கடந்த 2007 மார்ச் 5 ஆம் தேதியன்று, அப்போதைய அரசு தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, மாநில திட்டக்குழு கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யோகா கல்வி அறிமுகம் என்று அறிவித்தார்.
 
இந்த அறிவிப்பு கண்டு தாயக மருத்துவர்களாகிய நாங்கள் பெருமிதம் கொண்டோம். யோகா என்று சொல்லப்படும் ஓகப் பயிற்சி, இருக்கைப் பயிற்சி என்றும் அழைக்கப்படும். இது தமிழ்ச் சித்தர்களால் குறிப்பாக திருமூலரால் ஒழுங்கமைக்கப்பட்டது. தமிழ்ப் பாரம்பரியத்தின் கண்டுபிடிப்பு, நமது மரபு வழி அறிவுச் சொத்து. இதனை இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு, பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடினாலும் நமக்கே சொந்தமானது. பல நோய்களை போக்கவும், எந்த நோயும் வராமல் காக்கவும் உதவக் கூடிய உடற்பயிற்சி முறை.
 
இத்தகைய சிறப்புகளுக்குரிய யோகாவை நமது பிள்ளைகளுக்கு தமிழக அரசு சொல்லிக் கொடுக்கப் போகிறேன் எனச் சொன்னது வரவேற்கத்தக்க ஒரு முடிவு. இதனை வரவேற்றும் இதன் பொருட்டு யோகாசன ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும் இக் கட்டுரையாளர் உள்ளிட்ட தாயக மருத்துவ முன்னோடிகள் ஆசன ஆண்டியப்பன் தலைமையில் 26.5.2007 அன்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திடீரென அதிர்ச்சியூட்டும் சுற்றறிக்கை ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.
 
இந்த உத்தரவின்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திலுள்ள இரண்டு உடல் கல்வி வகுப்பில் ஒன்றில் யோகா பயிற்சியளிப்பது என்றும் இப்பயிற்சியை தனியார் மனவளக்கலை மையத்தினர் அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மனவளக்கலை மன்றம் என்பது நவீன வடிவிலான இந்துத்துவா அமைப்பாகும். மட்டுமல்லாமல் மேற்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்கசாதியான கொங்கு வேளாளர்களின் நடுத்தர வர்க்கத்தினர் சாதியப் பெருமிதத்தோடு அதனை மூடி மறைத்துக் கொண்டு ஆதிக்கத்தை தொடர்வதற்கான ஒரு அமைப்பாகவும் நடைமுறையில் உள்ளது. இந்த அமைப்பினர் கையாளும் யோகா முறையும் ‘மேல் வலிக்காத’ பலனேதும் வழங்காத பாரம்பரிய முறைக்கு முரணான ‘ஒரு சிம்பிள் யோகா’ முறையாகும். இவர்கள் யோகாவோடு வழங்கும் செயல்முறைக் குறிப்புகள் அறிவியல் முலாம் பூசப்பட்ட - புதிய மொந்தையில் நிரப்பப்பட்ட பழைய இந்துத்துவ கள்தான். இவர்கள் நடத்தும் காயகல்ப பயிற்சி மற்றும் தியானத்தால் உடல் மனநலம் பாதிக்கப்பட்டோர் பலர்.
 
மேலும் சமூக சுரண்டலை மூடி மறைக்க உலக அமைதி வேள்வி, பெண்ணடிமைத்தனத்தை பேணிக் காக்க மனைவி நல வேட்பு நாள், இல்லாத இறைவனை தரிசிக்க பிரம்மஞானப்பயிற்சி, உலக நடப்புகளை அறிந்து கொள்ளாமல் தடுக்க அகத்தாய்வுப் பயிற்சி... இப்படிப் பலப்பல.
 
இதற்கெல்லாம் ஆள் பிடிப்பதற்காக இலவச மாகவே யோகா பயிற்சியை பள்ளிகளில் நடத்த இம்மன்றத்தினருக்கு பள்ளிக் கல்வித் துறை பாதை திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பினர் பல்வேறு பல்கலைக்கழகங்களோடு இணைந்து மொட்டை மாடிகளிலும், குடிசைகளிலும் மனித மாண்புக்கான பட்டய, பட்டங்களை வழங்கி வருகின்றனர். பள்ளிக் கல்வியைக்கூட நிறைவு செய்யாதவர்கள் இப்பயிற்சிகளுக்கு பேராசிரியர்களாக வும், துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.
 
உலகத் தமிழர்களின் தலைவராக தன்னைக் கருதிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஆளுகையிலுள்ள அரசின் பள்ளிக் கல்வித் துறை யோகாவின் பெயரால் இளம்பிஞ்சுகளின் நெஞ்சங்களில் இந்துத்துவா நஞ்சை விதைக்க இடமளிக்கக் கூடாது. தமிழர் கலையான, மருத்துவமான ஓக முறையை - உரிய பயிற்சி பெற்றவர்களை ஆசிரியராக நியமித்து உரிய வழி முறையில் பயிற்றுவிக்க ஆவன செய்ய வேண்டும். இப்போது வந்துள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.