18 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமையைத் தந்துள்ளது இந்திய அரசியல் சட்டம். ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்துத் தங்களுக்காக நல்லது (வேலை) செய்யும் (வேலைக்காரனை) தலைவனைத் தேர்ந்தெடுக்கும் நாள். அந்த நாளில் மக்கள் செய்யும் அந்த வேலையை சரியாகச் செய்கிறார்களா? என்றால் இல்லையென்பது பல நேரங்களில் விடையாகக் கிடைத்துள்ளது. என்றும் சரியோ! தவறோ! மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கின்றோம், அதை அப்படியே தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்தந்தத் தேர்தலில் நாங்கள் உங்களுக்கான தலைவர்கள், உங்களுக்காக அல்லும் பகலும் அயராதுழைக்க வந்த மாமணிகள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு வேட்பாளர்களாக தேர்தலில் நின்று தோற்றுப் போனவர்கள் பேசும், பேசிய வசனத்தையெல்லாம் கேட்டோம், இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அப்படியென்றால் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் கிடைத்த பதில்களுக்கு உண்மையான பொறுப்பாளி வாக்காளர்கள்தானா? அவர்கள் மேல் இந்தப் பொறுப்பை, பழியைப் பொதுவாகச் சுமத்திவிட்டு அமைதியாக கடந்து சென்றுவிடலாமா? அவ்வாறு செய்தால் அது சரியா?

ஆம் அதற்கும்‌ காரணம் மக்கள்தான் என்று நாம் சொல்வோமேயானால், நாம் இன்னும் முட்டாள்கள் என்று சொல்வதைத்தவிர வேறுவழியில்லை. ஆனால்! நாம் அவ்வாறு முட்டாள்களாகவே இருப்பதற்கு நாம்தான் பொறுப்பாளியா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் இப்படி நம்மை முட்டாள்களாகவே வைத்திருக்க நம்மை ஆண்டவர்கள், நாமெல்லாம் தலைவர்கள் என்றும்! ‘’நம்மையெல்லாம் இவர்கள்தான் காப்பார்கள்” என்று நம்பிக்கை வைத்து இன்றும் தலைவா! தலைவா! என்று, கோசம் போட்டுக் கொண்டிருக்கின்றோமே! அவர்கள்தான் காரணம் என்பதை நாம் எப்போது உணர்ந்தோம்! அல்லது உணர்வோம். ‘’ஆம் இதற்குக் காரணம்” நம்மை ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் மட்டும்தான் என்று சொல்வோமா! ஏனென்றால் “அவர்களிடம்தானே உச்ச பட்ச அதிகாரம் உள்ளது” என்று சொல்லி அவர்களைப் பொறுப்பாளிகளாக்கி விடலாமா? அவ்வாறு செய்தால் அதுவும் சரியா? நாம் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தமர்ந்தவர்களிடம்தான் நாம் நினைக்கின்ற அல்லது சொல்கின்ற அந்த அதிகாரம் உள்ளதா? இல்லை, அப்படியென்றால், அப்போ அந்த அதிகாரம் உண்மையில் யாரிடம்தான் உள்ளது.

‘’நம் நாடு நல்லரசாக இல்லாமல்! வல்லரசாக ஆக வேண்டும்! என்ற குரல் அடிக்கடி கேட்குமே! அதுபோல் உலகில் நல்லரசாக இல்லாமல், வல்லரசாக உள்ள அதிகாரத்தின் உச்சியில்! அதன் திமிரில்! எதற்கும், யாருக்கும் கட்டுப்படாமல் “பெரியண்ணன்” என்ற மனப்பான்மையில் உள்ள நாடுகளும், அதுபோன்ற நாடுகளின் தலைவர்களின் மிரட்டல்களுக்கும் உருட்டல்களுக்கும் அவர்கள் “கையில் கோல் வைத்திருக்கின்ற குரங்காட்டி என நினைத்து, பயந்து மிரள்வதும், உருள்வதோடு, மட்டுமல்லாமல் கூடவே” இந்தியாவில் தொழில் செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடமும் பயந்து கூனிக்குறுகி நடக்கின்ற நமது தலைவர்களைப் பார்க்கும்போது, அதிகாரம் யாரிடம் உள்ளது! நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லி கோட்டைக்குச் சென்றவர்களிடம்தான் அந்த அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் நமக்காக வேலை செய்வார்கள்! என்று, இவர்களிடம் அதை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது நமக்குப் புரியும்.

