இந்த நூற்றாண்டின் முதல் இனவழிப்பு தமிழினத்துக்கு நேரிட்டது. இந்த இனவழிப்புக்கு நீதி பெறுவது மீண்டும் இப்படியோர் அவலம் உலகில் எவ்வினத்துக்கும் நேரிடாமல் தடுப்பதற்கு இன்றியமையாதது. ஆகவே, கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்த்து புதியதோர் உலகு காணும் குறிக்கோள் இன்றைய நிலையில் நீதிக்கான தமிழர் போராட்டத்தில் தங்கி நிற்கிறது.

தமிழினவழிப்பு முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலையோடு முடிந்து விடவில்லை. கட்டமைப்பியல் இனவழிப்பு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தே வருகிறது, இனவழிப்பின் நச்சு விதைகள் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாதம் அதிகாரத்துக்கு வந்த நாள் முதலே தூவப்பட்டு விட்டன. குடியுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு, மொழியுரிமைப் பறிப்பு, கல்வியுரிமைப் பறிப்பு, நூலக எரிப்பு, நிலப் பறிப்பு, இனப் பாகுபாடு, இன ஒடுக்குமுறை, இனவதை, அரச பயங்கரவாதம் என்று பலவாறான நிலைகளிலும் பலவாறான கட்டங்களிலும் முளைவிட்டு கிளைவிட்டு வளர்ந்து முள்ளிவாய்க்காலில் முற்றி வெடித்ததுதான் முள்ளிவாய்க்கால் அவலம்.

தமிழினவழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுதல் என்பது இனவழிப்புக் குற்றம், போர்க்குற்றம், மாந்தக் குலத்துக்கு எதிரான குற்றம் ஆகிய பன்னாட்டுலகப் பெருங்குற்றங்கள் புரிந்தோரை நீதியின் முன் நிறுத்தித் தண்டிப்பது மட்டுமல்ல. மீண்டும் இப்படியோர் அவலம் நேரிடாமல் தடுப்பதற்குரிய அரசியல் தீர்வு காண்பதும் ஆகும். இனவழிப்புக்குத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, அரசியல் தீர்வுக்குப் பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கைகளைத் தமிழினம் ஒரே குரலில் எழுப்பி வருகிறது.

தமிழீழத் தேசத்தின் வாழ்வு வரலாற்றுக் காரணங்களால் இரண்டாகக் கிளை பிரிந்து நிற்கிறது. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்காக அமைந்துள்ள தாயகம், பதிற்றுக்கணக்கான நாடுகளில் படர்ந்து விரிந்துள்ள புலம்பெயர் தமிழுலகம் -- இந்த இரண்டும் சேர்ந்ததே இன்றைய தமிழீழத் தேசம் என்னும் அரசியல் குமுகம். தாயகத்தில் அடக்குண்டு ஒடுக்குண்டு வாழும் மக்களின் அயராத போராட்டத்துக்குரிய வெளியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பன்னாட்டரங்கில் இயங்கிடும் புலம்பெயர் தமிழர்க்குண்டு. இந்த இரண்டோடும் மூன்றாம் முகன்மைக் களமாகத் தாய்த் தமிழ்நாடும் இணைகிறது.

ஒன்றரை இலட்சம் உயிர்களை அழித்துப் போர் வெற்றி கண்ட இராசபட்சேக்கள் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தது ஒன்றுமில்லை. தமிழீழக் கனவை நந்திக்கடலில் மூழ்கடித்து விட்டதாக அவர்கள் குடித்த மனப்பாலும் திரிந்து விட்டது. தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவோ தடுக்கவோ முடியாமல் சிங்கள அரசு தோற்று விட்டது. இரண்டாவதாக, தமிழ் மக்கள் ஏற்கும் படியான அரசியல் தீர்வு எதையும் அதனால் முன்வைக்கக் கூட முடியவில்லை.

2009 மே மாதத்தில் ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் வல்லாட்சிய ஆற்றல்களின் பாராட்டும் வாழ்த்தும் பெற்ற சிங்கள அரசு இந்தப் பதினோராண்டுகளில் அடிமேல் அடி வாங்கி ஐநா அரங்கை விட்டே ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று ஐநா அறிக்கைகளும் இந்த அறிக்கைகளுக்காகத் திரட்டப்பட்ட சான்றியங்களும் சிறிலங்காவின் வயிற்றில் கட்டிய குண்டுகளே போலும்!

தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவையாக நம்முன் எழுந்து நிற்கிறது. தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் தமிழீழத் தேசம் இந்த இலக்கு நோக்கிய இடர்மிகு நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நாமனைவரும் அறிவுப் படைகலன் ஏந்தி நிற்கும் களப் போராளிகள் என்ற உணர்வோடு இயங்க வேண்டும்.

ஆறு என்றால் வழி, வரலாறு என்றால் வந்த வழி! வந்த வழி தெரியாதவனுக்குப் போகும் வழி புலப்படாது. நம் வரலாற்றின் சாறம் என்ன? ஒடுக்குமுறை தொடங்கிய போதே அதற்கெதிரான உரிமைப் போராட்டமும் தொடங்கி விட்டது. சற்றொப்ப கால் நூற்றாண்டுக் காலம் தமிழீழம் அற வலிமையோடு அமைதிவழியில் போராடியது. தந்தை செல்வா அடுத்தடுத்து சிங்களத் தலைவர்களோடு ஒப்பந்தங்களில் ஒப்பமிட்டார். ஒப்பமிட்ட மை உலருமுன்பே ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன.

சிங்களப் பேரினவாதம் மென்மேலும் கெட்டிப்பட்டுச் சென்றது. சனநாயகத்தின் பெயரால் இனநாயகம் இறுகி, 1972ஆம் ஆண்டு சிறிலங்கக் குடியரசாக அதன் அரசமைப்பாக வடிவெடுத்தது. அதே காலத்தில்தான் தமிழிளைஞர்களின் ஆயுதப் போராட்டச் சிந்தனையும் அமைப்பு வடிவெடுத்தது என்பது தற்செயலன்று. தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவினை மெய்ப்படச் செய்யும் வரலாற்றுப் பொறுப்பு இளந்தோள்களுக்கு மெல்ல மாறத் தொடங்கியது. இதன் ஒரு வெளிப்பாடுதான் புதிய தமிழ்ப் புலிகளின் பிறப்பு.

தமிழீழ மக்களின் உரிமைப் போராட்ட வரலாறு அடைகாத்துப் பொறித்த அனற்குஞ்சுகளாய்ப் புறப்பட்டு விடுதலை வானில் சிறகு விரித்த தம்பி பிரபாகரனும் அவர்தம் தோழர்களும் எப்படி இந்தப் போராட்டத்தைத் தொடுத்தார்கள் என்ற மெய்க்கதையை அழகிய எழுத்தோவியமாக்கித் தருகிறது புலிகளின் எழுச்சி என்ற இந்தக் குறுநூல்.

prabhakaran and kittuசிறிய அளவிலான ஒரு தேசிய இனம் பெரும்படையோடு ஆய்தந்தரித்து நிற்கும் கொடுங்கோல் அரசை எதிர்த்து நிற்கவும் எழுந்து போராடவும் ஏற்ற வடிவமாக கெரில்லா எனப்படும் கரந்தடிப் போர்முறையை வரலாறு இனங்காட்டியது. தமிழீழத்திலும் கருவிப் போராட்டம் இப்படித்தான் தொடங்கிற்று. முதல் தாக்குதலுக்கு முன்பே குப்பி கடித்து மாண்ட பொன். சிவக்குமாரன், அல்பிரட் துரையப்பாவை வீழ்த்திக் கணக்கை தொடங்கிய அந்தச் செம்புள்ளி, அதிலிருந்து தொடங்கி அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல்கள் பட்டியலிடப்படுகின்றன.

புதிய தமிழ்ப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளாகப் புத்தெழுச்சி பெற்ற அதே 1976ஆம் ஆண்டு அதே மே திங்கள்தான் தமிழீழத் தனியரசு கோரும் வட்டுக் கோட்டை தீர்மானமும் இயற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு 1977 பொதுத் தேர்தலில் பெற்ற மக்களாணையைத்தான் தலைவர் பிரபாகரன் புலிகளின் கருவிப் போராட்டத்துக்குரிய வரலாற்று நியாயமாக எடுத்துக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளது வளர்ச்சியின் எதிரொலியாக 1978ஆம் ஆண்டு ஜெயவர்த்தனா அரசு பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்தது. தமிழர் தாயகத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டது. ’ஆமி’யை எதிர்த்து மக்களின் உயிரும் மானமும் காக்கும் திறன் துவக்கேந்திய இளைஞர்களுக்கு மட்டுமே இருந்தது. பகைவனின் இரக்கமில்லாத அரக்கத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் வல்லமை தமிழீழ விடுதலைப் புலிகளையும் தம்பி பிரபாகரனின் தலைமையையும் உறுதிபட நிறுவியது, தமிழ்நாட்டின் வாக்கு அரசியல் அண்ணனைத் தலைவராக்கியது என்றால், தமிழீழத்தின் துவக்கு அரசியல் தம்பியைத் தலைவராக்கியது,

