உடலில் உள்ள சிறிய, பெரிய மூட்டுக்களையும், அதை சுற்றியுள்ள திசுக்களையும் பாதித்து வீக்கம்,வலி, அசைவின்மை உண்டாக்கும் நாட்பட்ட வியாதியே முடக்கு வாதம்(Rheumatoid Arthritis) ஆகும்.

Rheumatoid Arthritisநடுத்தர வயது பெண்களையே (20-40) இந்த நோய் அதிகமாகத் தாக்குகிறது. இது பரம்பரை நோயாக அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவே. அனைத்து மூட்டுகளும் பாதிக்கப்படலாம் என்றாலும் கை விரல் மூட்டுகள், மணிக்கட்டு, முழங்கை, முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகள் அதிகமாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்படுகின்றன. அதிகாலை எழுந்தவுடன் கை விரல்களின் மூட்டுகளை அசைக்க முடியாமல் அவதிப்படுவது இந்நோயின் முக்கிய அறிகுறியாக உள்ளது.

நோய் வரக் காரணங்கள்

முடக்கு வாதம் ஒரு "தன்னுடல் தாக்கு நோய்" (AutoImmune Disease) என்றே அறியப்படுகிறது. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒரு மனிதனின் வெளிக்கிருமிகளை அழிக்கவல்ல நோய் எதிர்ப்பு சக்தி அவன் உடலின் செல்/திசுக்களையே அந்நியமாக உணர்ந்து அழிக்க முற்படுவதாகும். இந்த மாற்றத்திற்கு வைரஸ் தொற்றோ அல்லது மரபணுவில் ஏற்படும் மாற்றமோ காரணமாக இருக்கலாம் என தற்போதைய ஆய்வுகளால் கூறப்படுகிறது.

முதலில் இந்த நோய் மூட்டு இணைப்பு திசுக்களில் ஆரம்பித்தாலும் காலப்போக்கில் மூட்டினைச் சேதப்படுத்தி மேலும் உராய்வின்போது நிகழும் தேய்மானத்தால் அந்த மூட்டு அதன் இயக்கத்தை இழந்து நாட்பட்ட வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது, மூட்டு பாதிப்பு மட்டும் இல்லாமல் உடற்சோர்வு, இரத்த சோகை மற்றும் உடலில் சிறு சிறு தடுப்புகள் ஆகியவையும் பிரதானமாக இருக்கலாம்.

நோயைக் கண்டறிவதும் உறுதி செய்வதும்

நோய்க்கான அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் எலும்பு,மூட்டு மருத்துவரையோ (Orthopaedician) அல்லது மூட்டு இணைப்புத்திசு மருத்துவரையோ(Rheumatologist) அணுக வேண்டும். இரத்த சம்பந்தமான பரிசோதனைகளும், நோயின் அறிகுறிகளுமே முதன்மையான கண்டறியும் முறையாக உள்ளது. X-ray/MRI போன்றவை சில சமயம் நோயை உறுதி செய்யப் பயன்படுகின்றன.

மருத்துவ முறைகள்

சர்க்கரை நோய் (Diabetes), உயர் இரத்த அழுத்தம் (HyperTension) போல முடக்கு வாத நோயும் ஒரு கட்டுப்படுத்தக்கூடிய நாட்பட்ட நோயே ஆகும். பல மாதங்கள் அல்லது வருடங்கள் இந்த நோயின் தாக்கம் இருந்தாலும் திடீரெனத் தாக்கம் வெகுவாகக் குறைந்து வலியின்றி இருக்கும் நிலையும் வரலாம். இது Remission என்று கூறப்படும். ஆனால் திரும்பவும் இந்நோய் பாதிக்கும் நிலையும் வரும்.

பாதிக்கப்பட்ட மூட்டுக்கு ஓய்வு ெகாடுப்பது மற்றும் வலியைக் குறைக்கும் வலி நிவாரணி மருந்துகள் நோயின் வீரியத்தைக் குறைக்கின்றன. உடற்செயலியல் துறையின் உதவியோடு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூட்டில் ஏற்படும் மாறுதல்களை குறைக்கிறது. அதிகமான வலி மற்றும் வீக்கம் இருக்கும்போது நோய்க்குண்டான மருந்துகள் வழங்கப்படுகின்றன.

தற்போது மருத்துவத்துறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல புதிய மருந்துகள் நோயின் வீரியத்தைக் குறைவான காலத்தில் வெகுவாகக் குறைத்து நோயாளியைச் சராசரி வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகின்றன. முழுமையாக பாதிப்படைந்து சேதமான மூட்டுகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இறுதி தீர்வாகவும் அமைகிறது.இதனால் இழந்த சமூக வாழ்க்கையை நோயாளிகள் திரும்பப் பெற முடியும்.