இன்றைய தேதியில், இங்கே தேர்தல் என்ற ஒன்று நடப்பதே மிகப்பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. அதன் காரணமாகத்தான் பல அமைப்புகள் தேர்தலில் பங்கேற்பதுமில்லை, வாக்களிப்பதுமில்லை. பொதுவாக அவர்களுக்கு தேர்தல் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கையில்லை. அதற்குள் நியாயம் இல்லையென்று அதை அப்படியே ஒதுக்கிவிடவும் முடியாது. இன்றைய இந்த தேர்தல் நடைமுறைகளும் அதன் விதிகளையும் பார்த்தால்,

‘’இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களில் வாழும் தேசிய இனங்களின் கூட்டு” அல்லது ஒன்றியம். அதன் சட்டப்படி, சடங்குப்படி, சம்பிரதாயப்படி 18 வயதை அடைந்த ஒவ்வொரு நபரும் தவறாமல்வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் முன்! நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையோ, அதிகாரமோ, எந்த சாதாரணக் குடிமகனிடம் உள்ளது. நம்மில் ஒருவராக! நம்மோடு நமது இன்ப துன்பங்களில் பங்கேற்று! இவர் நமக்கானவர் இதுபோன்றவர்கள் நமக்கானத் தலைவர்களாக வந்தால், இவர்களுக்கு நம்மைப்பற்றித் தெரியும். நமது பகுதியில் நாம் வாழும் நமது சுற்றிடங்களில் என்ன பிரச்சனை என்று தெரிந்து அதற்கேற்றாற்போல் செயல்படுவார்கள். ஆகவே நம்மில் ஒருவரை நாம் நமக்கானத் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெறும் இந்தத் தேர்தலில் நாம் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம் என்கின்ற நிலை நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கின்றதா? ஆம் இருக்கின்றது, என்று “தலைவர்” என்று சொல்லிக்கொள்ளும் யாரையாவது சொல்லச் சொல்லுங்கள். முடியுமா? யார் யாரோ வருவார்கள். நான்தான் உங்களுக்கான வேட்பாளர் என்பார்கள். அல்லது மாநிலக் கட்சியின் தலைவரோ, தேசியக் கட்சியின் தலைவரோ வருவார்கள்! இவர்தான் உங்களின் வேட்பாளர்! ‘’இவரை நீங்கள் வெற்றிப் பெறச்செய்தல்” இவர் உங்களுக்காக மாடாய் உழைப்பார், ஓடாய் தேய்வார் என்றெல்லாம் வசனம் பேசியதை நம்பி நாமும் வாக்களிப்போம்.

தேர்தல் முடிவுகள் வரும்! ‘’அப்போ பார்த்தால் வேறு ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமரும்” என்னடா இது! ‘’நாம் வேறு ஒருவருக்கு வாக்களித்தால் இங்கே வேறு ஒருவர் அல்லது வேறு ஒரு கட்சி ஆளுகின்ற உரிமையைப் பெற்றுள்ளதே” அதெப்படி என்று நினைத்தால்! ஆரம்பத்தில் கள்ள ஓட்டுப் போட்டார்கள். அப்போது இந்த அறிவுக்கொழுந்துகள் செய்த கேலிக்கூத்து என்னவென்றால்! தங்களின் விருப்பப்படி கணக்கில்லாமல், கள்ள ஓட்டுப் போட்டதால் அந்தத் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக வாக்குப் பதிவு நடைபெற்று நாட்டு மக்கள் கைக்கொட்டி சிரித்த கதைகளும் உண்டு. இல்லையேல் வாக்குப்பெட்டியைத் திருடுவது, அதுவும் இல்லையேல் இவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என்று ‘’இவர்கள் நினைக்கின்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் தகராறு செய்து வாக்குப்பதிவு நடைபெறாமல் தடுப்பதும், அதுவும் இல்லையேல், அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாமல் நாம் செய்த அயோக்கியத் தனங்களுக்கு மக்கள் நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலை வரும்போது அடித்தக் கொள்ளையில் வந்தப் பணத்தை வாக்குக்குக் கொடுத்து வெற்றி பெறுவோம். ‘’இந்தச் செயலின் மூலம் மக்களையும் குற்றவாளிகளாக்கிவிடலாம்” என்று செயல்படும் இந்த அரசியல்வாதிகளின் செயல்கள்.

