kuthoosi gurusamy2கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். கதர்ச்சட்டை, கருப்புச் சட்டை, கம்யூனிஸ்ட், நாஸ்திகர், ஆஸ்திகர், அரை ஆஸ்திகர்-யாராயிருந்தாலும் அவருக்கு ஒன்றுதான்! சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விடப் பல்லாயிரம் மடங்கு பாரபட்சமற்றவர்! இதற்காக யாரும் அவரைப் பற்றி சோதனை செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை.

ராஜ வாழ்த்துப் பாடாதவனுக்குக் கூட ராஜாவின் நீதிகள் வழங்கப்படும்! “இனிப்பே உன்னால் எனக்குக் களிப்போ!” என்று வெல்லத்தைப் போற்றிப் பாடாதவனுக்குக்கூட வெல்லம் இனிப்பைத்தான் தரும்! வெல்லத்தைப் போற்றித் துதிக்காதவனுக்கு வெல்லம் வேப்பங்காயாயிருப்பதில்லை!

நம் சுயமரியாதைத் தோழர்களுக்கு ஏதாவது சுறுசுறுப்பான வேலை இருந்தாலொழிய முடியாது போலிருக்கிறது. எனக்குக்கூட பல ஆண்டுகள் அப்படித்தானிருந்தது. ஓய்வு நேரத்தில் சைவக் கூட்டங்களிலாவது போய்க் கேள்விகள் கேட்டால்தான் மனத்துக்குத் திருப்தி! “கற்பூரம் செய்யக் கற்றுக் கொடுக்காத நம் கடவுள்களுக்கு அந்தக் கற்புரத்தைக் கொளுத்துவதில் வெட்கமில்லையா?” என்றாவது ஒரு கேள்வி கேட்டு, ஆஸ்திக சிகாமணிகள் பதில் கூறத் தெரியாமல் விழிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவதில் ஒருவிதமான குதூகலம்! அந்தக் காலத்தில்! சிறு பிள்ளை தானே?

இந்த மாதிரிப் பல தோழர்கள் கிராமாந்திரங்களில் கிளம்பியிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஒவ்வொன்றும் விசித்திரமாயிருக்கிறது! கருப்புச்சட்டை யணிந்துகொண்டு, “பெரியார் வாழ்க! சுயமரியாதை இயக்கம் வாழ்க!” என்று ஒலித்துக் கொண்டு வாயில் பீடியைப் புகைத்தபடியே துரோபதையம்மன் சந்நிதிக்கு முன்பு தீக்குழியில் இறங்கி வெளி வருகிறார்களாம், திராவிட கழகத் தோழர்கள்! பக்தர்கள் திடுக்கிட்டுப்போய், முன்பு பேசிக்கொண்ட ஒப்பந்தப்படியே திராவிடர் கழகத்தில் உறுப்பினர்களாகி விடுகிறார்களாம்!

குளித்தலையிலிருந்து ஒரு புகைப்படம் வந்திருக்கிறது. அடாடா! விபரீதம்! விநோதம்! உடலில் அலகுகளைக் குத்திக்கொண்டு, காவடியின் உச்சியில் பெரியார் படத்துடன் விளங்குகிறார், 19 வயதுள்ள தோழர் ஒருவர்! உடலில் மட்டுமல்ல; காலிலும் கூடக் கருஞ்சட்டை! அவருக்குப் பக்கத்தில் கழகக் கொடி தாங்கி நிற்கிறார்கள் சிலர்! எதிரில் நான்கு சிறுவர் கருஞ்சட்டைகளுடன் கையில் சட்டியேந்தி உட்கார்ந்திருக்கின்றனர். என்ன சட்டி தெரியுமா? தீச்சட்டி!

மூட பக்தியை முறியடிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சி இவர்கள் முகத்தில் பிரசாசித்துக் கொண்டிருக்கிறது!

மூன்று நாள் பட்டினி! தலை முழுக்கு ஆசாரம்! அதிதீவிர பக்தி! கடவுள் சக்தி! கனவில் காட்சி! இத்யாதி குண்டு தளவாடங்களில் ஒன்றுகூட இல்லாமல், கிண்டல் பார்வையோடு காட்சியளிக்கிறார்கள், சின்னஞ்சிறு கழகத் தோழர்கள்!

கண்மூடித்தனத்தைக் கண்டிப்பதற்காக நாமும் அந்த ஆபாசங்களைச் செய்வானேன்? பழனிக்கு என் கூடவே மச்சக்காவடி தூக்கி வா என்றுகூடக் கேட்பார்கள்! இதுதானா நம் வேலை? பக்தியின் பேரால் நடக்கும் பித்தலாட்டங்களை வெளிப்படுத்த வேண்டுமென்றால் அவர்களையே சோதனைக்குள்ளாக்குவது தான் நல்லது!

உதாரணமாக, தீக்குழியில் இறங்கக் கூடிய அதி தீவிர பக்தர்களைக் கூப்பிட்டு அவர்களே தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொள்ளுமாறு சொல்லிப் பாருங்கள்! “ஹிஹ் ஹி! ஹீ!” என்று பல்லிளிப்பார்கள்! உடலில் அலகு குத்திக் கொள்கிற பக்தர்களைக் கூப்பிட்டு, சப்பாத்திப் புதருக்குள் தூக்கி ஏறியட்டுமா, என்று கேட்டுப் பாருங்கள்! குஸ்திக்குக் கூப்பிடப்படும் புரோகிதப் பார்ப்பானைவிட அதிவேகமாக ஓட்டமெடுப்பார்கள்!

சுயமரியாதைக்காரர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. புரோகிதர்களை வைத்து நடத்துகின்ற திருமணங்களுக்கு முன்பு மறியல் செய்யலாம்! அக்கிரகாரங்களில் ஆதி திராவிடப் பொதுக் கூட்டம் நடத்தலாம்! கோவில் மடைப்பள்ளிக்குள் புகுந்து பார்க்கலாம்! அர்ச்சகனைத் தூக்கிச் சுமக்கும் திராவிடத் தோழர்களிடம் கண் ஜாடை காட்டி அர்ச்சகனைக் கீழே இறக்கலாம்! இந்த நாட்டில் சுயமரியாதைக்காரனுக்கு வேலைதானா இல்லை?

குத்தூசி குருசாமி (27-5-50)

நன்றி: வாலாசா வல்லவன்