ஆய்தக் குழுக்கள் அனைத்திலும் தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் கொள்கையுறுதியாலும் செயல்திறனாலும் முதற்பெரும் படையாக முகிழ்த்ததை இந்தச் சித்திரத்தினூடாக நம்மால் காணமுடிகிறது. விளையும் பயிர் முளையிலே என்பதற்கிணங்க உலகம் வியந்த பெரும் விடுதலைப் படையாகப் புலிகள் மலர்ந்ததன் அடிப்படையை அப்போதே நம்மால் காண முடிகிறது.

1982 நவம்பர் 27ஆம் நாள் வீரச் சாவினைத் தழுவிய லெப்டினண்ட் சங்கர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீர்ர். இன்றளவும் அதுவே தமிழுலகம் கொண்டாடும் மாவீர்ர் நாள்.

பழைய அரசியல் தலைமை அடியோடு மதிப்பிழந்து போராளிகளின் காலம் தொடங்கி விட்டதன் அடையாளமாக 1983 மே உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அமைந்தது, வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போதே சிங்கள அரசப்படையினர் மீது புலிப்படையின் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.

அடுத்தடுத்த ஆய்தத் தாக்குதல்கள் எனும் நிகழ்ச்சிப் போக்கின் கொடுமுடியாகத்தான் 1983 ஜூலை 23ஆம் நாள் திருநெல்வேலி வழிமறிப்புத் தாக்குதல் இடம்பெற்றது. பதின்மூன்று சிங்களப் படையினர் உயிரிழப்பில் முடிந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் புலிகள் தரப்பில் தலைமையேற்றுக் களமாடிய லெப்டினண்ட் செல்லக்கிளி வீரச் சாவடைந்தார்.

திருநெல்வேலித் தாக்குதலில் பங்கேற்று வீர வரலாறு படைத்த புலிப் படையணியில் தளபதி கிட்டுவும் இருந்தார். அவரே அது குறித்துப் படைத்த எழுத்தோவியம் இச்சிறுநூலில் முத்தாய்ப்பாக இடம்பெறுவது சிறப்பு. தாக்குதல் காணொலி ஏதும் இல்லை என்ற குறையை நேர் செய்வது போல் இந்த எழுத்தோவியம் அமைந்துள்ளது. அன்று தம்பியாகவே அறியப்பட்டிருந்த தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஒவ்வொருவரு புலிவீரரும் ஆற்றிய பங்கினையும், தாக்குதல் நடந்த விதத்தையும் தளபதி கிட்டு சொல்லச் சொல்ல நாம் நேரில் பார்க்கும் உணர்வு பெறுகிறோம். நான் எதுவும் முன்கூட்டிச் சொல்லவில்லை, வாசகரே படித்தறியட்டும்.

எத்தகைய வீரம்! எத்தகைய ஈகம்! குருதியால் எழுதிய சரித்திரம் வீண்போகலாது. அந்த வீரத்துக்கும் ஈகத்துக்கும் சொந்தமானவர்கள் பிறந்த அதே தமிழனத்தில் பிறந்தோம் என்ற பெருமிதம் நம் அனைவர்க்கும் வேண்டும். அதற்கும் மேலே அவர்கள் வரித்துக் கொண்ட குறிக்கோளுக்கான போராட்டத்தைத் தமிழன்னை நம்மிடம் கையளித்திருப்பதை மறவாமல் பயணம் தொடர்வோம்! களத்துக்கும் காலத்துக்கும் ஏற்பப் போராட்ட வடிவங்கள் மாறியுள்ளன. ஆனால் விடுதலை இலக்கில் மாற்றமில்லை. அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் இக்குறுநூல் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். மேலும் பல கைவிளக்குகளும் வரட்டுமே!

- தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்