சரி! நாம் ஒரு தலைவரை நினைத்து வாக்களித்ததைப்போல் மக்கள் அனைவரும் அதேக்கட்சி அல்லது அந்தத் தலைவரே நாட்டை ஆள வேண்டுமென்று வாக்களித்திருக்க வேண்டுமல்லவா? ஆகவே பெரும்பான்மையான மக்கள் நாம் ஓட்டுப்போட விரும்பாதவரை அவர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நினைத்தால் அதுவும் இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் பதிவான மொத்த வாக்குகளில் 69 விழுக்காடு ஓட்டு தங்களுக்கு எதிராகவும், வெறும் 31 விழுக்காடு ஓட்டு மட்டுமே தங்களுக்கு ஆதரவான வாக்கைப்பெற்ற ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறதே அது எப்படி? ஏன் என்று கேள்வி கேட்டால், அதுதான் இந்தியாவின் தேர்தல் முறை என்கிறார்கள். தேர்தலில் பங்கேற்று எந்தக் கட்சி அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அதுதான் தேர்ந்தெடுத்த இந்திய ஜனநாயகத் தேர்தல் முறை! அதுதான் இந்த நாட்டின் மக்களுக்கும், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்கும் முறை” என்றெல்லாம் சொல்லுகிற நடைமுறை உள்ளதென்று சொல்லுகின்றபோது,

பெரும்பான்மை மக்களின் வாக்கைப் பெறாத ஒரு கட்சி, எப்படி ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்? இல்லை அதுதான் இந்திய தேர்தல் முறை என்றால் அப்போ மக்களின் உரிமைக்கு அவர்களின் ஓட்டுக்கு என்ன மரியாதை? பிறகு, எதற்கு இந்தத் தேர்தல்? இதில் ஏதோ தவறு இருக்கிறதென்றால் அதை மாற்றுவதுதானே சரியாக இருக்கும். ஆம்! அதை மாற்ற வேண்டும். யார் மாற்றுவார்களென்றால், தப்பான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் முடியுமாம். இவர்கள் எப்படி மாற்றுவார்கள் பாருங்கள்.

