Fidel Castro தென் அமெரிக்கக் கண்டத்தின் வடகோடியில், கரீபியக் கடலில் மிதந்து கொண்டு, இன்று உலகை வழிநடத்திக் கொண்டிருக்கும் நாடு கியூபா. சின்னஞ்சிறு நாடான கியூபா, 1500 தீவுகளுக்கு மேல் குழுமிய நிலப்பரப்புடையது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வட அமெரிக்காவின் மியாமி நகரத்துக் கரைகளிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ளது கியூபா. வட அமெரிக்காவின் கீழ் அமைந்துள்ளதால், கியூபாவை அவர்கள் காலணி நாடு என்று குறிப்பிடுவார்கள். நம்மைப் பொறுத்தவரை கியூபா, லத்தீன் அமெரிக்காவின் மகுடமாகத் திகழ்கிறது. கி.பி. 1492இல் கொலம்பஸ் தன் கப்பலின் நங்கூரத்தை கியூபா கரைகளில் வீசியதிலிருந்து 1959 சனவரி வரை, கியூபா ஸ்பானிய காலனியாகவும், அமெரிக்கக் கட்டுப்பாட்டில், பிட்டிசான் பிடியில் எனத் தொடர்ந்து இன்னல்களின் பாதுகாவலிலேயே இருந்தது. விளை நிலங்கள், கனிமங்கள் என இயற்கையின் அரவணைப்பில் இருக்கும் நாடு அது. நூற்றாண்டுகளாகப் பல தாக்குதல்களுக்கும், கொள்ளைகளுக்கும் ஆளானது. உலக ஏகாதிபத்திய நாடுகள் இயற்கை வளங்களைக் குறிவைத்துத்தான் இந்தியா உட்பட அனைத்து மூன்றாம் உலக நாடுகளையும் படை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல, பாடிஸ்டாவின் கைகளில் சிக்கித் தவித்த கியூபாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மக்களை வறுமையில் ஆழ்த்தியது. ஜோஸ் மார்த்தியின் சிந்தனைகளில் உரமேறிய பிடல் காஸ்ட்ரோ (இன்றைய அதிபர்), இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி சூலை 26, 1953இல் மான்கடா படைத்தளத்தை முற்றுகையிட்டு, அதில் தோல்வியைத் தழுவினார். பிறகு அர்ஜென்டீனிய இளைஞரான சே குவேராவை இணைத்துக் கொண்டு, புதிய படை ஒன்றுடன் 1956இல் கிரண்மா கியூபாவை வந்தடைந்தது. போராட்டம் மீண்டும் உருப்பெற்றது. காடுகள், மலைகள், கிராமங்கள் என அந்த நிலப்பரப்பு முழுவதும் வசித்து வந்த மக்களை சந்தித்து, நாட்டின் நிலைமையை விளக்கி, ஆதரவைத் திரட்டியது அந்தப் படை. லத்தீன் அமெரிக்காவின் தனித்த குணாம்சங்களில் இப்படி எல்லாப் பகுதி மக்களையும், இனக் குழுக்களையும் சந்தித்து பிரச்சனைகளின் அரசியலை விளக்கி, அவர்களை அறிவுப்பூர்வமாக அணிதிரட்டுவது நடந்து வருகிறது.

நாடு முழுக்க ஆதரவு அலைவீசத் தொடங்க, 1959 சனவரியில் கியூபா புரட்சிப் படையின் வசமாகியது. அமெரிக்க முதலாளிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். எல்லா நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டன. நில உச்சவரம்புச் சட்டம், மக்களுக்கு நலத்தைப் பிரித்தளிக்க வழிவகை செய்தது. கியூப மக்களின் வாழ்வில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பூத்தது. ஆனால், அமெரிக்காவின் தொடர் தாக்குதல்கள் தொடங்கின. பல கூலிப்படைகளால் 3000க்கும் மேற்பட்ட கியூபர்கள் கொல்லப்பட்டனர். 1962இல் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பிலிருந்து கியூபா விலக்கப்பட்டது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் நடைமுறைக்கு வந்தன. சோவியத்தின் நேசக்கரம் கியூபா நோக்கி நீண்டது. சர்க்கரைக் கிண்ணமான கியூபாவிடமிருந்து, சர்க்கரையைப் பெற்றுக்கொண்டு, பண்டமாற்றாக எரிபொருளை சோவியத் வழங்கியது. எல்லாத் துறைகளிலும், சோவியத் தனது தாராள ஆதரவை வழங்கியது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிறிது காலம் கியூபாவின் அரசாங்கம் மூச்சுத் திணறியது. கியூபாவுடன் வர்த்தக உறவு, தொழில்நுட்பப் பரிமாற்றம் என எந்தத் தளத்திலும் உறவை வைத்துக் கொள்ளக் கூடாது என, உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தும் அமெரிக்காவின் பிடி மேலும் இறுகியது.

