ரிக் வேதத்தை இயற்றிய ஆரியர்கள் முதல், மொகலாய சக்கரவர்த்திகளின் சரித்திரக் காலம் வரை நிலைத்து நின்றதும், பிரிட்டிஷாரால் தகர்க்கப்பட்டதுமான இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பு என்ன? அதனுடைய விசேஷத் தன்மைகளை நிலைநாட்டவும் வளர்க்கவும் செய்ததில் இந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் ஆற்றிய பங்கு என்ன? இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னேற்றத்தின் விளைவாக உருவாகிய இந்த பாரதீய சமூகப் பொருளாதார அமைப்பின் அடிப்படையைத் தகர்க்க இறுதியில் பிரிட்டிஷாரால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான்  கீழே தரப்படுகிறது.

1. ஆக்கிரமிப்பாளர்களாக இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் ஆரியர்களல்லாத சமூகத்தவருடன் இணைந்து உருவாக்கிய புதிய உற்பத்தி முறையின் (விவசாயம்) விளைவாக ஆரியர்களல்லாத கோத்திர வர்க்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தகர்ந்தன. இந்த ஆரியர்களல்லாத, ஆரிய சமூகத்தவரும் இணைந்தும் புதிய சமூகங்கள் உருவாகின.

2. கோத்திர வர்க்க அமைப்பின் அறிவினாலும் உற்பத்தி முறை வளர்ச்சியின் காரணமாகவும், சமூகம் முழுவதின் உற்பத்தித் திறன் அதிகரித்தது. இதன் விளைவாக உற்பத்தி ரீதியான பணிகள் விரிவடைந்தன. வெவ்வேறு வேலைகள் செய்கின்ற வெவ்வேறு பகுதியினர் என்கிற நிலையில் வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டது. அத்துடன் உற்பத்தித் திறன் அதிகரித்ததைத் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் அளவும் அதிகரித்தது. இவையெல்லாம் சேர்ந்து ஆரம்ப வடிவிலுள்ள சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உற்பத்தி உறவை (நான்கு வர்ணங்கள்) தோற்றுவித்தது. இது படிப்படியாக உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கும், உற்பத்தித்திறனின் முன்னேற்றத்திற்கு மேற்ப விரிவடைந்து, மேலும் மேலும் சிக்கலான ஒரு ஜாதி முறையாக மாறியது.

3. புராதன கிரீஸ், ரோம், சில மேற்காசிய நாடுகள் ஆகியவைகளில் உருவான அடிமைமுறை  அமைப்புக்கும், இந்தியாவில் உருவான இந்த வர்ண, ஜாதி அமைப்புக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமைகள் ஒன்றும் இல்லை. அடிமை முறையைப் போலவே வருணா, ஜாதி முறையினுடையவும் முக்கியமான அம்சம் சுரண்டுவோர் சுரண்டப்படுவோரிடையேயுள்ள முரண்பாடுதான். ஒன்றில் அடிமைகள் என்று பகிரங்கமாக அழைக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் சுரண்டலுக்கு இரையாக்கப் படுகிறார்கள், மற்றொன்றில் ஜாதி என்ற திரையைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இந்த வித்தியாசம்தான் உள்ளது.

4. ஆனால், வருண, ஜாதி முறை அமலுக்கு வந்தபோது அதனை நிலைநாட்டவும், நியாயப்படுத்துவதற்குமாக மத நம்பிக்கைகளுடையவும் தத்துவச் சிந்தனைகளுடையவும் ஒரு சிறப்பான கட்டுக்கோப்பு சுரண்டல் அமைப்பைச் சுற்றிலும் கட்டப்பட்டது. இவ்வாறு அடிமை முறையின் வடிவிலுள்ள சுரண்டலினுடையதான மத, தத்துவ சிந்தனை முதலியக் கட்டுக்கோப்புகளிலிருந்து மாறுபட்ட வேறு ஒரு கட்டுக்கோப்பு இந்தியாவில் உருவாகியது. அதுதான் இந்து மதமும், இந்து தத்துவ ஞானமும், இந்துக் கலாச்சாரமும் மற்றுமாகக் காட்சியளித்தது. அதைத்தான் இந்த வகுப்புவாதிகள் “பரிசுத்தமான பாரதீயக் கலாச்சாரம்’’ என்றழைக்கின்றனர்.

