அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்தநாளை கொண்டாடுகின்ற இந்த வேளையில், அவருடைய புகழை அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, இந்தியாவிலுள்ள சாதிகளின் பரிணாமத்தை ஆய்வு செய்து அதனை அழித்தொழிக்கப் பாடுபட்ட ஒப்பற்ற தலைவர், அரசியலமைப்புச் சபையில் மெத்தப் படித்த மேதை என்பதையும் கடந்து இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக ஆகப்பெரிய ஆய்வுகள் பலவற்றைச் செய்து நம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக விளங்கும் அவருடைய பொருளாதார பார்வையை அனைத்து உழைக்கும் மக்களும் அறிந்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

வங்கியும் நாணயமும்

ambedkar 291இந்தியாவை காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசின் காலத்திலேயே நாணயங்கள், அதன் வீழ்ச்சி, நிலைத்தன்மை, நாணய மாற்று, வெள்ளி நாணயத்தில் இருந்து தங்க நாணயத்திற்கு மாறுதல், இரட்டை நாணய முறை என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தனது விரிவான நாணய சீர்திருத்தம் பற்றிய ஆய்வுகளின் மூலமாக எடுத்துரைத்திருக்கிறார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துக்கொண்டிருக்கும்போது 1915இல் இந்தியாவில் ஆட்சி செய்து வரும் "பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி நிதியும் நிர்வாகமும்" என்ற தலைப்பின் கீழ் 42 பக்க ஆய்வுக்கட்டுரைகளை எழுதி அதில் இந்திய மக்களின் வருவாயை எவ்விதமெல்லாம் பிரிட்டிஷ் அரசு பிற நாடுகளுடனான போர், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தவறான செலவு முறைகளுக்கு கையாண்டு வருகிறது என்பதை புள்ளிவிபரங்களோடு எடுத்துரைத்தார்.

இன்றைக்கு வங்கிகளின் வங்கி என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் கோட்பாடுகள், பண மதிப்புகளை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலையாய பணிகளை செய்து வருவதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர் அவர்களே! அவருடைய சிந்தனையின் விளைவாக உருவாக்கியதே இந்தியாவின் ரிசர்வ் வங்கி.

வரியும் வருவாயும்

மக்களை ஆட்சி செய்யும் அரசானது மக்களிடமிருந்து பெறக்கூடிய வரியை பூவிலிருந்து தேனெடுக்கும் வண்டு போல மென்மையாக கையாள வேண்டுமே தவிர அட்டை பூச்சியைப் போல் ரத்தத்தை உறிஞ்சும் விதமாக அமைந்து விடக்கூடாது என்பதை பல இடங்களில் அண்ணல் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

வருவாய்த் துறையின் இன்றியமையாத சிறப்பம்சம் என்பது அதன் நம்பிக்கையே! வருவாய்த் துறைக்கு வருவாய் குறைவு என்பதோ, வருவாய் அதிகம் என்பதோ முக்கியமானதல்ல எவ்வளவு வருவாய் உறுதியாக வரும் என்பதை முன்கூட்டியே கணக்கீடு செய்யும் பணிகளே அதன் அடிப்படையாகும் என்கிறார்.

 ஏனெனில், வருவாய்த் துறையின் நம்பகமான வருவாயின் அடிப்படையிலேயே தான் மக்களுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

 ஒரு நிதி அவை என்பது வெறுமனே வரவு செலவு கணக்கை சமன் செய்யும் பணிக்காக மட்டும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள கூடாது ஒரு நிதி அவைக்கான பிரதான கடமை என்பது மக்கள் நலனுக்காகவே என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென வருவாய்த்துறையைப் பற்றி குறிப்பிடுகிறார்.

அதேபோல விவசாயி செலுத்தும் நிலவரிக்கும், மற்றவர்கள் செலுத்தும் வருமான வரிக்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்னவெனில், விவசாயி மகசூல் நன்முறையில் செய்தாலும் சரி, வறட்சியால் பாதிக்கப்பட்டு மகசூல் பொய்த்துப் போனாலும் சரி அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலவரியை கட்டியே ஆக வேண்டும். ஆனால் அதே சமயம் வருமானம் சம்பாதிக்காத எவரையும் வருமான வரி கட்ட வேண்டும் என நிர்ப்பந்திக்க முடியாது.

இதுபோன்ற பாகுபாடு கொண்ட வரி நிர்ணயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் பெரும்பாலும் நிர்வாகச் செலவுகளை அதிகரித்ததே தவிர சமூக நீதி திட்டங்கள் காரணமாக இருக்காது என்கிறார் .

இதனை 1921- 1922ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மராட்டிய மாநிலத்தில் காடுகளின் மூலமாக அரசுக்கு வரப்பெற்ற வருவாய் 74.9 லட்சம், 1927 -1928இல் வரப்பெற்ற வருவாய் 74 லட்சம்.

 ஆனால் 1921 -22ஆம் ஆண்டில் அரசு அந்த வருவாயை பெறுவதற்காக செய்த நிர்வாகச் செலவு 40 லட்சம், 1927 -1928ஆம் ஆண்டில் செய்த நிர்வாகச் செலவு 48 லட்சமாகும் இதனைக் குறிப்பிட்டு இந்த செலவுகள் எவ்விதத்திலும் வருவாயை உயர்த்த வில்லை இதனை எவ்விதமாக மக்கள் மேல் சுமத்துவது என தம்முடைய கருத்தை புள்ளி விவரத்தின் அடிப்படையில் முன்வைத்து நிர்வாகச் செலவுகளைக் காரணம் காட்டி அரசானது மக்களை வரி சுரண்டலுக்கு ஆட்படுத்தக் கூடாது என்கிறார்.

