பிடிக்காதவன் கூட வசதியான சவமாய் வாழ்வதைவிட

பிடித்தவனுடன் ஏழை சம்சாரமாய் வாழவே

வாசல் தாண்டினேன் நான்

நீங்கள் இல்லாமல் நடக்கின்றதே என்ற ஏக்கத்துடனும்

எங்கே வந்துவிடுவீர்களோ என்ற பயத்துடனுமே

நடந்தேறியது எனக்கான திருமணம்

எத்தனையோ கனவுகள் நிறைந்த இந்த வாழ்க்கை

இல்லறம் ஆரம்பிக்கும் முன்பே

இருள் அடிக்கப்பட்டது உங்களால்

அடங்காத உங்கள் சாதி வெறியின் தேடல்

அரசாங்க மருத்துவமனை சவ அறையில்

என்னவனைப் பிணமாய் பார்த்தப் பின்பே முடிந்தது

ஆத்திரத்தின் காரணம் என் மீதான அன்பென்றால்

உங்கள் வீட்டு செல்ல பெண்னை

கைம்பெண்ணாகக் காணத் துணிந்திருக்காதே மனம்

எங்கள் மீதான அன்பை வெளிக்காட்ட

ஆணவக் கொலை செய்ய வேண்டாம் - உங்கள்

ஆணவத்தைக் கொலை செய்யுங்கள்.

- கவிஞர் முகமது அலி