அண்மையில் மறைந்த தோழர் ஜோதிபாசு இந்தியப் பொதுமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். சி.பி.எம். கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். இறுதிவரை அதன் தலைவர்களில் ஒருவராய் இருந்தவர் என்ற முறையில் அக்கட்சி தொடர்பான மதிப்பீடுகள் அனைத்தும் அவருக்கும் பொருந்தக் கூடியவையே.

      இந்தியப் பொதுமைக் கட்சியின் (சிபிஐ) தலைமை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவான பாதையில் சரிந்து சென்ற போது அதை எதிர்த்துக் கலகக் கொடி உயர்த்திய தலைவர்களில் ஜோதிபாசுவும் ஒருவர். இந்தக் கலகத்தின் ஏரணத் தொடர்ச்சியாக சிபிஎம் பிறந்தபோது மேற்கு வங்கத்தில் கட்சி அணிகளிலும் வெகுமக்களிலும் மிகப் பெரும்பான்மையினர் சிபிஎம் தரப்பிற்குச் சென்றதற்கு ஜோதிபாசுவின் தலைமை ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது.

      1967 தேர்தலுக்குப் பின் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவைகளில் துணை முதலமைச்சராக இருந்தபோதும் கூட ஜோதிபாசுவிடம் போர்க்குணம் வற்றிவிடவில்லை. மாநில அரசுகளை இந்திய அரசுக்கு எதிரான போராட்டக் கருவிகளாகப் பயன்படுத்துவது என்ற கொள்கை அப்போது சிபிஎம் கட்சிக்கு இருந்தது. உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ஜோதிபாசுவே மாநில அரசை எதிர்த்துப் போராடியது போன்ற நிகழ்வுகள் பிற்போக்காளர்களுக்கு எரிச்சலூட்டியது உண்மை.

      1969-75 காலக்கட்டத்தில் இந்திராகாந்தி ஏவிய அரைப் பாசிச அடக்குமுறைக்கும், 1975-77 காலக்கட்டத்தின் நெருக்கடி நிலைக் கொடுங்கோன்மைக்கும் முகங்கொடுத்து இயக்கத்தை கட்டிக் காத்தவர் ஜோதிபாசு. 1977 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசு தோற்ற பின், அதே ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெற்றது. ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்றார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி அனைத்து அரசியல் கைதிகளையும் இடது முன்னணி அரசு விடுதலை செய்தது. அது தன் அதிகார எல்லைக்குள் மக்கள் நல நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டு மக்கள் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொண்டது. ஆனால் இடது முன்னணி அரசு இந்தியப் பிற்போக்கு அரசின் கொள்கைகளைச் செயலாக்கும் முகவாண்மை நிறுவனமாகிப் போயிற்று. இந்திய அரசமைப்பில் மாநில அரசு இப்படித்தான் இருக்க முடியும் என்பது உண்மை. இத்தகைய மாநில அரசில் பங்கேற்க வேண்டிய தேவை என்ன? என்ற வினாவிற்கு சிபிஎம் தலைமையிடம் விடை இல்லை.

      எப்படியாவது மாநில அரசைத் தக்க வைத்துக் கொள்ளும் அணுகுமுறையின் வாயிலாக சிபிஎம் கட்சியை முழுக்கப் பதவி அரசியல் கட்சியாகச் சீரழித்ததில் ஜோதிபாசுவின் பங்கு முகாமையானது. அவர் கால் நூற்றாண்டுக் காலம் முதலமைச்சராக இருந்தார் என்பது புரட்சிகர இயக்கத்தின் பார்வையில் வேதனையே தவிர சாதனையன்று. உலகமயம் தனியார்மயத்துக்கு வக்காலத்து வாங்குவதும், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைப்பதும், தொழிலாளர் போராட்டங்களை எதிர்ப்பதும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவதுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவின் கழிசடைத்தனங்கள் அனைத்துக்கும் ஜோதிபாசுவே மூலவர்.

      சிபிஎம் கட்சியின் சீரழிவுக்கு அதன் இந்தியத் தேசியப் பித்துதான் அடிப்படைக் காரணம். இந்தப் பித்தினால்தான் கொள்கையிலும் நடைமுறையிலும் அது இந்திய ஆளும் வர்க்கத்தின் வாலாகிப் போயிற்று. இது இடது பக்கம் மட்டுமே ஆடும் வால் என்று வேண்டுமானால் சிபிஎம் கட்சியினர் பெருமை கொள்ளலாம். இந்திய அரசுக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பைத் தவறவிட்டது கட்சி செய்த இமாலயத் தவறு என்ற ஜோதிபாசுவின் புலம்பல் அவரும் அவரது கட்சியினரும் இந்தியத் தேசியம் சார்ந்த பதவி அரசியலில் எந்த அளவுக்கு மூழ்கிப் போனார்கள் என்பதைப் புலப்படுத்தும்.

      சிபிஎம் கட்சியின் அரசியலை வகுத்துச் செயல்படுத்தியவர்களில் ஒருவர் என்ற முறையில் ஜோதிபாசுவைத் திறனாய்வு செய்வது ஒருபுறமிருக்க, அவரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிலவற்றை ஈண்டு பதிவு செய்ய வேண்டும்.

      தமிழ்நாட்டில் சிபிஎம் தலைவர்கள் மொத்தத்தில் தமிழுணர்வை மறுதலிக்கக் காண்கிறோம். ஆனால் ஜோதிபாசு நமக்குத் தெரிந்தவரை, வங்க மொழிப் பற்றாளராகவே இருந்தார். வங்க தேச விடுதலைப் போராட்டம் குறித்த அவரது அணுகுமுறையைத் தமிழீழப் போராட்டம் தொடர்பான தமிழக சிபிஎம் அணுகுமுறையோடு ஒப்புநோக்கலாம்.

      இந்திய - இலங்கை (இராசீவ்-செயவர்த்தனா) ஒப்பந்தமும் இந்திய அமைதிப் படை முயற்சியும் தோற்றுவிட்டதாய் அவர் வெளிப்படையாகவே சொன்னார். விடுதலைப் புலிக¼ளாடு பேச்சு நடத்தும்படி அரசை வலியுறுத்தினார். இந்தச் செய்தியை தீக்கதிர் மறைத்தும் திரித்தும் வெளியிட்டது.

      டெலிகிராஃப் ஏட்டிற்கு அளித்த பேட்டியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் தனிநாடாகும் என்றார் ஜோதிபாசு. அண்மையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பது வேறு செய்தி.

      அசாமில் அயலாரை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜோதிபாசு கூறிய ஒரு கருத்து என்றென்றும் நினைவு கொள்ளத்தக்கது.

      “ஒரு நிலப்பரப்பில் குடியேறியவர்கள் அனைவரையும் அவர்கள் எவ்வளவு காலம் முன்பு குடியேறியிருந்தாலும் வெளியேற்றுவது என்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழத் தமிழர்களுக்கு மட்டுமே தகுதியுண்டு.”

      எது எப்படியிருப்பினும் ஜோதிபாசு இந்தியப் பொதுமை இயக்க முன்னோடிகளில் ஒருவர் என்ற முறையில் அவருக்கு நம் செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறோம்.

- தியாகு

Pin It