அன்னிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலப் பரப்பில் பிறந்து வாழ்ந்திருந்தாலும் இருபத்தியோரு வயது மட்டுமே சுதந்திர மனிதனாக வாழ்ந்து இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருபத்திமூனறை வயதில் தூக்கிலிடப்பட்ட தோழர் பகத்சிங் அவர்களுக்கும், நாற்பது வயதில் காச நோயால் தனது வாழ்க்கை முடிவுக்கு வந்த கவிஞர் தமிழ்ஒளி என்று உலகம் அறிந்த தோழர் விஜயரங்கன் அவர்களுக்கும் பெரும் வேறுபாடு கிடையாது.

மார்க்சியம் முன்வைக்கும் இயக்கவியல் (dialectic) அணுகுமுறையே அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை வென்றிட வழி வகுக்கும் என்று இருவரும் உறுதியுடன் நம்பினர்.

இருவரும் தன்மானத்துடன் வாழ்வதே வாழ்க்கை என்பதைத் தங்களின் வாழ்க்கை முறை மூலம் விளங்கிடச் செய்துள்ளனர்.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வாசிப்பு தரும் தெளிவு, தெளிவில் இருந்து உருவாகும் தத்துவப் புரிதல், அதன் அடிப்படையில் நடத்தப்பட வேண்டிய போராட்டம், அதற்கான உத்திகள் ஆகியவற்றை நன்குஉணர்ந்து செயல்பட்டனர்.

சோவியத்தைக் கட்டமைத்த, ருசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தோழர் லெனின் கூறியுள்ளதைப் போல் வாசிப்பு, இயக்கப்பணி ஆகிய இரண்டையும் சமஅளவு மேற்கொண்டு தங்களின் செயல்பாட்டிற்குஉரிய தத்துவத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியுடன் இறுதி வரை நின்றுள்ளனர்.

பகத்சிங் தனது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் எத்தகைய திசையை இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவார். அதே பணியை நண்பர் பாலுவுக்கு எழுதிய கடிதம் மூலம் கவிஞர் தமிழ்ஒளி செய்துள்ளார்.

நண்பர் பாலுவுக்கு எழுதிய கடிதம் ஒரு பாலுவிற்காக எழுதப்பட்டது அல்ல. ஒவ்வொரு இளைஞருக்காவும் எழுதப்பட்டது.பொதுவுடைமை இயக்கத்தில் ஊழியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தோழர் லெனின் கூறுவார்.

அவற்றை உள்வாங்கிய தோழர் பகத்சிங் பொதுவுடைமை இயக்கத்தின் ஊழியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தனது சொந்த வேலையை நாள் முழுவதும் முடித்துக் கொண்டு மாலை நேரத்தில் பிரசங்கம் செய்யவரும் நபர்களால் இயக்கம் வளராது. புரட்சியை மட்டுமே தொழிலாகக் கொண்ட முழு நேர ஊழியர்கள் வேண்டும்.அவர்களால்தான் சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்று திட்டவட்டமாக கூறுகிறார்.

அதே கருத்தை மிகவும் ஆணித்தரமாக நண்பர் பாலுக்கு எழுதுகிறார் கவிஞர் தமிழ்ஒளி.

சமூகத்தின் முன் உள்ள சவால்களை விளக்கி, சவால்களை எதிர் கொண்டு, சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்த, பொதுவுடைமைச் சமூகமாக நமது சமூகத்தை மலர்ச்செய்ய நம்மைப் போன்ற இளைஞர்களால் மட்டுமே இயலும் என்று கூறும் கவிஞர் தமிழ்ஒளி, தான் புலவர் படிப்படிப்பில் நாட்டம் கொள்ளாததற்குக் காரணத்தை விளக்கி, அதை விட மிக முக்கியப் பணிகள் இருப்பதை உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

அத்துடன் நண்பர் பாலுவிற்கு அவர் வைக்கும் வேண்டுகோள் (அது வேண்டுகோளா அல்லது தோழமைக் கட்டளையா என்பது அந்த கடிதத்தை வாசிக்கும் வாசகரின் உணர்வு நிலையைப் பொறுத்தது) மிகவும் முக்கியமானது. படிப்பை முடித்ததும் வந்துவிடுங்கள் நம்மைப் போன்ற மற்ற இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையைக்காக பாடுபடுவோம் என்று தெளிவுபடக் கூறுகிறார்.