Muthukrishan with Cuba ministers 46 ஆண்டுகளாக அமெரிக்காவை ஆண்ட 10 அரசாங்கங்களும் மாற்றமின்றி கடைப்பிடித்த ஒரே கொள்கை கியூபா மீதான இந்தப் பொருளாதாரத் தடை மட்டுமே. இன்று வரையிலும் அது நீடிக்கிறது. இந்த நூற்றாண்டின் வரலாற்றில் வெட்கித் தலைகுனிய வேண்டிய, கோழைத்தனத்தின் உச்சபட்ச செயல் இதுவே. கியூபா பயங்கரமான ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகத் தொடர்ந்து பல அவதூறுகளை அமெரிக்கச் செயலர்கள் கிளப்பி வருகிறார்கள். ஈராக் மீதான கட்டுக்கதையைப் போலவே, கொடூர ஆயுதங்களுக்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவேயில்லை. அமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் 85 சதவிகித ஏற்றுமதியும், 80 சதவிகித இறக்குமதியும் பாதிக்கப்பட்டது. நாட்டின் உற்பத்திக் குறியீடு 35 சதவிகித சரிவில் பயணித்தது. ஆனால், இதையெல்லாம் கடந்து பிடல் காஸ்ட்ரோ மக்கள் ஆதரவுடன் கூட்டு ஆலோசனைகளின் வாயிலாக, புதிய தீர்வுகளை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

வேறு எந்த முதலாளித்துவ நாட்டைக் காட்டிலும் எழுத்தறிவு, கல்வி, சுகாதாரம் எனப் பல தளங்களிலும் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிகளை எட்டி நிற்கிறது கியூப வாழ்க்கை. லத்தீன் அமெரிக்காவின் சராசரி வளர்ச்சி 4 சதவிகிதம் என்றால், கியூபாவின் வளர்ச்சி 11.8 சதவிகிதத்தை எட்டி நிற்கிறது. எங்கும் இல்லாதவாறு சிறு காய்ச்சல் முதல் நுட்பமான அறுவை சிகிச்சை வரை, கியூபா மக்களுக்கு இலவசம்தான். உலகின் தலைசிறந்த மருத்துவர்களும், மருத்துவமனைகளும் கியூபாவில்தான் உள்ளன. புற்றுநோய்க்கு மருந்தைக் கண்டுபிடித்தே தீருவோம் என பிடலின் உறுதியுடன் வருங்கால மனிதகுலத்திற்கான அக்கறையுடனான ஆராய்ச்சிகள், அந்த மண்ணில்தான் நடத்தப்படுகின்றன.

அய்ந்து லட்சம் மாணவர்கள், உயர் கல்வியை இலவசமாகப் பெற்று வருகிறார்கள். பல பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த 17,000 மாணவர்கள், இலவச உயர் கல்வி கற்று வருகிறார்கள். இதில் 12,000 மாணவர்கள் மருத்துவம் பயிலுகிறார்கள். உலகின் 60 நாடுகளில் 27,000 சுகாதாரப் பணியாளர்கள் தன்னலமின்றி பணிபுகிறார்கள். இதில் 2,345 பேர், தற்பொழுது பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் தங்கி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 70,000 பேர் இலவச கண் அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தில் கியூபாவுடன் வெனிசுலாவும் ஒன்றிணைந்து செயல்படுகிறது.

இத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலும், தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளை வழிநடத்தும் நாடாக, முன்மாதிரியாகத் திகழ்கிறது கியூபா. இது எப்படி சாத்தியமாகிறது? உலகப் பொருளாதார நிபுணர்கள் இதைப்பற்றி தீராது சிந்தித்து குழம்பிப் போயிருக்கும் வேளையிது. சோசலிசத் தத்துவத்தின் பலம், வழிகாட்டுதலும், மக்களை நேசத்துடனும், நெகிழ்வுடனும் அணுகும் அரசாங்கத்தின் நடைமுறையும்தான் இத்தகைய வெற்றிகளை சாத்தியமாக்கியுள்ளது. இந்த நூற்றாண்டில் வெனிசுலா, பிரேசில், பொலிவியா எனப் பல நாடுகள் கியூபா மாதிரியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. உலகம் முழுவதிலும் இன்னல்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் விதைத்து தோல்வியைத் தழுவி, முதலாளித்துவ ஏகாதிபத்திய அணுகுறை தலைகுனிந்து நிற்கிறது. அந்த ஆத்திரத்தில்தான் கியூபாவை அழித்தொழிக்க, பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்யத் துடிக்கிறது அமெரிக்க வன்மத்தின் வெப்ப அலைகள்.

