“இன்று ஒரு தகவல்” என்ற தலைப்பால் அன்போடு பல லட்சம் வானொலி நேயர்களின் உள்ளார்ந்த அன்புக்குச் சொந்தக்காரராக இருந்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். விடியற்காலையில் அவரது குரலைக் கேட்டுத்தான் கண்விழிப்பது என்றே ஒரு கூட்டம் இருந்த காலங்கள் உண்டு. வேளாண்மை பொறியியல் கற்றிருந்த அவர், தற்செயலாக வானொலியில் பணியாற்ற நேர்ந்ததையும், டிராக்டர் விவசாயியாக தாம் திரும்ப வயலுக்குள் நுழையவேண்டும் என்று தமது தந்தை எதிர்பார்த்திருந்ததையும் தமது நேர்காணல்களில் அவர் பதிவு செய்திருக்கிறார். சொற்களின் உச்சரிப்பில் அவர் கடைப்பிடித்த முறை கவித்துவமானது. ஒரு தேர்ந்த சங்கீதக்காரர் போல எங்கே அழுத்த வேண்டும், எங்கே வேகமாகக் கடந்து போகவேண்டுமென்ற கவனம் அவரிடம் இயல்பாக அமைந்திருந்தது. இலக்கண சுத்தத்திற்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிராமல், நீண்ட நாள் பழகிய தோரணையில் தோளில் கை போட்டுப் பேசும் லாவகம் பயின்றிருந்தார் அவர்.

ஐந்து நிமிடத்திற்குள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு, ரசனைக்கு முத்தாய்ப்பாக ஒரு துணுக்கையும் சிரிக்கச் சிரிக்க எடுத்து வைத்துப் போவதை அன்றாடம், வருடம் 365 நாளும் செய்வது இலேசான காரியமா என்ன...

செய்தியின் போக்கிலேயே அருவருக்கத்தக்க பண்புகளைப் பற்றிய மென்மையான சாடல் இருக்கும்.  அது ஓங்கி அடிக்கிற மாதிரி வலிக்காதுதான், ஆனால் வெட்கம் பிடுங்கித் தின்ன வைத்துவிடும். ஆன்மிகக் கதைகள், புராணப் பாத்திரங்கள் இவற்றைக் குறித்த ஆழ்ந்த வாசிப்பின் திறம் அவரது எளிமையான கட்டுக்குள் வந்துவிடுவது இன்னொரு வியப்பான அம்சம். பழமைக் கொண்டாடியாக மரபார்ந்த நுட்பங்களின் அருமை தவழும் அவரது உரைகளில் சமகால நவீனத்துவத்தின் கூறுகளை மதிக்கிற பாங்கும் கலந்திருந்தது அவரது வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்.

அவரது கருத்துக்களின் கனத்தை இலேசாக்கி முடிக்கவென இறுதிப் பகுதியில் பளீரென்று சுவாரசியமான ‘பொடிச் செய்தி’ ஒன்றை அவர் சொல்வது வழக்கம். அந்தப் பகுதிக்கென்று மட்டுமே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார் தென்கச்சி.  சமயத்தில், அது முற்பகுதியில் அவர் வலியுறுத்திச் சொன்ன தத்துவத்தையோ, மருத்துவ உண்மையையோ முற்றிலும் நையாண்டி செய்வதாகக் கூட இருக்கும்.  ஆனால், அந்த முரண்பாட்டு யதார்த்தம்தான் நமது அன்றாட வாழ்வியலின் சுவாரசியமான தன்மையாக இருக்கிறது என்பதன் பிரதிபலிப்பாக அதை அவர் காட்டியிருப்பார்.

நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியிலிருந்த காலத்தில், ஒருமுறை அவசர அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தேவைப்படுகிறது என்பதை பரிசோதனை முயற்சியாக வானொலியில் அறிவிக்கச் செய்தார். அந்தக் காலை நேரத்தில் அப்போதுதான் பணி முடித்துவிட்டு ஓய்வறையில் உடைமாற்றிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலர் தங்களது இரத்தமும் அதே பிரிவைச் சார்ந்தது என்பதால் உடனடியாக அந்த உயிர்காக்கும் பணிக்கு விரைந்து போய் நின்றிருக்கின்றனர். இவ்வளவு விரைவாகத் தமது அறிவிப்புக்குக் கிடைத்த பலனை எண்ணிச் சிலிர்த்துப்போய் இதனைத் தொடர்ந்து சேவைச் செய்தியாக மாற்றியவர் அவர்.

பணி ஓய்வினை அடுத்து அவரது நேர்காணல் தினமணிக்கதிர் ஏட்டில் வந்தபோது அதில் மிகவும் சுவாரசியமான தகவல்கள் பலவற்றைச் சொல்லியிருந்தார். அவரது உரையைத் தொடர்ந்து கேட்டு ரசித்த இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் அவரை நேரில் வரச் சொல்லி இருந்தாராம்.  இவர் சென்றதும், நீங்கள் ஏன் இராமகிருஷ்ண விஜயத்தில் (மடம் வெளியிடும் ஏடு) உங்கள் கருத்துக்களைத் தொடராக எழுதிவரக்கூடாது என்று கேட்டுக் கொண்டாராம்.  இவருக்கோ அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.  அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த பல விஷயங்களைத்தான் அவர் தமது அன்றாடப் பதிவுகளில் பேசி வந்திருக்கிறார்.  தங்களது புத்தகத்தில் வருவதை சுவாமிகளே வாசித்திருக்க மாட்டார் என்று சொல்வது சரியாக இருக்காது.  திருடன் கையிலேயே சாவி கொடுப்பது என்று சொல்வதில்லையா, அப்படித்தான் என்னையே அவர்கள் பத்திரிகையில் எழுதச் சொன்னது, என்று நளினமாக அந்த விஷயத்தை முடித்திருந்தார் தென்கச்சி.