 மனித குல வளர்ச்சியை விளக்கி, போராட்டத்திற்கான தத்துவத்தை அறிமுகப் படுத்துகிறார். சோசலிச எதார்த்த வாதம் என்ற இலக்கியக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.

கடிதத்துடன் அவர் இணைத்து அனுப்பும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரகடனம் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தம். நாசிசம், பாசிசம், ஆளும் வர்க்கம் இவற்றின் செயல்பாட்டால் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் மறுக்கப்படுவது, எழுத்தாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது, ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்து நச்சு இலக்கியம், நச்சு சினிமா எப்படிப் பரப்பப்படுகிறது என்பதை அந்தப் பிரகடனம் விளக்குகிறது.

கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர் உள்ளிட்ட கொல்லப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகிய இன்றைய நிகழ்வுகளைக் கவிஞர் தமிழ்ஒளி அறிமுகப் படுத்தும் பிரகடனத்தை வாசிக்கும் போது நாம் உணர முடியும்.

நாம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகப் பலரும் நினைத்துக் கொண்டு அடுத்த வேளை உணவு எவ்வாறு இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். பாசிச சித்தாந்தம் மக்களின் ஆழ் மனதில் பதியத் தொடங்குகிறது என்ற அபாயத்தை நாம் உணர மறுக்கிறோம்.பாசிசக் கருத்து வேர் பிடித்தால் அடுத்த நொடி நாம் உயிருடன் வாழ இயலுமா? உயிருடன் வாழ்ந்தாலும் சுதந்திர மனிதராக வாழ முடியுமா?

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு இந்த எச்சரிக்கையை நமக்குத் தருகிறது. கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை நாம் அனுசரிப்பது அவரின் படைப்புகளைப் பரவலாக்க, அவரின் புகழை நிலைக்கச் செய்ய அல்ல. கவிஞர் தமிழ்ஒளி முன்வைத்த தத்துவத்தை ஏற்றுச் சமூக, பொருளாதார விடுதலைக்காக நம்மை நாமே அர்பணித்துக் கொள்ளக் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு நமக்கு உதவ வேண்டும்.

"ஒரு சமதர்ம இந்தியாவும், ஒரு சமதர்மத் தமிழகமும் அமையும் காலம் தொலைதூரத்தில் இல்லை. அது அமையும்போது கவிஞர் தமிழ்ஒளி உலகத்தில் முன்னணிக் கவிஞருள் ஒருவராகக் கட்டாயம் இடம்பெறுவார்."

என்று கவிஞர் தமிழ்ஒளி குறித்துப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் கவிஞர் தமிழ்ஒளி கவிதைத் தொகுப்பிற்கு வழங்கிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமதர்ம இந்தியா, சமதர்மத் தமிழகம் அமைந்தால்தானே கவிஞர் தமிழ்ஒளி உலகத்தின் முன்னணிக் கவிஞருள் ஒருவராகக் கருதப்படுவார்?

சமதர்ம இந்தியா, சமதர்மத் தமிழகம் தானாக அமையுமா?

"தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ

தொண்டு செய்யடா

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா

 எல்லாம் பழைய பொய்யடா"

என்று மிகவும் எளிமையாக தனது பாடல் வரிகள் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அறிவுறுத்துகிறார்.

"புதுமை கண்டு வாழ இன்று

போர் செயுந் தமிழ்நாடு-மறப்

போர் செயுந் தமிழ்நாடு-மிக

முதுமை கொண்ட மடமை வீழ

மோதிடும் தமிழ்நாடு"

என்ற கவிஞர் தமிழ்ஒளியின் பாடல் வரிகள் நமக்கு உத்வேகம் தரட்டும்.

சமதர்ம உலகம் படைக்கக் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டில் சபதம் ஏற்போம்.!

- பு.பா. பிரின்சு கஜேந்திரபாபு