Karunanidhi, Hindu N.Ram and N.Varadharajan இத்தகையதொரு சூழலில்தான் கியூபா ஆதரவுக்குழுக்கள், உலகம் முழுவதும் உருவாகின்றன. தற்பொழுது 1850 கியூபா நட்புறவுக் குழுக்கள், உலகின் 135 நாடுகளில் இயங்கி வருகின்றன. சென்னையில் சனவரி 20, 21 தேதிகளில் "ஆசிய பசிபிக் பிராந்திய கியூபா ஆதரவு மாநாடு' நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை விலக்கக்கோரி, உலகம் முழுவதிலும் கியூபாவுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது. கியூபா ஆதரவு என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புக் குறியீடாகவும் மாறி வருகிறது எனப் பல பிரதிநதிகள் கருத்து தெரிவித்தனர்.

இம்மாநாட்டைத் தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் எச்சூ, "உலகத்தில் மனிதகுல நாகரிகத்தின் எதிர்காலம், சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் ஆகிய இரண்டுக்கும் இடையேதான் சாத்தியம்' என்ற பிடலின் வரிகளை நினைவுபடுத்தினார். உலகில் 358 தனி நபர்கள், பல நாடுகளின் மொத்த வருவாயை விட அதிகமான செல்வங்களைக் குவித்து வைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். கியூபா ஆதரவு என்பது, உலகில் ஒற்றைக் குவிமய்யத்தை உருவாக்க முயலும் அமெரிக்காவின் திட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையாகும் என்றார் அவர்.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கியூபா மக்கள் நட்புறவு அமைப்பின் தலைவருமான செர்ஜியோ கொரே ஹெர்னாண்டஸ் தனது ஏற்புரையில், "கியூபா மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களையோ, போர்களையோ, மரண ஓலங்களையோ ஏற்றுமதி செய்வதில்லை. மாறாக சுகாதாரத்தையும், கல்வியையும், நல்வாழ்வையும் ஏற்றுமதி செய்கிறது' என்றார். உலகம் முழுக்க மாற்றத்தின் அலை வீசுகிறது. அதன் பக்கம் அக்கறையுள்ள மனிதர்கள், மன உறுதியுடன் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள் என்றார்.

கியூபாவின் இந்தியத் தூதர் ஜுயென் கரெட்டெரோ இபானேஸ், அமெரிக்காவின் தடைகளை மீறி, அங்கு வசிக்கும் பல தனி நபர்கள், கியூபாவுடன் தங்கள் உறவையும், ஆதரவையும் தொடர்வதைக் குறிப்பிட்டார். பல தொழில்நுட்பத் தளங்களிலும்கூட பரிமாற்றங்கள் நடந்து வருவதாக அவர் கூறினார். அமெரிக்க மக்கள் பாவம் அப்பாவிகள், அவர்களுக்கு அமெரிக்கத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவது மட்டும்தான் தெரியும். கியூபா பற்றிய உண்மை நிலவரங்களை அவர்களுக்கு விளக்கி, அவர்கள் மனதில் உள்ள தவறான எண்ணங்களைக் களைய வேண்டும். அவர்களின் நட்பையும் ஆதரவையும் நாம் பெற வேண்டும் என்றார்.

பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விவாதங்கள் நடைபெற்றன. கியூபா ஆதரவு இயக்கத்தை உலகம் முழுவதிலும் எப்படி முன்னெடுத்துச் செல்வது; உலக மக்களின் நட்பை எப்படிப் பெறுவது; பெரும் ஊடகங்களில் திட்டமிட்டுப் பரவலாக்கப்படும் கியூபா குறித்த செய்திகளின் அரசியலை முறியடித்து, கியூபாவின் வாழ்க்கையைப் பற்றியும் அதன் சாதனைகள் பற்றியுமான தகவல்களை எப்படிப் பகிர்ந்து கொள்வது எனப் பல தளங்களில் விவாதங்கள் நடந்தேறின. அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் பணியாற்றுபவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, கியூபா ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

