1973 ஏப்ரல் 24ஆம் தேதி மும்பையில் பிறந்து 1989 நவம்பர் 15ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவிற்கு எதிராகத் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கி கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேனிடம் கிரிக்கெட்டின் தி மாஸ்டர்பட்டத்தை பெற்ற சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் விளையாட்டுக்கான அரசியலை முன்னிறுத்தியதால் அடையாள அரசியலில் குளிர் காயும் நபர்களால் வசை பாடப்பட்டார்.

போட்டிகள்: டெஸ்ட் ஒருநாள் முதல்தரப்போட்டி லீக்

பங்கேற்பு: 161 436 263 523

எடுத்த ரன்: 12,917 17,178 21,806 20,730

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், சாதியின் பெயரால், பிராந்தியத்தின் பெயரால் அடையாள அரசியல் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியால் அந்த நாட்டில் ஏற்பட்ட வேலைஇழப்பு, பொருளதார சரிவு, உற்பத்தி சரிவு எல்லாவற்றிற்கும் காரணம் யூதர்கள்தான் என்று சாதாரண போர்வீரனாக இருந்த இட்லரின் பிரச்சாரம் பாதிக்கப்பட்டு இருந்த ஜெர்மானிய மக்களிடம் எடுபட்டது. ஆளப்பிறந்த இனமான ஆரிய இனம் அடங்கிக் கிடக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் உட்பட அனைத்து கஷ்டங்களுக்கும் ஒரே காரணம் யூத இனமே. அந்த இனத்தை அழித்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற இட்லரின் இன அடையாள அரசியல்தான் அவனை ஜெர்மானியின் சர்வாதிகாரியாக உயர்த்தியது. 1925இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விஜயதசமி அன்று துவக்கப்பட்டது. துவக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் நூற்றுக்கணக்கான கலவரங்களை நடத்தி தனது அமைப்பின் அடையாளத்தை பதிவு செய்தது. தனது வலதுசாரி பிற்போக்குத்தனமான நடவடிக்கையின் மூலம் இந்துத்துவா, இந்து மதவெறி அடையாளத்தின் மூலம் பெரும்பான்மை இந்து மக்களை திரட்ட முனைந்தது. இதற்கு எதிராக சிறுபான்மை மதவாதமாக இஸ்லாமிய மதவெறியர்கள் தங்களது அடையாள அரசியலை முன்னிறுத்தி மதரீதியான அணிதிரட்டலை செய்தனர்.

காலம் காலமாய் வர்ணாசிரமத்தின் பெயரால் நடைபெற்ற சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், மதவெறிக்கு எதிரான மதச்சார்பின்மையை வளர்த்தெடுத்த பாரம்பரிய மிக்க போராட்டமும் இந்தியாவில் நெடுங்காலமாகவே நடைபெற்று வந்துள்ளது. இதன் அடிச்சுவட்டில் தான் இன, மத, மொழி, பிராந்திய அடையாளங்களை தூர எறிந்துவிட்டு, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய சுதந்திரப் போரில் தொழிலாளிகளின் எழுச்சியை நிரூபித்துக்காட்டிய பல லட்சக்கணக்கான வேலை நாட்களை இழந்த வேலைநிறுத்தமும், இந்திய சுதந்திரத்திற்கு அடிநாதமாக விளங்கிய 1946 பிப்ரவரி 18 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை விட்டு வெளியேற கட்டியம் கூறியது. அந்த மகாராஷ்டிராவில் 1965 களில் வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னுக்கு வைத்து அனைத்து வேலைகளிலும் மராட்டியர்களுக்கே முன்னுரிமை, இதர மாநிலத்தவரை வெளியேற்று என்ற கோஷத்தோடு ஒரு இனவெறிக் கூட்டம் சிவசேனா என்ற பெயரில் அதன் தலைவர் பால் தாக்கரேவால் முன்மொழிந்து துவக்கப்பட்டது இன்று வரை நீடிக்கிறது.

சிவசேனா துவக்கிய இந்த இன அடையாள அரசியல் அதன் வாரிசாக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் தற்போதைய 15 வது மக்களவை தேர்தலில் வாங்கிய வாக்குகள் வரை பார்த்தால் புலப்படும். சமூக நெருக்கடியின் கொந்தளிப்பில், வாழ்க்கைக்கான போராட்டத்தில் அறியாமை காரணமாக யார் எது சொன்னாலும் கேட்கும் பொது புத்தியை திட்டமிட்டு முதலாளித்துவ அரசுகள் அடையாள அரசியலின் மூலம் உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியே தற்போது பால்தாக்கரே மராட்டியர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை, இதரர் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்தை முன் வைக்கிறார். அடையாள அரசியலின் மூலம் மக்களை பிரிக்க நினைக்கும் இந்த நாட்டில் தான் பன்முகப்பட்ட தளங்களில் மக்களை ஒரு முகப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை செய்து வருகிறது.

