விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி. புலிகள் அமைப்பு ஈழத்தில் வலுப்பெறும்வரை, தமிழர்களின் தலைமை வெள்ளாள ஆதிக்க சாதியிடம் இருந்தது. அவர்கள் சாதிஒடுக்குமுறை குறித்து எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை. 

prabakaran_234தமிழர்களின் தனிப்பெரும் சக்தியாக புலிகள் வளர்ந்தபோது, சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை. 

அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது. 

நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத - இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள். 

தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலிஎதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட‌ சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

"... ... இந்தியாவில் எப்படி பார்ப்பனர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்களோ, அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஈழத்தில் ‘இலங்கைத் தமிழர் காங்கிரஸ்’ என்றொரு கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இறுதியாக ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ வரை ஏற்பட்ட தலைமை அனைத்தும் – வெள்ளாளர் தலைமைதான். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. போராளி இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் என எல்லா தலைமையும் வெள்ளாளர் தலைமைதான்.

இதில், விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் மாறுபட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்). அதனாலேயே இவர்கள் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ‘பிரபாகரனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்’ என்று என்னிடமே வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்கள்.

அமிர்தலிங்கம் ஒரு பெரிய தலைவர். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பிரபாகரனை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது’ என்றேன். அப்போது அவருடைய மகன் குறுக்கிட்டு, பிரபாகரனின் சாதியைப் பற்றி மிகவும் மோசமாக ஒரு வார்த்தையை சொல்லித் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமிர்தலிங்கமும் மழுப்பி விட்டார்.

பிறகு இதுகுறித்து நான் விசாரித்தபோதுதான், எனக்கு உண்மைகள் தெரிய வந்தன. சாதி ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆதிக்க சாதியின் பிடி போவதில் அவர்களுக்கு ஒரே கோபம். ஆனால் இன்றைக்கு இதை எல்லாம் தாண்டி பல தரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக பிரபாகரன் மலர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை – சாதிக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லா சாதியைச் சார்ந்த இளைஞர்களும் இதில் உள்ளனர். அதுமட்டுமல்ல இயக்கத்தில் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1.சாதி மறுப்புத் திருமணம். 2.விதவைத் திருமணம். இயக்கத்தில் எல்லாத் திருமணங்களும் அப்படித்தான் நடைபெறுகின்றன. அது வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கருத்து செயல்வடிவம் பெற்று வருகிறது.

விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது..."

ஆனால் அதற்குப் பின் - ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்றோர் உண்மையைத் திரித்து பொய்களைக் கட்டவிழ்த்தபோது -  தமிழ்த் தேசியவாதிகள் போதுமான அளவு எதிர்வினையோ, உண்மையைக் கவனப்படுத்தும் கருத்துக்களையோ வெளிப்படுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் அண்மையில் மீனவர்கள் மாநாடு ஒன்றில் திருமாவளவன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக - பிற்போக்குத் தன்மை கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் சிலர் ‘எப்படி பிரபாகரன் மீது சாதி அடையாளம் பூசலாம்’ என்று முண்டாசு கட்டி கிளம்பிவிட்டார்கள். அதற்கு திருமாவளவன் இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் (20.1.2011) பதில் அளித்துள்ளார். 

"... .... மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் 'தாய்மண்' இதழ்களை அவர் படித்துவிட்டு வந்திருந்தார். 'தாய்மண் இதழ்களைப் படித்துவிட்டு இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?" என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார்.  புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார்.

அப்போது, 'தொடக்கத்தில் என்னை ஒரு கரையாளர் என்ற அளவில்தான் பார்த்தார்கள். என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை' என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.

.....

.....

இந்தத் தகவலைத்தான் கடந்த டிசம்பர் 11ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசினேன். உங்களில் ஒருவர்தான் அண்ணன் பிரபாகரன். அவர் மீனவ சமூகத்தின் கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையை உதறி எறிந்துவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள்' என்று அந்த மேடையில் பேசினேன். அதை இப்போது ஒரு மாதம் கழித்து பிரச்சினை ஆக்குகிறார்கள். ... ... "

புலிகள் மீது சுமத்தப்படும் வெள்ளாளக் கறையை போக்க விரும்புவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருமாவளவனை ஆதரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த ‘இலக்கிய தருமி’கள் விடாமல் புலிகள் மீது சேறு அடித்துக் கொண்டிருப்பார்கள்.

- மினர்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It