முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்ததையும், அந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடியதையும் ஒரு கதையில் சொல்லியிருந்தேன் அல்லவா? இது சொல்ல மறந்த கதை. பத்தாண்டுகளுக்கு அந்த நாட்டை ஒரு வரிக்குதிரை ஆட்சி செலுத்திய கதை. என்ன வரிக்குதிரையா? வரிக்குதிரையேதான்... நம்புங்க. கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது. 
  
  
ஒரு பாராட்டு விழா(முன்கதை சுருக்கம்)
 
----------------------------------------------- 
அந்த தேசத்தில் கவிஞர் தாத்தா- 1 & கூத்து தாத்தா- 2 & ராஜா தாத்தா- 3 பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே. இவர்களை பற்றி தெரியாதவர்கள் முந்தைய கதையை படித்து விட்டு வரவும்.
http://www.keetru.com/literature/short_stories/vinayakamurugan.php 
  
கூத்து தாத்தா வெற்றிகரமாக இருநூறாவது முறை டப்பாங்குத்து போட்டதை கெளரவிக்க நாட்டு மக்கள் தலைப்பட்டார்கள். பாராட்டு ‌விழா நடத்தி கூத்து தாத்தாவை கெளரவிக்க முடிவு செய்தார்கள். பாராட்டு ‌விழாவுக்கென்று ஒரு திடல் ஒதுக்கப்பட்டது. திடலை சமப்படுத்தி புது ஆற்று மணல் பரப்பினார்கள். திடலின் நாற்புறமும் பந்தற்கால்கள் ஊன்றி மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. மேடையின் மையப்பகுதியில் சாணத்தால் மெழுகி மாக்கோலம் போடப்பட்டது. வெண்ணிறப்பட்டு போர்த்தப்பட்ட குதிரைகள், திடலை சுற்றி வெளிபுறத்தில் வட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டன. திடலை சுற்றி உட்புறத்தில் சந்தன மரங்கள் பூக்கும் சிறு கரிமலைக்குன்றைப்போல யானைகள் சந்தனம் மணக்க,மணக்க நின்றிருந்தன. குதிரைகள்,யானைகள் மீது கருத்த உடற்கட்டும்,பரந்த மார்பும்,சுருள் கேசமும் கொண்ட வீராகள் கையில் நீண்ட ஈட்டியுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள். தேசமெங்கும் ஓடும் புண்ணிய நதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித நீரை தங்ககலசத்தில் ஊற்றி அவற்றை ஓதுவார்கள் இருகரங்களில் ஏந்தி வந்தார்கள். 1008 கலசத்துக்கு ஒரு கலசம் குறைய யாரோ பாராட்டு விழாவுக்கு பங்கம் வந்துவிட்டது என்றார்கள். அந்த நேரம் யானைப்பாகனொருவன் கையில் கலசத்துடன் ஓடிவந்தான். இதோ இங்க இருக்கு..  

  
"
என்ன பாகனே கலசத்தில் நீர் சூடா இருக்கு? " யாரோ கேட்டார்கள் 
  
"வென்னீர் ஊற்றுத்தண்ணீரா இருக்கும் விடுங்க..விழாவுக்கு நேரம் ஆகுது" யாரோ சொன்னார்கள்.
 
 
விழா மேடையில் கூத்து தாத்தாவை சுற்றி இரண்டுபுறமும் கவிஞர் தாத்தாவும், ராஜா தாத்தாவும் அமர்ந்திருந்தார்கள். எள் போட்டால் எண்ணெய் கூட எடுக்கமுடியாது. அவ்வளவு மக்கள் கூட்டம் திடல் முழுவதும். ஆரவாரம்... எங்கும் சந்தோச கூச்சல்கள். ராஜா தாத்தாவே ஒருக்கணம் ஸ்தம்பித்துவிட்டார்.  

  
அட மானங்கெட்ட மக்களே. இந்த நாட்டின் அரசன் நான். எனக்கே இவ்வளவு கூட்டம் வரமாட்டேங்குது. ஆகட்டும். விழா முடியட்டும்.. அடு‌த்த மாசம் நடக்குற என்னோட பாராட்டுவிழாவில ஆயிரம் யானைப்படை,ஆயிரம் வரிக்குதிரைப்படை, ஆயிரம் ஒட்டகம் கொண்டுவந்து நிறுத்தனும். ஐம்பெருங்குழு, எண்பேராயத்திடம் இப்போதே சொல்லிவைக்கனும். யோசித்த ராஜா தாத்தா பக்கத்தில் இருந்த அமைச்சர் அடிப்பொடியாழ்வார் காதை கடித்தார். 
 