அரசியலே வேண்டாம் என்ற பேச்சுகளை திட்டமிட்டு முதலாளித்துவம் விதைத்து வரும் சூழலில் ஒவ்வொரு செயலுக்கும், காரணத்திற்கும், விளைவுக்கும் பின்னால் ஒரு அரசியல் உள்ளது. அந்த அரசியல் மக்களை ஒற்றுமைப்படுத்த, வளப்படுத்த, மேம்படுத்த பயன்பட வேண்டும் என இன்று வரை வலதுசாரிகளுக்கு எதிராக இடதுசாரிகள் போராடி வருகிறார்கள். அதன் தாக்கம் தான் விளையாட்டு என்பது பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த பயன்படும் வலுமிக்க ஆயுதமாகும். அதை சரியாக பயன்படுத்தியுள்ளார் சச்சின். ஆம்.. மும்பையில் பிறந்த மராட்டியன் என்பதை விட முதலில் இந்தியன் என்ற பெருமையே முக்கியம். பின்னர் தான் மராட்டியன் என்று தேச ஒருமைப்பாட்டை சச்சின் பால்தாக்கரேவின் இனவெறி அரசியலுக்கு சரியான சிக்சரடி கொடுத்தவுடன், பால்தாக்கரேவின் பாசிச குணம் வெளி வந்துவிட்டது. இந்த சிவசேனா கூட்டம் தான் தங்களது இன வெறி அரசியலுக்காக விளையாட்டில் அரசியல் செய்தனர். பாகிஸ்தான் அணியினர் இந்தியாவில் விளையாடக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் மைதானங்களை சேதப்படுத்தினார்கள்.

பிப்ரவரி14 காதலர் தினத்தினை கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என காதலர்களை பூங்காக்களில் அடித்த கலாச்சார காவல் அயோக்கியர்களாகிப் போனார்கள். வாழ்த்தட்டை, பூங்கொத்து விற்ற கடைகளை அடித்து நொறுக்கினார்கள். பயர்திரைப்படம் வந்தபோது கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் திரைப்பட அரங்குகளை அடித்து சேதப்படுத்தினார்கள். மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை மும்பையில் அனுமதிக்க மாட்டோம் என்ற சிவசேனா தனது ஆதாயத்திற்காக ஜாக்சனை வைத்து நிகழ்ச்சியும் நடத்தி கை குலுக்கியது. இப்படி ஒரு இனத்தின் பெயரால் அரசியல் நடத்தும் சிவசேனா, எம்.என்.எஸ் போன்ற அமைப்புகளோடு இது போன்ற அடையாள அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாக சச்சினின் மனிதாபிமான கருத்தும், தேச ஒற்றுமை குறித்த கருத்தும் வலுப்பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து பால்தாக்கரேவுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் அதிகமானவுடன் வயதானவர், இளையவருக்கு சொன்ன அறிவுரை என தனது சுருதியை குறைத்துக் கொண்டார்.

அடையாள அரசியலை தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டு இருக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்புகளுக்கு எதிராக மக்களை ஒற்றுமைப்படுத்தப் போராடும் முற்போக்கு, இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் செயல்பாட்டிற்கு தி மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பேச்சு உரம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மதச்சார்பின்மை கருத்துகளே பல தேசிய இனங்களை கொண்ட இந்தியாவில் ஒன்றுபட்ட இந்தியாவை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாதுகாத்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வருகிறது.. ஏற்கனவே 1992 மும்பை கலவரத்தின் போது கிரிக்கெட் உலகின் இந்தியாவின் சீனியர் மாஸ்டர் சுனில் கவாஸ்கர், இந்த மதவெறியர்களுக்கு எதிராக இஸ்லாமிய குடும்பம் ஒன்றை தனது வீட்டின் முன் வைத்து காப்பாற்றினார்.. மதவெறியர்கள் சூழ்ந்து இஸ்லாமிய குடும்பத்தை கொன்று குவிக்க சூழ்ந்த நிலையில் சுனில் கவாஸ்கர் அந்தக் குடும்பத்திற்கும் மத வெறியர்களுக்கும் நடுவில் நின்று தன்னைக் கொன்ற பிறகே இவர்களின் மீது கை வைக்க முடியும் என்ற போது அந்த மத வெறி கூட்டம் பின்வாங்கியது என்பது நாடறிந்த விசயமாகும். அந்த வழியில் தற்போது சச்சின்...

உயர்ந்த பண்பாடு உடையவராக இருப்பதே சுதந்திரமாக இருப்பதற்கு ஒரே வழி என்ற கியூபாவின் வழிகாட்டி ஜோஸ் மார்ட்டியின் பண்பாடு குறித்த தத்துவமே சிறந்த வழியாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கு போராடுவதும், அவர்களை வளர்த்தெடுத்து முன்னேறுவதுமே இன்றைய பண்பாட்டு நடவடிக்கையாக இருக்க முடியும். 

- அரவிந்தன், திருப்பூர்