‘அண்ணா ஒரு அதிசய மனிதர்’ என்றார் பெரியார். அண்ணாவோ பெரியாரை ‘ஒரு சகாப்தம்; ஒரு காலகட்டம்; ஒரு திருப்பம்’ என்றார். பெரியாரின் உறுதியான - சமரசமற்ற கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சில சமசரங்களை மேற்கொண்டார் அண்ணா. அது ஒரு செயல் உத்தி தான். ஆனாலும், பெரியாரின் அடிப்படையான லட்சிய உறுதியில் அண்ணாவுக்கு முழுமையான உடன்பாடு உண்டு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனால்தான் 1967 இல் - ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் கசப்பான உணர்வுகளை மறந்து, பெரியாரை நோக்கி அவரால் பயணிக்க முடிந்தது.

பெரியாரோடு ஒன்றாக செயல்பட்ட காலம், தமது ‘வசந்த காலம்’ என்றார் அண்ணா! அந்த வசந்த காலத்தில் அவர் படைத்த நூல்கள், உருவாக்கிய நாடகங்கள், நிகழ்த்திய மேடைப் பேச்சுக்கள் இப்போது, மிகவும் தேவைப்படுகிற மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய அறிவாயுதங்கள்.

ஆட்சிக்கு வருவதற்காக வெகுமக்களை திருப்திப்படுத்த அண்ணா கொள்கையை முழுமையாக விட்டுக் கொடுக்காது மேற்கொண்ட ‘சமரசங்கள்’ - மெல்ல மெல்ல விரிவடைந்து கொள்கைகள் சுருங்கிப் போய் - சமரசங்கள் அதிகரித்து, இப்போது சமரசங்களே கொள்கைகள் என்ற எல்லைக்கு வந்து நிற்பதை, ஒளிவுமறைவின்றி சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும். அதன் காரணமாகத்தான் அண்ணா தனது ‘வசந்த கால’த்தில் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை எழுதிய நூல்களை படைத்த நாடகங்களை இன்று மக்களிடையே கொண்டு செல்ல மறுக்கிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.

இந்த லட்சியங்களை முன் வைத்தே இளைய தலைமுறையை ஈர்த்தார் அண்ணா. அவைகள் மறைக்கப்பட்டதால் அல்லது மறக்கப்பட்டதால் இன்றைய தமிழகத்தின் இளைய தலைமுறைக்கு வலை வீச, அண்ணாவால் எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்ட ‘தேசியங்களின்’ ‘இளம் வாரிசுகள்’ தமிழகத்தில் கால்பதிக்க வருகிறார்கள். ஒரு காலத்தில் அண்ணாவின் லட்சியத்தால் ஈர்க்கப்பட்ட இளம் தலைமுறை இன்று பல தலைமுறைகளைக் கடந்து, அதிகார அரசியலை வரித்துக் கொண்டு - அதற்காக வாரிசு அரசியலை கைகளில் எடுத்துக் கொண்டு தேசிய அரசியலுக்கு ஆலவட்டம் வீசிக் கொண்டிருக்கும் அவலத்துக்கு வந்து விட்டன.

அண்ணாவின் ‘ஆரிய மாயை’யும், ‘இந்து கண்ட சாம்ராஜ்யமும்’, ‘தீ பரவட்டும்’, ‘நிலையும் நினைப்பு’ம், ‘பணத் தோட்ட’மும், ‘கம்பரசமும்’ காணாமல் போய் விட்டன. ‘5 ரூபாய் நாணயம்’, ‘ஒரு படி அரிசி’ என்ற பாதுகாப்பான அடையாளங்கள் அண்ணாவின் மீது போர்த்தப்படுகின்றன. ‘படி அரிசி’யும், ‘அய்ந்து ரூபாய் நாணயமும்’ அண்ணாவின் உண்மையான அடையாளங்களும் அல்ல. அண்ணாவின் பெயரால் நடந்த ஒரு சில நூற்றாண்டு விழாக்களிலும்கூட அண்ணாவைத் தேட வேண்டியிருக்கிறது. அண்ணா விழாவை நடத்துவோரின் புகழே காது கிழிய பேசப்படுகிறது.

மிகக் குறுகிய காலமே அண்ணா ஆட்சியில் இருந்தார். அக்காலத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட வடிவம்; தமிழ்நாடு என்று பெயர் சூட்டல்; தமிழக பள்ளிகளில் இரு மொழித் திட்டம் என்ற முப்பெரும் சாதனையை செய்து முடித்தார்.

அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் வேண்டாம் என்று முதலமைச்சராக இருந்து அண்ணா பிறப்பித்த ஆணையை - இப்போது கடவுள் படங்களுக்குள் தான் தேட வேண்டிய நிலை.

அண்ணாவின் பெயரைக் கொண்டுள்ள கட்சிகளுக்கு நாம் வைக்கும்வேண்டுகோள் இதுதான். அண்ணாவின் பகுத்தறிவை - பார்ப்பனிய எதிர்ப்பை - தமிழின உணர்வை - குறைந்தது, கட்சித் தோழர்களிடமாவது கொண்டு செல்லக் கூடாதா?

லட்சியங்களால் நிறைந்த அண்ணாவின் வசந்த காலத்தை இளைய சமுதாயத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுமா, மீண்டும். இதுவே அண்ணாவின் நூற்றாண்டில் உண்மையாக அவரது தலைமையிலும், நேர்மையிலும், பண்பிலும் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி.

- விடுதலை இராசேந்திரன்

Pin It