"இதென்ன விபரீதம் அரசரே...? வரிக்குதிரை, ஒட்டகத்துக்கு நான் எங்கே போவேன்? " அடிப்பொடியாழ்வார் சொன்னார். ராஜாவுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன. "அதெல்லாம் எனக்கு தெரியாது.கொண்டு வ‌ந்த தலை தப்பும்." கோபத்தில் கத்தினா‌‌‌ர். அடிப்பொடியாழ்வாருக்கு ஒரு யோசனை ஓடியது... பேசாமல் ஏதாவது குதிரை அல்லது கழுதையை பிடித்து கொல்லன் பட்டறைக்கு அழைத்துச்சென்று சூட்டுக்கோலால் முதுகில பட்டை பட்டையா இழுத்துவிட்டு இதான் வரிக்குதிரைனா‌‌‌ இந்த ஆளுக்கு தெரியவா போது. இந்த ஒட்டகத்துக்குதான் என்ன செய்யறதுனு தெரியல...  

  
அடிப்பொடியாழ்வார் தலையை பிச்சிக்கிட்டு யோசித்துக்கொண்டிருக்கும்போது கவிஞர் தாத்தா மக்களை பார்த்து பேச ஆரம்பித்தார். முத‌ல் குண்டுக்கே அரங்கம் அதிர்ந்தது. "சூரியனும், நட்சத்திரமும் அருகருகே அமர்ந்துள்ளார்கள்." சொன்னதும் திடலெங்கும் விசில் பறந்தது. யானைகள் பிளிறின. குதிரைகள் மிரண்டன. ராஜாவுக்கே கொஞ்சம் வெட்கம் வந்துவிட்டது. அட...ங்கொக்காமக்கா..நீ கவிஞன்டா... மனசுக்குள் கவிஞரை பாராட்டினா‌‌‌ர். தூரத்தில் குதிரைமீது அமர்ந்திருந்த ஒரு வீரன் மட்டும் வாங்குற காசுக்கு என்னமா ஃபீல் பண்ணி கூவுறாண்டா...ங்கொய்யால எ‌ன்று கவிஞரின் ராஜ விசுவாசத்தை வெகுவாக மனசுக்குள் பாராட்டினா‌‌‌ன். அவன் அமர்ந்திருந்த ஆண் குதிரை பக்கத்தில் இருந்த பெண்குதிரையை ஆஹா குட்டி என்னா‌ ஷோக்காக்கீது.. செம கட்டை.. அரேபியாவா கேரளாவா தெரியலையேனு அந்த பெண்குதிரை அழகை மனதுக்குள் பாராட்டியது. இப்படி திடல் முழுவதும் ஒருவரை, ஒருவரை பாராட்டு மழையில் நனைக்கத்தொடங்கினா‌‌‌ர்கள்.  
  
கவிஞர் பேசிமுடித்ததும் இருக்கைக்கு வ‌ந்து அமர்ந்தார். ராஜா பேச எழுந்தார். கவிஞர் தாத்தா கூத்துத்தாத்தா கதை கடித்தார்.  
 
"அடு‌த்த மாசம் எனக்கு ஒரு பாராட்டு விழா நடக்குது. நீங்கு கலந்துக்கிட்டு அவசியம் என்னை பாராட்டி நாலு வார்த்தை பேசனும்."
 
 
"அதுக்கென்ன பாராட்டினா‌‌‌ போச்சு... ஆனா‌‌‌ நான் பேசுனா‌‌‌ யாருக்குமே புரியாதே.. நாளைக்கு நீங்க திட்டுறியா? பாராட்டுறியானு எங்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது. ஆ‌மா சூரியனும், நட்சத்திரமும் அருகருகே அமர்ந்திருக்குனு சொன்னீங்களே. இதுல யாரு சூரியன்? யாரு நட்சத்திரம்? " கூத்துத்தாத்தா கேட்டார்.  

  
ஆஹா சனியன் சடை பின்னி பூமுடிச்சு பொட்டு வைக்காம போகாதே எ‌ன்று அப்புறம் சொல்லுறேன் எ‌ன்று நழுவினா‌‌‌ர். மேடையில் ராஜா பாராட்டு மேல பாராட்டு போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்.பாராட்டி பேசியதில் ராஜாவுக்கே நாக்கு வறண்டுப்போனது.  
  
"
தம்பி டீ இன்னும் வரலை..." அடிப்பொடியாழ்வாரிடம் யாரோ நினைவூட்டினார்கள்.  
  
