மாணவப் பருவம் என்பது ஒரு தனி நபரின் வாழ்வில் முக்கியப் பருவம். எதையும் ஏன் ?எதற்கு? என்று ஆராயும் பருவம். பள்ளிக் கல்வியோடு இந்த உலக நடப்பினையும் உற்று நோக்கும் திறன் எட்டிப் பார்க்கும் பருவம். பகுத்தறிவைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளும் பருவம். எந்த ஒரு செய்தியையும் அப்படியே கண்மூடித்தனமாக நம்பாமல்

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. "

எனும் திருவள்ளுவரின் கூற்றைப் புரிந்து பயிற்சி எடுக்கும் பருவம். நம் வாழ்வில் முதல் 20 ஆண்டுகள் நாம் கற்கும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியே எஞ்சியிருக்கப்போகும் நம் வாழ்நாட்களில் நம் வாழ்வை நடத்த பொருளாதார பலம் தரக் கூடியது. அந்த கல்வி கற்கும் பருவத்தில் சமூக நடப்பை, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறித்த பார்வையை நாம் வளர்த்துக் கொள்ளலாமே தவிர்த்து நேரடி அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்தல் நலம்.

"மாணவர்கள் அரசியலில் பிரவேசிக்காமல் இருக்க வேண்டும் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் தங்கள் சமூக விஷயங்களிலும் சுயமரியாதை விஷயங்களிலும் முன்னேற வேண்டியது அடிமைக் கல்வியைவிட முக்கியமானது."என்கிறார் பகுத்தறிவுப் பகலவன் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.

ஏன் தந்தை பெரியார் அவர்கள் மாணவர்களுக்கு நேரடி அரசியல் கூடாது என்கின்றார் என எண்ணிப் பார்த்திடும் போது, அய்யா அவர்களே அதற்கும் பதில் சொல்கின்றார்கள்;

"இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமானமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள்; பின் விளைவை அனுபவித்து, அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றிவிடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகின்றதோ கூட்டம், குதூகலம் என்பவை எங்கெங்கு காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள். வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தியம், அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள். வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழக்கப்படுத்துவதேயில்லை; பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை; அறிவுக்கும், அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழகுவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து, தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாததாகும்".

எவ்வளவு ஆழமானச் சொற்கள்?

வயதுக் கோளாறில் ஒரு செய்தியை பற்றிக்கொண்டு பின் அதில் ஒரு பற்றுதல் போன பின் அதற்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது மாணவர்களின், இளைஞர்களின் குணம், எனவே அறிவு கொண்டு ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய அவர்களுக்கு மாணவப் பருவம் ஏதுவானதல்ல என்றே தந்தை பெரியார் கருதுகின்றார். அதில் முற்றிலும் உண்மையும் உள்ளது.

1965ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் கண்டித்ததும் மாணவர்கள் ஈடுபாடு குறித்தே, ஏனென்றால் மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்கால வாழ்வினை கேள்விக்குறி ஆக்கிவிடக் கூடாது என்ற காரணத்தினால் தான். அதனை இன்று, தமிழர் வாழ்வில் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொண்டு தமிழர்களை ஜாதியின் அடிப்படையில் பிரித்தாளும் ஆரியத்தின் சூழ்ச்சிக்கு ஏதுவாக தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் திரித்துக் கூறுகின்றனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் உண்டு, அந்த மாணவர் அமைப்புகள் அந்த மாநிலத்தின் பிரதான ஒரு கட்சியோடு தொடர்பில் இருக்கும். இணைந்து இயங்கும், அந்தச் சூழல் நம் மாநிலத்தில் இல்லை. மாணவர்கள் அமைப்பு அரசியலை பேசுவது என்பது அவர்கள் எதிர்கால அரசியல் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற போதிலும், அதனை கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகிகள் கவனமாகக் கையாளவும் வேண்டும். மாணவர்கள் அமைப்பைத் தூண்டி விட்டு வலது சாரிகள் நடத்தும் வன்முறைகளை, ஜாதிய படிமங்களின் மீட்டுருவாக்கத்தை நாம ஐஐடி போன்ற கல்வி வளாகங்களில் கண்டோம். விவேகானந்தரை, ராமாயணத்தை பேச அனுமதி ஒரு கல்வி நிறுவனத்திற்குள் உண்டு எனின் அதற்கு நேர் எதிர் சமத்துவ சிந்தனைகள் விதைக்கும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தத்துவங்களை எடுத்துச் சொல்லும் உரிமையும் இடதுசாரி சிந்தனை கொண்டோருக்கு உண்டு என்பதை இந்தச் சமூகத்திற்கு புரிய வைத்திட பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் போன்ற அமைப்புகள் கல்லூரிக்குள் தேவை என்பதை மறுத்திட முடியாது. சமூக அரசியல் பேசுவது மாணவப் பருவத்தில் தேவையானது. ஆனால் நேரடி அரசியல் ஈடுபாடு கொண்டு செயலாற்ற அவர்கள் மனதாலும், சிந்தனையாலும் முதிர்ச்சி அடைய வேண்டி இருக்கின்றது. பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வழக்குகளைச் சந்தித்து தங்கள் கல்லூரி படிப்பினை குறித்த காலத்திற்குள் முடிக்க முடியாது திண்டாடுவதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இன்னும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் அரசியல் கட்சிகள் பற்றிய ஒரு வெறுப்பு தன்மை மாணவர்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. அந்த வெறுப்பே இன்றும் பல மாணவர்கள் தேர்தலில் வாக்கு அளிக்காமல் வெற்று வியாக்கியானம் பேச வைக்கின்றது. இந்தப் போக்கை மாற்றும் நிலையில் மாணவர்களிடத்தில் அரசியல் பேசப்பட வேண்டும். மாற்றம் விரும்புகின்றவர்கள், தாங்கள் தங்கள் மக்களாட்சியின் ஓட்டு போடும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படைத் தெளிவினை, தங்கள் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைவர்களின் வரலாற்றினை, இந்த இனம் கடந்து வந்த வெற்றிப் பாதையை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுவதே இந்நேரத்தில் தேவை. அந்த அடிப்படைப் புரிதலே பின்னாளில் அவர்களின் நேரடி அரசியல் ஈடுபாட்டிற்கு வலு சேர்க்கும். உணர்ச்சிகளின் அடிப்படையில், ஒன்று கூடுவது, பின் போராட்டங்களில் வன்முறையைச் செலுத்துவதும் ஆரோக்கியமான சமூகத்திற்கு ஏற்றது அல்ல. எனவே மாணவர்கள் ஒரு தவம் போன்று கல்லூரிக் காலங்களில் படித்து, அந்த படிப்போடு இந்த சமூக அரசியல் அறிவையும் கற்று, நேரடி அரசியல் களத்திற்கு பின் வருவதே அவர்களின் வளமான அரசியல் பாதைக்கு சரியானதாக இருக்கும்.

The more informed you are, the less arrogant and aggressive you are "

என்பார் கறுப்பின விடுதலைக்குப் போராடிய நெல்சன் மண்டேலா அவர்கள். அந்த அளவில் நிறைய செய்திகளை, சமூக அறிவைப் பெற்றுப் பின் அரசியல் களம் காணும் மாணவர்களே வன்முறையற்ற, திடமான, சமூகத்தை உருவாக்கிட முடியும்.