5. அடிமைமுறை, வருண ஜாதி முறை ஆகிய இரண்டு சுரண்டல் முறைகள்தான் அமலில் இருந்ததென்றாலும், புராதன வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவிலும் மேற்காசிய நாடுகளிலும் உற்பத்திக்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. பொதுவாகக் கூறினால், இரண்டிலும் உற்பத்தியாளர்கள்  உற்பத்திச் செயலில் ஈடுபட்டது சொந்த உபயோகத்திற்காகத்தான், உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களில் மிகச் சிறிய பகுதி மட்டுமே மற்றவர்களுக்கு விற்கப்பட்டது. அது போலவே சொந்த உபயோகத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களில் சிறு பகுதி மட்டுமே மற்றவர்களிடமிருந்து வாங்கப்பட்டது. “சரக்கு உற்பத்தி’’ என்றழைக்கப்படுகிற உற்பத்தி முறை இரண்டிலும் பலவீனமாகவே இருந்தது என்று பொருள்.

6. ஆனால், வருண, ஜாதி முறை, சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியை அடிமை முறையிலுள்ள வளர்ச்சியைவிட நிதானப்படுத்தியது. ஒவ்வொரு கிராமத்திலும் அதனதனுடைய மக்களின் சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்கான பொருட்களையெல்லாம் உற்பத்தி செய்வது, அது ஒவ்வொன்றும் உற்பத்தி செய்வதற்கு குறிபிட்ட ஒரு ஜாதியினர் இருப்பது, இந்த அடிப்படையில் சுயதேவைப்பூர்த்தி கிராமங்களும், அவைகளின் பிரிக்க முடியாத பாகமாக ஜாதி முறையும் உருவாகியது, தான் இந்தியாவின் சிறப்பு. இந்த அமைப்பில் கிராமத்தினுடைய உற்பத்திப் பொருளை வெளியே எடுத்துச் சென்று விற்பதோ, கிராமத்தின் தேவைக்கான பொருட்களை வெளியிலிருந்து வாங்குவதற்கான தேவையோ அநேகமாக இல்லையென்று ஆகிவிட்டது.

7. நேர்மாறாக, அடிமை முறையில், அடிமைகளைச் சுரண்டிப் பெறுகின்ற உபரிப் பொருட்களை விற்கவும் அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தைப் பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கை நடத்தக்கூடிய போக்கும் சுரண்டும் வர்க்கத்திற்குண்டு. ஆகவே, சுயதேவை பூர்த்திக் கிராமங்களும் ஜாதி முறைகளும் இருந்து வந்த இந்தியாவைக் காட்டிலும் அதிக சரக்கு பரிவர்த்தனை அடிமை முறை வழக்கிலிருந்த மேற்காசியாவில் நடந்தது. சரக்காக மாற்றக்கூடிய செல்வத்தை ஏராளமாகக் கொள்ளையடிப்பது இந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கங்களின் தேவையாக இருந்தது. அவர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் ஆக்கிரமித்து நுழைந்தனர். அதனைத் தோற்கடிக்க சுயதேவைப் பூர்த்தி கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட இங்குள்ள சுரண்டும் வர்க்கங்களால் முடியவில்லை.

8. ஆனால், ஜாதி முறையினுடைவும், சுயதேவைப் பூர்த்தி கிராமங்களுடையவும் அடிப்படையில் உருவான சமூக அமைப்பின் அடிப்படையைத் தகர்க்க இந்த ஆக்கிரபிப்பாளர்களாலும் முடியவில்லை. முகமது நபிக்குப் பிறகு வளர்ந்து வந்த புதிய இஸ்லாம் மதத்தின் ஆவேசத்தை உட்கொண்டு, முஸ்லிம் அல்லாத மத நம்பிக்கைகளுக்கெதிராக “ஜிஹாத்’’ (போர் முழக்கம்) செய்ய முயற்சித்தவர்களால்கூட ஜாதி முறையையோ சுயதேவைப் பூர்த்தி கிராமங்களையோ அழிக்க முடியவில்லை. இந்துக்களுடையதான பல்வேறு ஜாதிகளுக்கு மேலாக ஒரு “முஸ்லிம் ஜாதி’’ கூட உருவாகவே செய்தது.