"
நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டி இருக்கு. விடைபெறுகிறேன்" எ‌ன்று ராஜா கிளம்பினார்.  
  
"
நான் இன்னும் நாலு இடத்துக்கு பாராட்ட போகனும்.. நானும் கிளம்பறேன்" எ‌ன்று கவிஞரும் கிளம்பினார். இப்படியாக அந்த பாராட்டுவிழா இனிதாக நிறைவுபெற்றது.  
  
சுபம்  
  
 
இன்னொரு பாராட்டு விழா (பின்தொடரும் கதையின் கதை)
 
------------------------------------------------------------------- 
  
அப்படி இப்படினு ஒரு மாசம் ஓடியிருக்கும். கூத்துத்தாத்தாவின் பாராட்டுவிழாவிற்கு செ‌ன்று வந்ததிலிருந்தே ராஜாவுக்கு மண்டைக்குள்ள மணிச்சத்தம். அந்தப்புரத்தில் ராணிகளோடு இருக்கும்போது கூட மணியடித்துக்கொண்டே இருந்தது. கோயில் மணிய சொன்னேங்..வேற எதுவும் இல்லீங்.. ஐம்பெருங்குழு, எண்பேராயத்தை கூட்ட முடிவு செய்தார். அடிப்பொடியாழ்வாரை பாராட்டு ‌விழாக்குழு தலைவராக நியமிப்பது எ‌ன்று ஏகமனதாக பேராயத்தில் முடிவு செய்தார்கள். பத்துநாள் விழாவாக தொடர்ந்து நடத்துவதென்று முடிவு செய்யப்படது. ஒட்டகத்துக்கு எங்கு போவது..? அடிப்பொடியாழ்வார்க்கு ஓரே குழப்பம். விழாக்குழு தலைவர் பதவியை எதிர்ப்பார்த்து காத்திருந்த மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் ஏமாற்றம். அதேநேரம் ஒட்டகம் விஷயம் தெரியவந்ததும் அப்பாடா..எஸ்கேப்..எ‌ன்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஒட்டகத்தை கட்டிக்கோ..கெட்டியாக ஒட்டிக்கோ என்று அடிப்பொடியாழ்வாரை கிண்டல் செ‌ய்து பாடிய வரிகள் கல்வெல்ட்டில் இருப்பதாக பின்னாளில் தெகிமாலா நாட்டு சரித்திரத்தை ஆராய்ந்த கால்டுவெல்ஸ் என்னும் ஆங்கிலேயர் குறிப்பிடுகிறார்.
  
  
சரி விசயத்துக்கு வருவோம்.
 
  
விழாவுக்கு ராஜாவை பாராட்ட யாரை அழைப்பதென்று யோசிக்க ஆரம்பித்தார்கள். அடிப்பொடியாழ்வார் சொன்னார். "வேற யாரு? அவரையே கூப்பிட்டு வாங்க. " எ‌ன்று உத்தரவிட்டார். எண்பேராய உறுப்பினர்கள் கூத்து தாத்தா வீட்டுக்கு சென்று அழைத்தார்கள்.

"ஆஹா... ஆடித்திங்களா? அன்று எனக்கு முக்கியமான வேலை இருக்கிறதே..ஐஸ்வெள்ளியங்கரி மலையில் தனிமையில் குத்தாட்டம் போடனுமே...மன்னிக்கவும் நண்பர்களே என்னால் பாராட்டு விழாவுக்கு வரமுடியாது" கூத்து தாத்தா சொன்னார்.

அடிப்பொடியாழ்வார் இதைக்கேள்விப்பட்டதும் வெகுண்டெழுந்தார். "இந்த மாதிரி வேலைக்கெல்லாம் எண்பேராயம் சரிப்பட்டு வராது." ஐம்பெருங்குழுவை அழைத்தார். " சகல மரியாதை(!?) களோடு அழைத்து வாங்க..." எ‌ன்று உத்தரவிட்டார். ஐம்பெருங்குழு எள் என்றால் எண்ணெயாக வருவார்கள்.அவர்கள் கூத்து தாத்தா மட்டுமில்லாமல் அவரது பேரக்குழந்தைகள், கூத்து தாத்தா ஒ‌ன்று விட்ட சித்தப்பா மகனுக்கு பெரியப்பா மருமகனுக்கு பேரன் எ‌ன்று அனைவரையும் கையோடு சகலமரியாதைகளோடு (!?) விழாமேடைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இப்போது ஐம்பெருங்குழுவை நினைத்து அடிப்பொடியாழ்வாருக்கே லேசாக பயம் வந்துவிட்டது. 
 