"அமெரிக்காவுக்கு எதிரான போரில் கியூபா தனியாக இல்லை. எங்கள் மக்கள் உங்களோடு இருக்கிறார்கள்' என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா. வருகிற மார்ச் முதல் வாரத்தில், அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வரும் தருணத்தில், கியூபாவின் மீதான தடைகளை விலக்கக் கோரி இயக்கங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் அறிவித்தார். இந்தியாவைப் போல, வேறு எந்த நாட்டிலும் கியூபாவுக்கு இத்தகைய ஆதரவு கிடைத்திருக்க வாய்ப்பில்லையென்றார் அவர். கியூபாவுக்கு இந்தியாவிலிருந்து கப்பல்களில் கோதுமையும், துணிமணிகளும், மருந்துகளும் அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும், சூலை 26அய் கியூபா நட்புறவு நாளாக அறிவித்து அன்று, ஆசிய பசிபிக் நாடுகளில் கியூபாவுக்குப் பேராதரவு தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவித்தார் காரட்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கியூபா பற்றிய தனது கவிதையை வாசித்தார் தி.மு.க. தலைவர் . கருணாநதி. வரவேற்புக் குழுவின் தலைவர் என். ராம், தேசிய ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், ஜி. ராமகிருஷ்ணன், வீ. ராஜ்மோகன் போன்றோர், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். நாட்டுப்புறக் கலைகள், நகழ்ச்சிக்குப் புத்துயிர் அளித்தது. பாப்பம்பாடி ஜமாவைக் கேட்ட கியூப பிரதிநதிகள் ஆட்டத்தில் இறங்கினார்கள். கியூபா என்றாலே உலகம் முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொள்வது இயல்புதானே!

Che Guevera photo exibition “இந்திய மக்கள் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பை அளித்து, இந்த மாநாட்டையும் நடத்தித் தந்துள்ளனர். கலை நிகழ்ச்சிகளோடு புதிய நம்பிக்கையை எங்களோடு எடுத்துச் செல்கிறோம். நம்பிக்கை என்பது புரட்சிகர இயக்கங்களிடம் பிரிக்க முடியாத ஒன்று. அவநம்பிக்கை பணக்கார நாடுகளின் சொத்து. நாம் மேலும் மேலும் நம்பிக்கையோடும், காதலோடும் பயணிப்போம்'' என்று நிறைவு நாள் பொது நிகழ்வின் ஏற்புரையில் கூறினார் கொரெ. "கியூப புரட்சி தடுத்து நிறுத்த முடியாதது' என்றார் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்யல் கார்சியா மார்க்வேஸ். அதைப் போலவே, கியூபாவின் புரட்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகமெல்லாம் கியூபாவின் நேசக்கரம் சென்றடைகிறது. சிறந்ததொரு உலகம் சாத்தியமே. யுத்தங்களற்ற அந்த உலகைச் சென்றடைவோம்.

கியூபாவுக்கான ஆதரவு வலிமையடைந்துள்ளது

- கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மய்யக் குழு உறுப்பினரும், கியூப மக்கள் நட்புறவு அமைப்பின் தலைவருமான செர்ஜியோ கொரெ ஹெர்னாண்டஸ்

இவ்வளவு சிரமத்துக்கிடையில், லத்தீன் அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பிற நாடுகளுக்கும் கியூபாவால் எப்படி உதவி செய்ய முடிகிறது? இளம் மருத்துவர், பொறியாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுநர் என உலகம் முழுவதும் சென்று எப்படி உதவி செய்கிறார்கள்?

கல்வியால்தான் இவையெல்லாம் சாத்தியமாகிறது. உலக ஆதரவின் மதிப்பை கியூப நாட்டு மக்கள், மூன்று தலைமுறைகளாக கற்றுணர்ந்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நாங்கள் உலகெங்குமிருந்தும் பேராதரவைப் பெற்றிருக்கிறோமே! சென்னையில் நடைபெறும் கியூபா ஆதரவு மாநாடும் இதன் வெளிப்பாடுதான். நாங்கள் உலகெங்கும் இருந்து பெற்ற ஆதரவை திரும்பச் செலுத்துவதற்கான ஒரு வழிமுறையே இது என்று நினைக்கிறேன். இது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. அமெரிக்கா, கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்து 46 ஆண்டுகளாகிறது. ஆனால், உலக மக்களின் ஆதரவு வரலாறு, இதைவிடப் பழமை வாய்ந்தது. பிற மக்களுடன் முன்னெப்போதைக் காட்டிலும் தற்பொழுது கியூபாவுக்கான ஆதரவு வலிமையடைந்துள்ளது. கியூப மக்களும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஆதரவு இயல்பானதே. ஒவ்வொரு கியூப நாட்டுக் குடும்பத்திலிருந்தும் ஒரு ஆசியரோ, ஒரு மருத்துவரோ, ஒரு ராணுவ வீரரோ அல்லது ஒரு தொழில்நுட்பத் துறை வல்லுநரோ தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காக வேற்று நாடுகளுக்குச் செல்லாதவர் யாரும் இருக்க முடியாது.

இக்கட்டுரையாளர், ஆசிய பசிபிக் பகுதி கியூபா ஆதரவு மாநாட்டின் பிரதிநிதி

Pin It