"ஹிஸ்டரி ப்ரொபஸர், இங்கிலிஷ் ப்ரோபஸர், கணக்கு ப்ரொபஸர், கெமிஸ்ட்ரி ப்ரொபஸர் - என்றெல்லாம் இருப்பதுபோல, என்னை ஏன் பஞ்சாங்க ப்ரொபஸர் என்று நீங்கள் அழைக்கக்கூடாது?” என்று கேட்டார், பழைய பஞ்சாங்கத்தையும் தர்ப்பைக் கட்டையும் அக்குளில் (அடைப்பத்தைப்போல) வைத்திருந்த பஞ்சாபிகேசய்யர்.

kuthoosi gurusamy 300“ஆஹா! கட்டாயம் அப்படித்தான் அழைக்க வேண்டும். இத்தனை நாளாய் அன்னிய சர்க்கார் இருந்தது பாருங்கோ! அதற்கு உங்கள் படிப்பும் பரந்த அறிவும் எப்படித் தெரிய முடியும்? அது தான் ஆகஸ்ட் 15 -ந் தேதியுடன் தொலைஞ்சுதே!”

“ஆமாம், சனியன்! ஆகஸ்ட் 14 நடு இராத்திரியில் அதிகாரத்தை வாங்கிக் கொள்வது நல்லது என்று கூட நான்தான் நல்ல வேளை பார்த்துச் சொன்னேன். நீங்கள் தான் சு. ம. ஆச்சே! நம்புவீர்களோ என்னமோ?”

“சே! சே! நம்பாமலா இருப்பேன்! நல்ல வேளை பார்த்து அதிகாரத்தை வாங்கியதால் தான் இவ்வளவு ஜோராய் ஆட்சி நடக்கிறது? இல்லாவிட்டால் மற்ற நாடுகளில் உள்ளதுபோல, கொலை, கொள்ளை, பெண் சோரம், குத்து, வெட்டு, பஞ்சம், பட்டினி, சண்டை சச்சரவு, மந்திரி பதவி வேட்டை, கள்ள மார்க்கெட், பணக்காரக் கொள்கைக் கூட்டம் போன்ற அக்கிரமங்களெல்லாம் நடக்காதா? ஆனால்
இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக நான் பார்த்திருந்தால், நம் மகாத்மா கூடக் கொல்லப்பட்டிருக்க மாட்டார்!”

“ஓஹோ! கிண்டல் செய்கிறீரோ? அதெல்லாம் நம்மகிட்டே முடியாது ஸார்! நான் ஹிந்து மகாசபை யோன்னோ! நான் பார்த்து நாள் வைத்தால் என் எதிரிகளையும் அழிப்பதற்கான வகையிலே தானே வைப்பேன்!”

“ஆஹா! பேஷாச் செய்யுங்கள்! இந்தத் தொடை நடுங்கி அரசாங்கம் உள்ள வரையில் உங்கள் பாடெல்லாம் யோகந்தான் அய்யரே! இனிமேல் உங்க ராஜ்யம் வந்து விட்டதினாலே உங்களுக்கெல்லாம் அதிக மதிப்புக்கூடத் தருவார்கள்! உங்கள் மனமெல்லாம் குளிர்வதற்காகவே காந்தியார் சாம்பலை புண்ணிய நீரில் கரைத்தார்கள்! இந்தியாவின் முதல் கப்பலை மிதக்கவிடும் போதுகூட வேதம் ஓதச் சொன்னார்கள்! இனிமேல் சட்டசபையில் கூட ஓமம் வளர்க்கச் சொல்வார்கள்! (ஆனால் சிகரெட் புகைக்கக் கூடாது என்பது சிவ ஷண்முகனார் உத்தரவு) உங்களைப்போல் 4 பேர் மந்திரிகளாக வந்துவிட்டால் பள்ளிகளில் மூன்றாவது வகுப்பு முதல் பஞ்சாங்கத்தை கட்டாய பாடமாகக்கூட வைக்கலாமே! இந்த வெள்ளைக்காரன் ஆட்சி வந்து நல்லது கெட்டதுகூட இல்லாமல் போயிட்டுதே! சரியா 10 மணிக்கு பள்ளிக் கூடத்துக்கு வர வேண்டுமாம்! சரியாய் 11 மணிக்கு ஆபீஸ்களுக்கும் கோர்ட்டுகளுக்கும் வர வேண்டுமாம்! குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வண்டியும் விமானமும் புறப்பட்டு விடுகின்றன! எங்கு பார்த்தாலும் ஒரே நாஸ்திகம்! ஒரே சு. ம.! பஞ்சாங்கத்தைக் கட்டாய பாடமாக்கி விட்டால், ராகுகாலம், சகுனம், வாரசூலை, எமகண்டம், யோகம், பட்சி சாஸ்திரம், தசாபலன், கவுளி சாஸ்திரம் எல்லாம் பார்த்து அவரவர் தன் வேலைக்கு வரலாம், போகலாம்! பஞ்சாங்கத்தின்படியே வேலைகூடச் செய்யலாம்!

