மாற்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் சாதிகளையும் சமயங்களையும் கண்டறிய நேரம் ஏது?

இப்படியாக ஒரு சாரார் சாதிகளை ஒழிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கையில் மறுபுறம் சாதியத்துவம் தலைவிரித்து ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.அடுத்த தலைமுறையினரான மாணவர்களே இதனைத் தகர்த்தெறிவார்கள் என்ற நம்பிக்கை பலரின் மனதிலும் உண்டு. ஆனால், தங்கும் விடுதிகளிலும், படிக்கும் இடங்களிலும் சாதியினால் பகுத்துப் பார்க்கப்படுவதை யார் அறிவார்? மேலும் கிராமப்புறங்களில் தங்கள் வீட்டிற்கு வேலை புரிய வரும் பெரியவர்களை அவர்களின் பெயரைக்கொண்டோ, தொழிலைக்குறித்தோ அழைக்கும் வழக்கத்தை யார் மாற்றுவார்?

வெளியுலகிற்கும், சமூக வளைதலங்களுக்கும் நல்லவர் வேடமிட்ட பலரும் தங்கள் இல்லங்களிலும், வேலையிடங்களிலும் சாதியத்துவத்தை கடைப்பிடிப்பது ஏன்?

தன் பெயரின் பின்னால் தன் படிப்புத் தகுதியை இணைத்த காலம் போய், தன் சாதியை இணைக்கும் காலம் வந்துவிட்டது.

அன்று பெரியார் கூறினார் "“நரக வாழ்வாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரகவாழ்வு மட்டுமல்ல; அதைவிடப் பலகொடிய கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப் பெறுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழிச்சாதி வாழ்வை விட சுகமான வாழ்வு என்று கருதுவேன்”என்று.இன்றோ நரகத்தில் வாழ்ந்தாலும் என் சாதியின் பெயரோடு வாழ விழைகிறேன் என்கின்ற மக்கள் அலாதி.

இப்படியாகச் சாதியையும், சமயத்தையும் வளர்த்து வரும் மக்களின் மத்தியில், தங்களின் பெற்றோரின் பெயரைத் தன் பெயரின் பின்னால் இணைத்துப் பெருமை கொள்ளும் மக்களைக் கண்டு பூரிக்கிறேன். முற்போக்கான வாழ்வின் மூலதனம் அவர்களே என நம்புகிறேன். நாம் அனைவரும் ‘‘சாதிக்குப் பிறந்தவர்கள் அல்ல, சாதிக்கப் பிறந்தவர்கள்’’.