விதமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
 
சென்னையிலுள்ள பெரியார் திடல், ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றம்,அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகம், பத்தாயிரம் சதுர அடியிலான ஒரு மஞ்சள் மண்டி, பல வீடுகள், மணியம்மை ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடை என பெரியாருக்குச் சொந்தமான பல சொத்துகள் ஈரோட்டில் உள்ளன.  திருச்சி நகரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பெரியார் மாளிகை, திருச்சி கே.கே. நகர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் கல்வி வளாகம் ஆகியவை உள்ளன. சேலம் ஏற்காட்டில் ஏரிக்கருகே ஒரு வீடு மற்றும் சில கடைகள் பெரியாரின் சொத்துகளாக உள்ளன. தஞ்சையில் பெரியார் இல்லம் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன.
 
இவை மேம்போக்காக எங்களுக்குத் தெரிந்த பெரியாரது சொத்துகள். அவரது சொத்துகளில் நாங்கள் அக்கறை காட்டாத காரணத்தால் அது பற்றிய முழு விவரங்கள் எங்களிடம் இல்லை. அவற்றைத் திரட்டிக் கொண்டுள்ளோம். அவை மக்கள் சொத்து. மக்களுக்குச் சேர வேண்டும் என்பதால் நாங்கள் அவற்றில் கவனம் செலுத்துகிறோம். அந்தச் சொத்துக்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.  அதை வலியுறுத்தி நாங்கள் நீதிமன்றம் செல்லப் போகிறோம்” என்றார் கொளத்தூர் மணி.
 
இது பற்றி தி.க. தரப்பு என்ன சொல்கிறது என்பதை அறிய அதன் தலைவர் கி. வீரமணியைத் தொடர்பு கொள்ள முயன்றோம். நம்மிடம் பேசிய வீரமணியின் உதவியாளர் ‘விடுதலை’ ஸ்ரீதர், “அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகும். இந்த விஷயத்தில் அவர் வந்து தான் கருத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
 
தி.க. பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றனிடம் கேட்ட போது அவர், “பேட்டி எல்லாம் தர முடியாது. தலைவர் ஊரில் இல்லை. அவர் வந்துதான் கருத்துச் சொல்ல வேண்டும்” என்றார். ‘பெரியார் சொத்துகள் குறித்து பெரியார் திராவிடர் கழகம் வழக்குத் தொடுக்க இருக்கிறதாமே?’ என்று நாம் கேட்டபோது, “வழக்கு தொடுத்தால் அது நீதிமன்றத்துக்குத்தான் வரும். அங்கே நாங்கள் பார்த்துக் கொள்வோம்!” என முடித்துக் கொண்டார் அவர்.

Pin It