buddhaசனாதன இந்தியாவைத் தனது அறிவாற்றல் மூலம் ஜனநாயக இந்தியாவாக மீள் கட்டுமானம் செய்ததில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது. பார்ப்பனியத்துக்கும் பவுத்தத்துக்கும் இடையேயான போராட்டமே இந்திய வரலாறு என்பதை நிறுவி இந்திய வரலாற்றுத் தடத்தில் புதிய திருப்புமுனையை உண்டு பண்ணியவர் அவர். இன்று நாம் கண்டு வரும் பார்ப்பனியத்துக்கும் ஜனநாயகத்துக்குமான போராட்டம் என்பதுகூட இந்த வரலாற்றின் தொடர்ச்சிதான். இங்கு ஜனநாயகத்தின் இடத்தில் பவுத்தத்தைத் பொருத்துகிறார் அம்பேத்கர்.

சமூகத் தளத்தில் இந்துக்கள் ஜனநாயகப்படாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றி வரும் இந்துமதம்தான். சமத்துவமின்மையே இந்து மதத்தின் உள்ளடக்கம். பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கும் வர்ண முறையே அதன் அடியாதாரமான கோட்பாடு. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு (இந்து) சமூகத்திடம் நம்மால் எப்படிச் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியும்?

இந்து மதத்தில் தோன்றி மறைந்த சீர்திருத்தக்காரர்கள், மகாத்மாக்கள் எவரும் வர்ணக் கோட்பாட்டைத் தகர்க்க முற்பட்டவர்களாக இல்லை, காந்தியார் உட்பட! மூட நம்பிக்கையையும், பிற்போக்குத்தனத்தையும் எதிர்த்து மட்டுமே அவர்களால் கிளர்ச்சி செய்ய முடிந்தது. அதிகபட்சமாக அவர்களால் 'தீண்டாமை ஒழிப்பு' பேச முடிந்தது.

அவ்வளவே.! தீண்டாமை என்பது வர்ண/ஜாதி அமைப்பு முறையின் விளைவுதான் என்பதையும், விளைவை எதிர்ப்பதை விடுத்துக் காரணத்தைத் (வர்ணம்/ஜாதி) தகர்ப்பதில்தான் முழுமையான தீர்வு அடங்கியுள்ளது என்பதையும் அவர்கள் உணர மறந்துவிட்டனர். அல்லது உணர்ந்தும் துணிச்சல் இன்றிப் பின்வாங்கி விட்டனர்.

வரலாற்றில் முதல்முறையாக வர்ணக் கோட்பாட்டை உறுதியாக எதிர்த்து நின்று போர் தொடுத்தவர் புத்தர். பவுத்தமும், சமணமும் வேத மதத்தின் வேள்விகளையும், உயிர்ப்பலிகளையும் எதிர்த்து நின்று அஹிம்சையை வலியுறுத்தின என்றாலும் வர்ணக் கோட்பாட்டை புத்தர் அளவுக்கு மகாவீரர் எதிர்த்து நிற்கவில்லை.

பார்ப்பனியத்தின் வெறுப்பு புத்தர் மீதே அதிகம் படிந்திருந்தது. அந்த வெறுப்பு பார்ப்பனிய இலக்கியங்களில் வெளிப்பட்டது. இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பவுத்த பிக்குகள் மிகவும் தரக்குறைவாகச் சித்தரிக்கப்பட்டார்கள். தீண்டாமைக்கான மூலகாரணங்களில் ஒன்றாக பவுத்தர்களின்பாலான வெறுப்பும் இருந்திருக்கக்கூடும் என்கிறார் அம்பேத்கர்.

புத்தர் பார்ப்பனியத்தை எதிர்த்ததோடு மட்டும் நில்லாமல் அதற்கு மாற்றாகச் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறார். புத்தரின் கோட்பாடு பகுத்தறிவை, அறிவியலை அடிப்படையாக கொண்டது. மற்ற மதத் தலைவர்களிடம் இருந்து புத்தர் இங்குதான் வேறுபடுகிறார்.