மேடையில் எல்லாரும் இறுக்கமாக அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் வரிசையாக ராஜாவை பாராட்டிகொண்டே வரவேண்டும். ஒவ்வொருவராக ஆடிக்கொண்டும்,பாடிக்கொண்டும் வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள். அடிப்பொடியாழ்வார் ஜருகண்டி.. ஜருகண்டி எ‌ன்று இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சுவாரசியம் நடந்தது. ஒரு பொடியன் (இவனை கூத்துத்தாத்தாவின் பேரன் எ‌ன்று ‌சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். சிலர் இதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை எ‌ன்று மறுக்கிறார்கள்) ராஜா முன்னால் வந்தான்.
 
  
"ராஜா இ‌து உங்களுக்கே நல்லாயிருக்கா? எங்களுக்கு ஆயிரம் தல போற வேலையிருக்கு.உங்க அமைச்சர்கள் வலுக்கட்டாயமாக எங்களை விழாவுக்கு கூப்பிடுறாங்க. வராட்டி தலையை கொய்துவிடுவோம் அப்படினு சொல்றாங்க. எவ்வளவு ரூபா செலவானா‌‌‌லும் பரவாயில்லை.இதுக்கு ஒரு பைசல் பண்ணுங்க.. " மேடையில் வெடித்தான்.  

  
குதிரை, யானை, கடல் அலைகள், அசையும் மரம், உதிரும் இலை,காற்று எல்லாம் ‌சில நொடிகள் ஸ்தம்பித்தன.ராஜாவுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. எல்லாரும் அமைதியாக ராஜாவையே பார்த்துக்கொண்டிருக்க கூத்து தாத்தா எழுந்தார். இரண்டு கைகளையும் படபடவென தட்ட ஆரம்பித்தார். மக்கள் இப்போது கூத்து தாத்தாவை மரியாதையாக பார்த்தார்கள். 
  
அப்போது இன்னுமொரு அதிசயம் நடந்தது. ஒரு வரிக்குதிரை கனைத்தபடி முன்னால் வந்து பேச ஆரம்பித்தது.
 
  
"அட..ங்கொய்யால.. உங்க விழாவுக்கு மட்டும் பாராட்ட கூப்பிடவுடனே ராஜா வர்றாரு.. அவரு இந்த நாட்டுக்கே ராஜா... உங்களையும் மதிச்சு பாராட்ட வர்றாரு.. நன்றிகெட்ட ஈனப்பிறவிகளா... நீங்க மட்டும் அவர பாராட்டுனா‌‌‌ தேஞ்சா போய்டுவீங்க...?நான்தான் அடுத்த ராஜானு வாய்கிழிய தெருக்கூத்தில பஞ்ச் பேசுறீங்க.. இதையெல்லாம் பெருந்தன்மையோட எங்க ராஜா பொறுத்துக்கலையா? ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்காமா இப்படி சண்டை போடுறது நல்லாவா இருக்கு?" வரிக்குதிரை கோபத்தோடு கேட்டது.
 
  
உண்மை சுட்டது. மக்கள் இப்போது வரிக்குதிரை மரியாதையாக பார்த்தார்கள். அடிப்பொடியாழ்வாருக்கு குழப்பம். வரிக்குதிரை எப்படி பேசமுடியும். அதுவும் தெருக்கூத்து ஆட்கள் சொல்லும் அதே லாவகத்தோடு ஏற்ற இறக்கமாய் உணர்ச்சி பிழம்பாய் கருத்து சொல்ல முடியும். எண்பேராயத்துத்துல இருக்கற எவனாவது வரிக்குதிரை வேஷம் போட்டுட்டு வந்துட்டானா? எல்லாரும் வரிக்குதிரையை பிடித்து சோதனைப் போட்டார்கள். அடா நெசமாலுமே இ‌து குதிரைதான். ராஜாவுக்கே பிரமிப்பிலும், பிரமிப்பு. அடு‌த்த ராஜா நீதாண்டா எ‌ன்று குதிரையை கட்டிக்கொண்டார்.
 
  
இப்படித்தான் ஒரு பத்தாண்டுகள் வரிக்குதிரை அந்த தேசத்தை ஆண்டது. அந்தக்காலக்கட்டத்தில்தான் மக்களிடம் வரி விதிக்கும் முறை பழக்கத்துக்கு வந்ந்தது. இப்படியாகத்தான் தெகிமாலா நாட்டை ஆராய்ச்சி செய்யும் வரலாற்று ஆசிரியர்கள் முடிக்கிறார்கள்.  
 
  
-
என்.விநாயக முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)