இந்த முறை ஏற்பட்டால் எவ்வளவு சௌகரியம் பாருங்கள்! ஒரு நீதிபதி, “ஏ! குற்றவாளியே! உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்!” என்று தீர்ப்புக் கூறுவார். அந்தச் சமயத்தில் குற்றவாளியின் வலது காதில் ஒரு பல்லி விழும். “நீதிபதி யவர்களே! இதோ பார்த்தீர்களா? வலது காதில் பல்லி விழுந்ததை!” என்று கூறுவான்.

உடனே நீதிபதி மேஜை மீது வைத்திருக்கும் பஞ்சாங்கத்தைப் புரட்டுவார். அதில் “வலக்காது-தீர்க்காயுசு” என்று குறிப்பிட்டிருக்கும். “சரி! உன்னை விடுதலை செய்கிறேன்! என்று தீர்ப்பளிப்பார்!” என்று கூறினேன் அய்யரிடம்.

“நீங்கள் உண்மையாகக் கூறினாலும் சரி... கிண்டலாகச் சொன்னாலும் சரி! இனிமேல் இந்த நாட்டில் பஞ்சாங்க ஆட்சிதான்! அதாவது, எங்கள் ஆட்சிதான்! அதற்கு ஒத்துவராத எந்த ஆட்சியையும் நொடிப்போதில் கவிழ்த்து விடுவோம்! நாங்கள் பஞ்ச தந்திரம் கற்றவர்கள், தெரியுமோன்னோ! அது கிடக்கட்டும். நீங்கள் என்னதான் சு. ம. பேசினாலும் பஞ்சாங்கத்தில் கூறியிருப்பதைப் பொய் என்று நிரூபிக்க முடியாது!” என்றார்.

“அதெப்படி முடியும்? உங்கள் அடைப்பத்தை அவிழ்த்து அதைக் கொஞ்சம் எடுங்கள்,” என்றேன்.

பஞ்சாங்கத்தை கையில் தந்தார். முதல் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தேன்! அவர் போய்விட்டார், பஞ்சாங்கத்தைத் திருப்பி வாங்கிக் கொள்ளாமலே! ஆகையால் உங்களிடம் படித்து விடுகிறேன், கேளுங்கள்:-

சர்வசித்து வருஷத்துப் பலன்

“சர்வசித்து தன்னில் தலத்தில் பலவும்
இருபதினெட்டு வித்தும் ஓங்கும் - பெருமையுடன்
மிக்க விளைவு உண்டாம், மென்மேலும்மாரி உண்டாம்,
தக்க சுகம் பெருகுந்தான்”

சர்வசித்து வருஷம் முடிவதற்கு இன்னும் 23 நாட்கள் தான் இருக்கின்றன! (16 - 3- 48) இல் எழுதப்பட்டது.)
1. 36 வித்துகள் ஓங்கும்.
2. மிக்க விளைவு உண்டாகும்.
3. மேலும் மேலும் மழை பெய்யும்.
4. எங்கும் சுகம் பெருகும்.

இவ்வளவு உரித்து உரித்து (வெங்காயத்தைப் போல), புட்டுப் புட்டு (இட்லியைப்போல) கூறியுங்கூட நீங்கள் பஞ்சாங்கத்தை நம்பவில்லை யென்றால் நான் தான் என்ன செய்ய முயும்? பங்சாங்க ப்ரொபஸர் பஞ்சாபிகேசய்யரைக் கண்டால் கேட்டுப் பாருங்கள்! எங்கே காணப் போகிறீர்கள்? அவர் தான் “அண்டர் கிரவுண்ட்” (பூமிக்குள் அல்ல, தலை மறைவாக!) போய்விட்டாரே! ஆனாலும் பொறுத்திருங்கள்! என்றைக்காவது தலை காட்டாமலா போய்விடுவார்?

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்