9. உற்பத்தி முறையில், சரக்கு உற்பத்தி முன்பிருந்ததைவிடப் பெருக, இந்த ஆக்கிரமிப்புகள் உதவின. ஆனால், அது சமூகம் முழுவதும் பரவவில்லை. சுரண்டும் வர்க்கங்களுடைய அன்றாட உபயோகத்திற்கான ஆடம்பரப் பொருட்களைத்தான் சரக்குகள் என்ற முறையில் அதிகமாக வாங்கத் தொடங்கினர். அதைப் போன்ற உற்பத்தி அதிகரிக்கின்ற அளவுக்கு சுரண்டும் வர்க்கங்கள் அதிக செல்வத்தைக் கொள்ளையடித்து சொந்தமாக்கத் தொடங்கியபோது அவர்கள் சந்தையில் விற்பதும் அதிகரித்தது. இவ்வாறு சுரண்டும் வர்க்கங்களின் மட்டத்தில் சரக்குகளை வாங்குவதும் விற்பதும் அதிகரித்தது. ஆனால், இது சமூகத்தின் மேல் தட்டில் மட்டுமாக ஒதுங்கி நின்றது. அடித்தட்டில் சரக்கு உற்பத்தியும் உபயோகத்திற்காக சந்தையிலிருந்து வாங்குவதும் மிக மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

10. இவ்வாறு ஒரு சிறுபான்மையோர் மட்டுமான சுரண்டும் வர்க்கங்களைத் தவிர்த்து இந்திய சமூக அமைப்பு, சுய தேவைப் பூர்த்தி கிராமங்களின் அடிப்படையிலேயே இருந்து வந்தது. இதனைத் தகர்க்க முகமது நபியின் காலத்திற்கு முன்போ, பிறகோ மேற்காசியாவிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் யாராலும் முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்பாளர்களுடையவும் சக்கரவர்த்திகளுடையவும் படைத் தளபதிகளுடையவும், ராணுவ முன்னேற்றங்கள், கிராமப் பகுதிகளில் உற்பத்தி உறவுகளிலோ, அதனுடைய சமுதாய அமைப்பிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் பயன்படவில்லை என்பது பொருள்.

11. இங்குதான் ஐரோப்பிய வியாபாரிகளின் வருகை முதல் பிரிட்டிஷ் ஆட்சி அமைவது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகள், பழைய நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபடுவது, ரிக் வேதத்தை இயற்றிய ஆரியர்கள் முதல், மொகலாயச் சக்கரவர்த்திகள் வரையான அன்னியர்களுக்கு மாறாக இந்தப் புதிய பகுதி ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவிற்கு முற்றிலும் “அன்னியமான’’ ஒரு சமூகப் பொருளாதார அமைப்பின் கருவுடன்தான் இங்கு கடந்து வந்தனர். “பாரதீயக் கலாச்சாரத்’’தின் அஸ்திவாரத்திற்கு கிராம சுய தேவைப் பூர்த்திக்கும், ஜாதி முறைக்கும் வேட்டு வைக்கின்ற சரக்கு உற்பத்தி முறையின் ஏஜென்ட்டுகளாகத்தான் இவர்கள் இந்தியாவிற்கு வந்தனர்.

(தோழர் இ.எம்.எஸ், எழுதிய இந்திய வரலாறு, என்னும் புத்தகத்தில் மேற்படி விவரங்களை விரிவாக விளக்கி இருக்கிறார். 13வது அத்தியாயத்தில், ஆரியர் துவங்கி ஆங்கிலேயர் வருகை வரையான வரலாற்றுத் தொகுப்பை 11 அம்சங்களாக சுருக்கி இ.எம்.எஸ் எழுதியிருப்பது, அற்புதமானது. மேலும் இந்தக் கண்ணோட்டத்தில் நிகழ்வுகளைச் சுருக்கமாக விளக்குவதற்கு பயன்படும் என்பதனால், இளைஞர் முழக்கம், மேற்படி பகுதியை மறுபதிப்பு செய்கிறது.)