சரி இது போய்த்தொலையட்டும். நம் பகுதியில் வெற்றி பெற்ற நமது பிரதிநிதி நமக்கானத் தேவைகளை இந்தப் பகுதியின் குறைகளை நிவர்த்தி செய்வார் என்று பார்த்தால்! தொகுதிப் பக்கமே வருவதில்லை. அப்படியே என்றாவது ஒருமுறை நம்ம தொகுதி வழியாக எங்கேயாவது செல்லும் போது வழியில் மடக்கிப் பிடித்து மக்கள் கேள்வி கேட்பார்கள். ‘’நீங்கள் தொகுதிப் பக்கமும் வருவதில்லை, எந்த நல்லதும் இதுவரை செய்ததில்லை. ஆனால் எங்களுக்கு கெடுதல்களை உண்டு பண்ணுகின்ற திட்டங்களையாவது வராமல் இருக்கும் படி செய்திருக்கக் கூடாதா? குறைந்தபட்சம் அதை எதிர்த்தாவது குரல் கொடுத்திருக்கக்கூடாதா என்று கேட்டால்” ‘’அது நான் சார்ந்த கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதை மீறி என்னைப்போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார்கள் நமக்கானத் தலைவர்கள். ‘’அய்யா,” ‘’உங்க கட்சி தலைமை அல்லது தலைவர் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்யறது ஒரு பக்கம் இருக்கட்டும்” இந்த தொகுதி மக்களுக்கெல்லாம் நீங்கதானே தலைவரு. உங்களை நம்பித்தானே நாங்களெல்லாம் உங்களுக்கு ஓட்டுப்போட்டோம் நீங்க இந்த மக்களுக்கான தலைவர்தானே உங்களைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளின் தலைவர்தானே உங்கள் கட்சியின் ஆட்சியின் தலைவர், அவர் இதுபோன்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு அதன் மூலம் மக்களின் தேவைகளை அறிந்து அதைப் பூர்த்தி செய்வதைத் தவிர்த்து தனியாக, அதென்ன கட்சி, தலைவரின் கொள்கை தலைவரின் விருப்பம் அதன் படிதான் நீங்கள் செயல்படுவீர்கள் என்றால் அது தலைகீழாக இல்லையா? என்கின்ற இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலேதுமில்லை. இதுபோன்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைமையின் செயல்பாடுகளும் இவ்வாறு இருக்கும்போது இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். சரி வரும் தேர்தலில் நாம் ஓட்டே போடக்கூடாது என்று நினைத்தால்! ஓட்டுப் போடாதவர்களைப் பற்றியெல்லாம் இந்தத் தேர்தல் ஜனநாயகத்தில் கவலையில்லை. ‘’ஓட்டுப் போட்டவர்களில் பெரும்பான்மை வாக்கைப் பெற்றவர்கள் நாட்டை ஆள்வார்கள் என்கிறார்கள். அதான் குறைவான வாக்கைப் பெற்றவர்கள்தானே தொகுதியில் அதிக எண்ணிக்கைப் பெற்று ஆள்கிறோம் என்கிறார்கள். இது என்ன கேலிக்கூத்து!

சரி இந்த தேர்தல் முறை இருக்கின்ற வரை இதில் நமக்குப் பிடித்தவர்களை இதே முறையில் தேர்ந்தெடுப்போம் என்றால் அப்படியும் விட்டுவிட மாட்டோம் எங்களுக்கு எதிராக வாக்களித்தாலும், அதையெல்லாம் எங்களுக்கே அனைத்து வாக்குகளும் பதிவாகும்படி ஓட்டு எந்திரத்தையே மாற்றும் வித்தை எங்களிடம் உள்ளது. நாங்கள் மக்களைப் பற்றியெல்லாம் கவலைப் படுகிற, அவர்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது, நல்லது செய்வோம் என்று மறந்தும் செய்கிற அல்லது நினைக்கின்றவர்கள் நாங்கள் இல்லை. அதேபோல் நீங்கள் ஓட்டுப் போட்டுத்தான் வெற்றிபெற வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை என்கின்ற கூட்டங்கள், அரசியலில் நாங்கள் மக்களுக்கானத் தலைவர்கள்! என்று நாட்டில் வேசம் போட்டு சுற்றிக் கொண்டிருக்கும்போது அப்பாவி பொதுமக்கள் அனைவரும் என்ன செய்வது.!

நல்லவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்து ஆட்சிக்கு வந்து இந்த மக்களுக்கு தேவையானதை செய்யும் அரசியல் சூழ்நிலை வருவது எப்போது? அது தானாக நடக்குமா? நடக்காது அதற்கான வழியைத் தேடுவோம் தப்பானவர்களை திருத்தவெல்லாம் முடியாது. ஏனெனில் அதிகாரத் திமிர் உள்ளவர்களை ஏதுமற்ற அப்பாவி மக்களால் என்ன செய்ய முடியும். சரியான அதிகாரம் மக்கள் கையில் இல்லாதவரை அதைப்பெறும் வழிையக் காண்போம் அதைப் பெறும்வரை போராடுவோம்...