தன் சொல்லே இறுதியானது என மற்றவர்கள் கூறி வருகையில், தான் சொல்லிவிட்டேன் என்பதற்காகவே ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றத் தேவை இல்லை எனக்கூறி, பகுத்தறிவுக்கும், சுதந்திரச் சிந்தனைக்கும் இடமளிக்கிறார் அவர். புத்தரின் பார்வையில், மதத்தின் நோக்கமானது ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு தொடர்புடையது. மாறாகக் கடவுளை அடைவது மதத்தின் நோக்கமாகாது என்பதே புத்தரின் நிலைப்பாடு.

அவர் ஆன்ம வாதத்தை மறுக்கிறார். பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதனைத் தாழ்வாக நடத்தும் கயமைத்தனத்தை அவர் கடுமையாகச் சாடுகிறார். பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட பெண்களும், தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் சங்கத்தில் சேர்ந்து பிக்குகளாகும் உரிமையை வழங்குகிறார் புத்தர். புத்தரைப் பற்றிப் பொதுவாக நாம் அறிந்து வைத்திருக்கும் செய்திகளில் இருந்து விலகி அவரின் உண்மையான போதனைகளை அறிய முற்பட வேண்டும். சமூக வாழ்வை ஒழுங்கமைக்கும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அறிவியல், பகுத்தறிவு ஆகிவற்றை வலியுறுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்சொன்ன விழுமியங்களை உள்ளடக்கியே பவுத்தம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புத்தரைத் தனது அறிவொளி ஆசானாக ஏற்றுக்கொண்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவரின் பகுத்தறிவுக் கருத்துக்களை இந்திய அரசமைப்பின் அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பினார். தன்னுடைய மதக் கருத்துக்களை காலச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளலாம் எனும் சுதந்திரத்தை வழங்குகிறார் புத்தர். புத்தரின் இதே கருத்தை ஒட்டியே அம்பேத்கரும் "இந்த அரசியல் சாசனம் தவறற்றது என்றோ, இறுதியானது என்றோ இந்தச்சபை முத்திரை குத்தவில்லை... அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு மிகவும் எளிதாக நடைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன." என்கிறார்.

அரசமைப்புச் சட்டவரைவைச் சமர்ப்பித்து ஆற்றிய உரையில் நாடாளுமன்ற நடைமுறைகளைப் பவுத்த சங்கங்களோடு ஒப்பிடுகிறார். அந்த உரையின் சரிபாதி "சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்" ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலே அமைந்திருந்தது. இந்தத் தத்துவத்தைப் புத்தரிடம் இருந்து பெற்றதாக அம்பேத்கர் வேறொரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

அரசியல் தளத்தில் ஜனநாயகத்தை வென்றெடுத்துவிட்ட நாம் "சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை எவ்வளவு காலம் மறுக்கப் போகிறோம்?" எனும் வலிமையான கேள்வியை முன்வைக்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் இந்தக் கேள்விக்கு நாம் இன்னும் நேர்மையான முறையில் பதில் அளிக்க முடியாதவர்களாகத்தான் இருக்கிறோம்.

பேராசான் புத்தரும், புரட்சியாளர் அம்பேத்கரும் சமூக சமத்துவத்தை நிலைநிறுத்தவே தங்களின் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பவுத்தத்தை வழமையான மதங்களில் இருந்து வேறுபடுத்தி அதை ஜனநாயகத்தின் வடிவமாக நமக்கு அடையாளம் காட்டுகிறார் அம்பேத்கர். சமத்துவச் சமுதாயத்திற்கான அறவியல் கருத்துக்களைப் பவுத்தமே வழங்குகிறது என்பதே அம்பேத்கரின் துணிபு.

- சரவணன் பெருமாள்