இறை நம்பிக்கை கொண்டவராக, அதன் அடிப்படையில் சிந்திப்பவராக இருந்தார் என்றாலும், வாழ்வின் புதிர்களுக்கான அவரது தேடலில் முற்போக்குச் சிந்தனைகளும் தட்டுப்பட்டன. தனது சொந்த நம்பிக்கையை மற்றவர்கள் மேல் திணிக்காத பண்பும் இருந்தது.

தாம் கூறும் தகவல்களும் நகைச்சுவைக் கதைகளும் மற்றவர்களது பேச்சுக்கள், பத்திரிகைகளில் வரும் துணுக்குகள், நண்பர்கள் பகிர்ந்துகொள்கிற செய்திகள் போன்றவற்றிலிருந்தே எடுத்தாள்வதாக எந்தத் தயக்கமுமின்றி ஒப்புக்கொள்கிற நேர்மை அவரிடம் இருந்தது.

ஒரு சாதாரண தோற்றமுடைய மனிதர், நாடக உலகிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ, சமூகஅரசியல் மேடைகளின் மூலமாகவோ கூட அறிமுகமாகாமல், சொல்லப் போனால் தமது முகம் பார்க்கப்படாமலேயே வானொலி ஊடகத்தின் குறைவான சாத்தியங்களிலிருந்தே பல லட்சம் மக்களை ஈர்க்கத் தக்கவராக உருப்பெற்றது உண்மையிலேயே தன்னிகரற்ற சாதனை என்றே படுகிறது.  மீ.ப.சோமு, மனசை ப கீரன், சுகி சுப்பிரமணியன், கூத்தபிரான், வானொலி அண்ணா ரா.அய்யாசாமி... என்று எழுபதுகளில் எத்தனையோ மனிதர்கள் தமது குரல்களால் மக்கள் மனத்தில் இடம் பெற்றிருந்தவர்கள்.  வானொலி நாடகங்களில் உணர்ச்சி பொறி பறக்கப் பேசியவர்கள் எத்தனையோ பேர் உண்டு.  இருந்த போதிலும், தென்கச்சிக்கு இவர்களைக் கடந்து போகும் வாய்ப்பு கிடைத்தது தனித்தன்மை என்றே சொல்லத் தோன்றுகிறது.

அவரது எள்ளல் உணர்ச்சியும், சற்றும் சிரிக்காமல் பிறரை வெடிச்சிரிப்புக்கு உட்படுத்தும் சாதுரியமும் புகழ்வாய்ந்தவை.  ஒருமுறை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தார் தென்கச்சி. அருவியின் இன்பத்தில் திளைத்திருந்த தருணத்தில் நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார்: “இந்த அருவி விழும் மலையுச்சியில் நின்றால், இன்று ஒரு தகவலாக எந்தச் செய்தியைச் சொல்வீர்கள்?”

தென்கச்சி பட்டென்று பதிலிறுத்தார்: “ அந்த உச்சியில் நான் நின்றால், தகவலை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டியிருக்கும்”

அவரது இன்று ஒரு தகவலுக்காக ஏங்கி இருந்த  பல்லாயிரக்கணக்கானோருக்கு, செப்டம்பர் 16 அன்று அவர் மறைந்த தகவல் அதிர்ச்சித் தகவலாகத் தான் வந்து சேர்ந்தது. மறைவுச் செய்தி பரவலாக எல்லோரையும் வருத்தமுறச் செய்ததில் வியப்பில்லை.  மற்றவர்களுக்குப் பயன் விளைவிக்கும் சிறந்த தன்மைகளுள்ளவர்களின் மரணம் எந்த வயதில் நிகழ்ந்தாலுமே துக்கத்தைத் தூண்டக்கூடியதே.  67வது வயதிலேயே தென்கச்சி இயற்கையெய்தியது துயரத்தின் ஆழத்தைக் கூட்டிவிட்டது.

கதிரில் வந்த அவரது நேர்காணலைச் செய்தவர் முடிக்கு முன் வழக்கமான துணுக்கோடு இதையும் நிறைவு செய்யுமாறு தென்கச்சியைக் கேட்டுக் கொள்ள தென்கச்சி சொன்ன துணுக்கு இது:

தீராத தலைவலியால் துடித்த ஒருவர் சிறப்பு மருத்துவரிடம் போயிருக்கிறார். அவரோ இவரது மூளையையே தனியே எடுத்து அதில் என்ன ஏது என்று நீண்ட நாள் ஆய்வில் இறங்கி விட்டார். இதனிடையே தையல் போட்டுச் சிகிச்சை முடிந்தது என்று இவரை அனுப்பி விட்டனர். முப்பது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர் அதே மருத்துவரிடம் போய் நின்று தன்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டிருக்கிறார்.  கேட்டுத் தெரிந்துகொண்ட மருத்துவர் அதிர்ந்துபோய், ஏனப்பா, மூளையே இல்லாமல் இந்த முப்பது வருடங்களாக என்னதான் செய்து கொண்டிருந்தாய் என்று வியந்து வினவியிருக்கிறார்.  அந்த மனிதர் அசராமல் சொன்னாராம், வானொலியில் இன்று ஒரு தகவல் சொல்லிக்கொண்டிருந்தேன் என்று. இந்த எளிமையும், அசத்தலும் ஒருசேரக் கலந்த சாதனையாளர்தான் தென்கச்சி.