vetriselvan book on dravidamதிராவிடக் கருத்தியல் தோன்றிய காலம் தொட்டே அவற்றின் மீதான பொய்கள், திராவிடத் தலைவர்கள் மீதான கட்டுக்கதைகள், திராவிட இயக்க வரலாற்றை முலாம் பூசி பரப்புதல் போன்ற செயல்களைச் சனாதனச் சக்திகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் குறிப்பாகச் சமூக வலைதளங்களில் உண்மைச் செய்திகளுக்கும், திரிபுச் செய்திகளுக்கும் வேறுபாடு தெரியாமல், ஆராயாமல் பெரும்பாலும் திரிபுச் செய்திகளே தொடர்ச்சியாகப் பலராலும் பரப்பப்படுகின்றன.

இயந்திரமயமான உலகில் பொறுமையாக, அதிகப் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வாசிப்பதற்கு புதிய வாசகர்கள் தடுமாறுகின்றனர். இதனால் பல நேரங்களில் புத்தக வாசிப்பைத் தவிர்ப்பதையும் காணமுடிகிறது. காலத்தின் தேவை கருதியும், உண்மையான திராவிட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஆதாரத்தோடு கொண்டுசேர்த்தலின் அவசியத்தை உணர்ந்தும், வரலாற்றுச் செய்திகளை இந்நூலாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர் வெற்றிச்செல்வன்.

திராவிடச் சொல்லின் பயன்பாடு, அரசுப் பணி, கல்வி, பெண்ணுரிமை, பள்ளிகளில் மதிய உணவு, இந்து அறநிலையச் சட்டம், வருணாசிரம ஒழிப்பு, சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ் வளர்ச்சி, சட்டத் திருத்தம், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஈழ மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், சமத்துவம், சமூகநீதி போன்ற பல்வேறு தளங்களிலும் திராவிட இயக்கச் செயல்பாடுகள் ஆதாரங்களோடு தொகுக்கப்பட்டுள்ளன.

“சுருங்கச் சொல்லி விளங்க வை” என்ற பழமொழிக்கேற்ப அவசியமான செய்திகளைக் கொண்டு அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். வரலாற்றின் மீதான நம் கண்ணோட்டத்தை மீண்டும் மீண்டும் ஆராயச் சொல்லி அதன் அவசியத்தை ஒவ்வொரு செய்தியும் வலியுறுத்துகின்றது.

திராவிடக் கருத்துகள், இயக்கங்கள், செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து பொய்ப் பரப்புரைகள் செய்யும் சனாதனச் சக்திகளுக்கும், ஆரிய அடிவருடிகளுக்கும் சவுக்கடி தருகிறது கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல். ”திராவிடம் பற்றிய திரிபு வாதங்கள் திட்டமிட்டே கட்டவிழ்த்து விடப்படும் இன்றையச் சூழலில், இந்நூல் பல உண்மைகளை உரத்துச் சொல்கிறது” என்று நூலைப் பற்றிய அறிமுகத்தில் கூறுகிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். திராவிடம் அறியாதவர்கள் அறியவும், அறிந்தவர்கள் தெளியவும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் “திராவிடம் அறிவோம்.”இது போன்ற இன்னும் ஆயிரம் ஆயிரம் வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் வெற்றிச்செல்வன் தொடர்ந்து தொகுத்து புத்தகமாக்க வேண்டும்.”

- செ.சுரேஷ்குமார்

நூல் கிடைக்குமிடம்:

122/130, என்.டி.ஆர். தெரு,

ரெங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24.

044-42047162, 9994113558

நூலாசிரியர் அறிமுகம்

இந்நூலாசிரியர் வெற்றிச்செல்வன் பெரியாரிய-அம்பேத்கரியச் சிந்தனையாளர். பேராசிரியர் சுபவீயை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும், ‘கருஞ்சட்டைத் தமிழர்’ மின்னிதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார். ‘விடுதலை’, ‘தி இந்து (தமிழ்)’, ‘உண்மை’, ‘கைத்தடி’, ‘பெரியார் பிஞ்சு’ உள்ளிட்ட இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன.