டிசம்பர் 3 முதல் சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் 5 நாட்கள் திரையிடப்படும் ஒரு படம், வெளியாவதற்கு முன்னரே அதுவும் ஒரே தியேட்டரில் மட்டும் 5 நாட்கள் என தீர்மானித்து, திரைப்படம் வெளியிடப்படுகிறது என்றால், அந்தப் படத்துக்கு கூட்டம் வராதா? அல்லது மோசமான திரைப்படமா? இல்ல என்ன தான் காரணம்? பாக்கலாமே.

1991இல் துவங்கப்பட்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம். 9 இந்திய மொழிகளில் வெளியாகி பின்னர் 1998இல் ஆங் கிலத்தில் வெளியாகி மிகநுட்பமான ஆங்கில திரைப்படம் என பாராட்டப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டிக்கும் மற்றும் சிறந்த கலை இயக்குநர் விருதை நிதின்தேசாய்க்கும், சிறந்த ஆங்கிலப் படம் என பல தேசிய விருதுகளை வாங்கி குவித்த படத்திற்கு தமி ழகத்தில் ஏன் இத்தனை புறக்கணிப்பு? 18 வருட கால தாமதம் ஏன்? படத்தின் இயக்குநர் டாக்டர். ஜப்பார் படேல் சிறந்த இயக்குநருக்கான விருதினை ஏற்கனவே பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெயர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் என்பதுதான் புறக்கணிப்பின் பின்னுள்ள முக்கியக் காரணம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பி யின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய சிறந்த திரைப் படத்திற்கு, தலித் மக்கள் தொகையில் இந்தியாவில் மூன்றாவது மாநிலமான இருக்கும் தமிழகத்தில் ஏன் இத்தனை அவமதிப்பு?

அதுமட்டுமல்ல, அம்பேத்கர் சுடர் விருது பெற்றவரும், பெரியார் என தன்னை வர்ணித்துக் கொண்ட கலைஞரின் பொற்கால ஆட்சியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் படத்திற்கு ஏன் இந்த நிலை?

2000களில் சாதி கலவரத்தை காரணம் காட்டி பின்னர் நிதி ஒதுக்காமல் காலம் கடத்தினார்கள். படம் தமிழில் முழுமையாக நிறைவடைந்த பின்னரும் 6 ஆண்டுகள் படப் பெட்டிக்குள்ளேயே முடக்கப்பட்டதன் பின்னணி என்ன? 2007இல் சென்னை உயர்நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிட வேண்டுமென உத்தரவிட்டு 3 ஆண்டுகள் கழித்த பின்னும் திரையரங்குகள் கிடைக்காததன் காரணம் என்ன?

தமிழக திரைத்துறையின் பாசத் தலைவனுக்கு, திரைத்துறையின் புதல்வருக்கு எந்திரன் படம் பார்த்து பாராட்டுவது மட்டுமல்லாமல், பாடல் சி.டி வெளியீட்டு விழாவிற்கு கூட நேரம் ஒதுக்கி தலைமை தாங்கும் முதல் வருக்கு, பெண்சிங்கம் வரை எழுதிக்கொண்டிருக்கும் கலைஞருக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் படத்தை அரசு சார்பில் வெளியிட உத்தரவிட ஏன் மனம் வரவில்லை.

உயர்நீதிமன்றம் மீண்டும் தலையிட்டு ஏன் தாமத மென தலையில் கொட்டி, 15 நாட்களுக்குள் திரைப் படத்தை வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட பின்புதான் ஒரு திரையரங்கில் 5 நாட்கள் என தமிழக அரசு வழிகாட்டியுள்ளது.

சன்பிக்சர்ஸ், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி என தன் பேரன்களுக்கு டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட வேண்டுமென டாக்டர். அம்பேத்கர் சுடர் விருது பெற்ற கலைஞர் கூறியிருக்கலாமே? 1800 க்கும் மேற்பட்ட திரையரங்கம் இருக்கும் தமிழகத்தில் சிலநூறு திரையரங்குகளில் டாக்டர். அம்பேத்கர் படத்தை வெளியிட்டு, கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தால் கலவரம் ஏற்படும் என்று அஞ்சத் தேவையில்லையே! ஏன் செய்யவில்லை?

சென்னையில் ஆடம்பரமான இடமாக கருதப்படும் சிட்டி சென்ட்டரில் மிகுந்த செலவு பிடிக்கும் திரை யரங்கான, அதுவும் அதிகப்பட்சம் 250 இருக்கைகளே கொண்ட ஐநாக்ஸ் திரையரங்கில் இப்படத்தை வெளியிடு வது உயர்தட்டு மக்கள் டாக்டர். அம்பேத்கர் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்ற உயர்ந்த நோக்கமா! அல்லது டாக்டர். அம்பேத்கர் பற்றி சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற சதி நோக்கமா?

அரசு சார்பில் கயைரங்குகளில் பொது இடங்களில் திரையிடப்படும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் திரையிடப்படுமென அரசு ஏன் அறி விக்கவில்லை? திரு. சத்திய சந்திரன் அவர்கள் தொடுத்த வழக்கில் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமாவளவன் கூட பரிந்துரைக்கவில்லையே!

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுக்கா, பழைய பட்டிணம் கிராமத்தில் டாக்டர்.அம்பேத்கர் சிலையை திறப்பதற்கு தடைவிதித்த தமிழக அரசு அவரின் வரலாற்று திரைப்படத்தை எதிர்கால தலைமுறைக்கு கற்றுத்தரும் என நாம் நம்ப முடியாது. அதனால் தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் டாக்டர். அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு இயக்கமாக மக்களிடத்தில் எடுத்துச் செல்ல அறைகூவல் விடுத்து வீதியில் இறங்கு கிறது.

Pin It