இந்த உலகில் மிகப் பெரியது கடவுள் சக்தி என்று ஒரு சாராரும், இல்லை ! இல்லை ! அறிவியலின் சக்திதான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும், இவை இரண்டும்  இல்லை மனிதம்தான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் கடவுள் சக்தியே மிகப் பெரியது என்று வாழ்பவர்கள் தன் சக மதத்தினரைக் காட்டிலும்  வேற்று மதத்தவனை எவ்வாறு மதிக்கிறார்கள்  என்பதை நாம் தினசரி உலகெங்கும் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மூலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

common sense 600சில மதத்தைப் பின்பற்றுபவர்கள் வேற்று மதத்தவனை இழி சொல் கொண்டு அழைப்பதும், சில மதத்தவர்கள் மற்ற மதத்தின் கடவுள்களைப் பழிப்பதும், சில மதங்கள் தன்னுடைய சொந்த மதத்தவனையே சாதிய ஏற்றத் தாழ்வோடு நடத்துவதும் உலகெங்கும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவா உண்மையான இறை பக்தி? ஏன் இந்த மதம் என்னும் பேரில்  பல  சண்டைச் சச்சரவுகள் வரு கிறது?  மதப்பித்து காரணமா? இல்லை மக்களின் அறியாமையா? எந்த மதத்தின் கடவுள் மற்ற மதத்தவனை இப்படி நடத்து என்று சொல்கிறது? போதாக் குறைக்கு மதமும் அரசியலும் பின்னிப் பிணைந்து சிக்கலாக மாறி இருக்கிறது. 

மியான்மரில் ரோஹிங்கியாக்கள் மீதான இன அழிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்துகிறது புத்த பேரினவாதம். இளைஞர்கள் கொலை, நடுத்தர வயதினர் கைது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வீடுகள் தீக்கிரை என அவர்கள்மீது  நடைபெறும்  வன்முறைகள்  காரணமாக  அவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக  தஞ்சம் அடைந்துள்ளனர். அதே போல சிரியா -ஈராக்கில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதம் தன் சக மதத்தவருக்கே பெரும் சவாலா கவும், உலகின் அச்சுறுத்தல் ஆகவும் இருக்கிறது.

ஆன்மீக தேசம் என்று உலகத்தவரால் அழைக்கப்படும் இந்தியாவிலும் அண்மையில்  மாட்டிறைச்சி உண்ணுதல் தொடர்பாக அடிதடிகளும் , கொலையும் நடந்துள்ளது. மதங்களில், கடவுள்களில் யார் பெரியவர் என்ற போட்டி உலகம் முழுவதும் இந்த  நூற்றாண்டிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய சோகம். அன்பை விதைக்க வேண்டிய இடத்தில் நாம் விஷத்தை விதைத்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் மாற வேண்டுமாயின் மக்களின் அறியாமை இருள் விலக வேண்டும். 

மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும்  ஒவ்வோர் ஆண்டும்  நவம்பர் 16 ஆம் தேதியை உலக சகிப்புத்தன்மை தினமாக  யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகெங்கும்  கொண்டாடப் படுகிறது. இந்த நாளில்  மக்களிடையே சகிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரும் மற்றவரின் அடிப்படை உரிமை, கருத்துகள், சுதந்திரம், கலாச்சாரம், மத நம்பிக்கை போன்றவற்றை அங்கீகரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதையும்  இத்தினம் வலியுறுத்துகிறது. 

சக மனிதனை மதிப்பதை விட பெரிய மதமோ, கடவுள் நிலையோ, அறிவியலோ இருந்து விட முடியாது. நாம் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்பதன் முதல் நிலையே சக மனிதனை மதிப்பதே. ஆகவே அனைவரும் சக மனிதர்களை மதிப்போம், மனித நேயம் காப்போம்.

- வியன் பிரதீப்