பெரியார் திடலில் இப்போது இரவு பகலாக சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கிறதாம். என்ன வேலை தெரியுமா? தங்களிடம் இல்லாத குடிஅரசுஇதழ்களை தேடத் தொடங்கியிருக்கிறார்களாம். இருக்கிற இதழ்களிலிருந்து பெரியார் எழுத்துக்களை தொகுத்து அச்சேற்றுகிறார்களாம். குடிஅரசு களஞ்சியம்தொகுதிகளாக வெளியிடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

பெரியார் திராவிடர் கழகம் குடிஅரசுபெரியார் எழுத்துப் பேச்சுகளை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் போனவர்கள், இப்போது தாங்களே வெளியிடப் போவதாக காட்டுவதற்கு இவ்வளவு முயற்சிகளும் நடக்கிறதாம். திருச்சி பெரியார் மாளிகையில், 1983 ஆம் ஆண்டில் பெரியார் பற்றாளர்கள் தொகுத்து கி. வீரமணியிடம் தந்த தொகுப்பை தூசி தட்டி வெளியே எடுப்பதற்கு 26 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. மண்டல் பரிந்துரைக்கூட காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலம்தான் அலமாரியில் தூங்கியது.

இது பெரியார் திராவிடர் கழகத்துக்குகிடைத்துள்ள மகத்தான வெற்றி.

பெரியாரியலை பெரியார் திடலிலிருந்து அச்சிட்டு வெளிக் கொணர, ‘பெரியார் திராவிடர் கழகம்என்ற இயக்கத்தின் களச் செயல்பாடுகளும், அதன் குடி அரசுதொகுப்புப் பணியும் தான் காரணமாக அமைந்துள்ளன என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாக இப்போது புரிந்து கொள்ளும்.

26 ஆண்டுகளாக பெரியார் எழுத்து பேச்சுகளை முடக்கிப் போட்டவர்கள் -

பெரியார் திராவிடர் கழக முயற்சியை ஏளனம் பேசியவர்கள் -

நூற்றுக்கணக்கான பக்கங்களில் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டால், எவன் படிப்பான்; அலமாரியில்தான் தூங்கும் என்று எழுதித் தீர்த்தவர்கள் -

பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, “லேசான ஏளனப் புன்னகையோடு புறந்தள்ளுகிறோம்என்று ஏகடியம் பேசியவர்கள் -

இப்போது குடிஅரசு களஞ்சியங்களை சுறுசுறுப்பாக தொகுக்கிறார்களாம்.

நல்லது! தாராளமாக தொகுக்கட்டும்.

எப்போதோ, அவர்கள் மறந்துவிட்ட சுயமரியாதை சுடரொளிபுலவர் இமயவரம்பன் படத்தோடு தொகுப்புகள் வெளிவருகிறதாம். வெளிவரட்டும்; நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான்!

வெளி வரும் தொகுப்புகள் - முழுமையானவையா? திரிக்கப்படாதவையா? என்பதை பெரியார் திராவிடர் கழகத்தின் முழுமையான தொகுப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து விடும் என்பதையும் இப்போதே சொல்லி வைக்கிறோம்!

பெரியார் திராவிடர் கழகம் அவ்வளவு எளிதில் இவர்களை உறங்க விடாது!