kuthoosi gurusamy 300“நான் சோதிடப் புலி,” என்றார், ஒருவர்! “எத்தனை ஆடுகளை விழுங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார், மற்றொருவர்.

சோதிடத்தை நம்புகின்ற ஆட்டுப் புத்திக்காரர்கள் அதிகமாயிருப்பதனால் தான் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் சோதிடத்துக்குத் தனிப் பக்கம் ஒதுக்கி வைத்திருக்கின்றன.

நடந்ததைத் சொல்வது சோதிடமல்ல! அதனால் பயனுமில்லை. நடக்கப் போவதை முன்கூட்டிக் கூறுவது தான் சோதிடம்! “நம் தலை விதிப்படித்தானே நடக்கும்”, என்கிறவனுக்கும், “கடவுள் வகுத்ததை யார் தான் மாற்ற முடியும்?” என்கிறவனுக்கும் தன் வருங்காலத்தைப் பற்றிக் கவலையே இருக்க முடியாது.

வருங்காலத்தை முன் கூட்டிக் கூறக் கூடிய சோதிடத்திற்கு (அப்படி ஒன்று இருந்தால்) யாரும் மரியாதை செலுத்துவார்கள்!

அபிசீனியா மீது இத்தாலி பாய்ந்த போது தமிழ்நாட்டில் சோதிட நிபுணர்களுக்கு ஒரு பரீட்சை வைத்தது, “ஆனந்த விகடன்” பத்திரிகை. எல்லா நிபுணர்களும், “அபிசீனியாதான் வெற்றி பெறும்,” என்று கூறினார்கள்! நேர்மாறான முடிவுக்குப் பிறகு முகத்தில் கரியைப் பூசிக் கொண்டார்கள்!

காந்தியார் இன்ன மாதிரித்தான் முடிவடைவார் என்பதைப் பற்றி, நேரத்தையும் நாளையும் குறிக்காவிட்டாலும், மாதத்தைக் கூடக் குறிப்பிடவில்லையே, உலகத்திலுள்ள எந்த சோதிடனும்? அது விஷயத்தில் கிரகங்கள் சோதிடர்களோடு பேசவில்லை! அங்காரகன், சனி, சுக்கிரன் - ஆகிய ஆட்களெல்லாம் “அண்டர் கிரவுண்ட்” போய்விட்டனர்!

எந்தச் சோதிடமும் வரப்போகிற சங்கதியைச் சொல்வதேயில்லை! சொல்ல முடியாதபடியால்!

அமெரிக்க ஆணுக்குண்டு விழப்போகிறது என்று அன்று ஜப்பான் காரர்களுக்குச் சோதிடர்கள் கூறியிருந்தால், எத்தனை ஆயிரம்பேர் பிழைத்திருப்பார்கள்? அது மட்டுமா?

இதோ! அஸ்ஸாமில் பெரிய நில நடுக்கம், ஏராளமான உயிர்கள் சேதம். கால்நடைகள், பயிர்கள், வீடுகள் எல்லாம் அழிந்த விட்டன. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனவாம்.

இந்தச் சங்கதியை ஜாடையாகவாவது அஸ்ஸாம் சோதிடரில் எவனாவது (அவனும் நில நடுக்கத்திற்கு இரையாகி யிருந்தாலும் இருக்கலாம்!) சொல்லியிருக்கலாகாதா?

வங்காளத்தில் பட்டினிச் சாவு ஏற்பட்டபோது கூட இந்தச் சோதிடம் எங்கேளோ மறைந்துவிட்டது!

சோதிடம் சோம்பேறிக்குத்தான்! பேராசைக்காரனுக்குத் தான்!

அறிவுக்கும் சோதிடத்துக்கும் அணுவளவு சம்பந்தமுமில்லை.

“நீர் எவ்வளவு தான் லஞ்சம் கொடுத்தாலும் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை,” என்று முன் கூட்டியே யாரோ ஒரு பூந்தி ஜோஸ்யன் சொல்லி விட்டால், ஒவ்வொரு அரசியல் தியாகிக்கும் எவ்வளவு ருபாய் மிச்சமாகும்?

“உமக்கு எத்தனை வைத்தியர் சிகிச்சை செய்தாலும், நீர் இந்தப் புற்று நோய்க்கு இரையாகி, அழுகிச்சாக வேண்டியதுதான்” என்று எந்த ஒரு ஜோசியனாவது “பகவான் ரமண ரிஷிக்கு”ச் சொன்னானா?

“நீர்! எத்தனை கோடி டாலர் வாங்கிவந்தாலும் உம் கட்சி உருப்படியாகாது! இந்த நாடு கம்யூனிஸ்ட் வசந்தான் போகப்போகிறது!” என்று சியாங்கே ஷேக்கிடம் எவனாவது ஒரு சோதிடன் கூறியிருந்தால், அமெரிக்காவுக்கு எவ்வளவு டாலர்கள் மிச்சமாகியிருக்கும்?

சோதிடத்தை மிக அழுத்தமாக நம்புகிறவன்கூட எத்தனையோ சமயங்களில் நம்ப மறுக்கிறான்.

சோதிடம் என்பது சொக்கட்டான் மாதிரி! ஒரு பொழுது போக்கு! தாமாஷ்! அவ்வளவு தான்!

- குத்தூசி குருசாமி (22-8-50)

நன்றி: வாலாசா வல்லவன்