இந்தியத் தொழிலாளர்கள்

இந்திய நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலைக்கும் உலகத்தின் ஏனைய நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் நிலைக்கும் இருக்கும் ஆகப்பெரிய வேறுபாடாக இருக்கும், தொழிலில் தொழிலாளர்களை பாகுபாடு செய்வதற்கும் தொழிலாளர்கள் சமூகத்தில் பாகுபாடு (Division of labors and Division of labourers ) செய்யப்படுவதற்குமான நுட்பமான அதே சமயத்தில் ஆழமான ஆய்வுகளை செய்து இந்தியாவில் உள்ள மக்களின் நிலை, தொழிலாளர்களைச் சமூகத்தில் அவர்களுடைய வேலையின் காரணமாக பாகுபாடு செய்து அவர்களைச் சமூகத்தில் சமமற்ற படிகளை கொண்ட சாதி, உட்சாதி,கிளைச்சாதி என பாகுபடுத்தி வைத்திருக்கும் நிலையை ஆய்வுகளின் மூலம் வெளியிட்டார்.

இந்த பாகுபாட்டு நிலை குறித்து வட்டமேசை மாநாட்டில் பேசும்போது கூட, இந்தியாவில் உள்ள மக்களின் பாகுபாட்டு நிலை பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசின் ஆட்சியில் கூட சிறிதளவும் மாற்றம் ஏற்படவில்லை, இது பழையபடியே தொடர்வதாகவும் குற்றம் சாட்டினார். பழைய கிழிந்த சட்டையை மாதிரியாக வைத்து புதிதாக தைக்கப்படும் சட்டையையும் ஓட்டையும் கிழிசலுமாக சீனாக்காரனால் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படும் பழமொழிக்கு ஈடாக இந்தியாவில் மக்களிடையேயுள்ள பாகுபாட்டு நிலை காலம்காலமாக தொடர்வதாக எடுத்துரைத்தார் .

 இதுபோன்ற இறுக்கமான சாதி கட்டமைப்புகள் கிராமங்களில் வலுவாக கட்டமைக்கப்படுவதினாலேயே கிராமங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். தனிமனித விடுதலை, தனிமனித உணர்வு, மனித உரிமைகள் மட்டுமே முக்கியமானதே தவிர அதன் கட்டமைப்பு அதற்கு தடையாக இருக்குமாயின் அது உடைத்தெறியப்பட வேண்டும் என வலியுறுத்தியவர் அம்பேத்கர். இது போன்ற விதங்களில் வெளிப்படும் அம்பேத்கரின் முற்போக்குச் சிந்தனைகளை புறந்தள்ளியே காந்தியடிகள் அவர்கள் கிராமங்கள் கிராமங்களாகவே நீடிக்க வேண்டுமென அவரின் சனாதன கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

தொழிலாளர்களின் உழைப்பின் மூலமாக முதலாளிகள் பெறக்கூடிய லாபங்களை தொழிலாளர்களுக்கு ஊதியமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறார். முதலாளித்துவ நிர்வாகம் அரசு நிர்வாகம் ஆகியவை இப்போதும் கூட மேற்கொள்ளக்கூடிய செலவுகளை கட்டுப்படுத்தும் இதற்காக ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து செலவுகளை குறைப்பது போலித்தனமான வெளிப்பாடு ஆட்குறைப்பு நடவடிக்கை என ஆய்வுகளின் மூலம் விமர்சனம் செய்கிறார். சுரங்கத் தொழில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் சேமநலத் திட்ட நிதியை கையாள்வது குறித்தும், ஓய்வூதியம்,சலுகைகள் போன்ற தொழிலாளர்களுக்கான பல அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்து பல்வேறு உரைகளின் மூலம் வெளியிட்டுள்ளார்.

பொருளியலின் மேதை

அமெரிக்காவில் இரண்டு பொருளாதாரப் பட்டங்களையும், இங்கிலாந்தில் ஒரு பொருளாதாரப் பட்டத்தையும் பெற்று எட்வின்கெனான், செலிக்மேன் போன்ற புகழ்பெற்ற பொருளியல் மேதைகளிடம் கற்றுத்தேர்ந்து, ஆர்.சி.தாத்தா ,பெட்ரண்ட் ரஸல் உள்ளிட்ட மிகப் பெரிய பொருளியலாளர்களின் பொருளியல் தத்துவங்களை விமர்சனம் செய்தும் இந்திய மக்களுக்கு ஏற்ற பொருளாதாரத்தை எதிர்வரும் பல நூறு ஆண்டுகளுக்கும் பயன்படும் விதமாக சிந்தித்து தனது ஆய்வுகளை எடுத்துரைத்திருக்கிறார். அதனாலேயே 2017 இல் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தன்னுடைய உரையில், ''பொருளாதாரம் பற்றிய பல்வேறு ஆய்வுகளுக்கு எனக்கு காரணமாக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர்” என்று அறிவித்தார்.

ஒரு நாடு இயங்குவதற்கு அதன் வளங்கள் எவ்விதமாக பயன்படுத்தப்படவேண்டும், தொழிலாளர்களின் உரிமைகள் எவ்விதமாக நிலைநிறுத்தப்பட வேண்டும், பொது மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள்,

வரி வருவாயை எவ்விதமாக உறுதி பிரதி செய்வது, பெண்களின் நலன், வங்கி நடவடிக்கைகள், பண மதிப்பு, சந்தை பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார ஆய்வுகளை இவ்வுலகிற்கு படைத்து தந்திருக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பொருளாதார ஆய்வுகளை இத்தருணத்தில் அறிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவது அவருடைய அளப்பரிய பணிகளுக்கு நாம் செய்யும் கைமாறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.