தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், வேலூர், திருவண்ணாமலை என 5 மாவட்ட மக்களின் வாழ்வாதரமாக விளங்குவது பாலாறு. கர்நாடகாவின் நந்தி மலை (துர்க்கம்) பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு அம்மாநிலத்தில் 91 கி.மீ.தூரமும், ஆந்திராவில் 45 கி.மீ. தூரமும் ஓடி தமிழகத்தின் எல்லைப் பகுதியான புல்லூர் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் வாய்லூர் வரை 225 கி.மீ. தூரம் ஓடி கடலில் கலக்கிறது.

உற்பத்தியாகும் மாநிலத்தைவிட தமிழகத்தில் அதிக தூரம் ஓடுவதால் தமிழகத்திற்கே பாலாற்றில் அதிக உரிமை உண்டு.

ஆனால் இந்த உரிமைகள் எல்லாம் அண்டை மாநிலங்களால் நசுக்கப்படுகின்றன. பாலாறு மட்டுமன்று

முல்லைப் பெரியாறு, காவிரி என அனைத்து நீர் சிக்கல்களிலும் தமிழகத்தின் உரிமைகள் புறந்தள்ளப் படுகின்றனவ. 1890ல் அன்றைய மைசூர் மாகாண அரசு தமிழகத் திற்கான காவிரி நீரை தடுக்க முனைந்தபோது சென்னை மாகாண அரசு அதைக் கடுமை யாக எதிர்த்தது.

அதன்படி இரு மாகாண அரசுகளுக்குமிடையே வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி காவிரி, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்று நீர் பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவு இன்றி எவ்வித முடிவும் எடுக்கப்படக் கூடாது என்று முடிவெடுக் கப்பட்டது. 1892ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தந்த கர்நாடகமோ, ஆந்திரமோ தற்போது மதிக்கத் தயாராயில்லை.

அதன் விளைவாக காவிரி நீரை கர்நாடகம் தர மறுப்பதும், பாலாற்றின் குறுக்கே கர்நாடகமும், ஆந்திரமும் நூற்றுக்கணக்கான அணைகளைக் கட்டி தமிழகத்தின் நீராதாரத்தை அழிப்பதுமான முயற்சிகள் நடைபெறுகின்றன.

கடந்த 2007ம் ஆண்டு ஆந்திர முதல்வர் ராஜசேகர (ரெட்டி) ஆட்சியின் போது தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியான கணேசபுரம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முடிவெடுத்தது.

தற்போது அதன் தொடர்ச்சியாக ராஜசேகர (ரெட்டி) மறைவுக்குப் பிறகு, தற்போதைய ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அத்தோடு நில்லாமல் அணை கட்டுவதில் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் அணையைக் கட்டியே தீருவோம் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கட்சித் தலைவரும் வாய் திறக்கவேயில்லை. உண்மையில் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உணர்வில் லையோ, அல்லது இதுபோன்ற சிக்கல்கள் நடப்பதே தெரியாதே அளவுக்கு அவர்கள் இருகிறார்களா என்பதே விளங்கவில்லை.

கடந்த காலத்தில் மைசூர் அரசு 1954ல் பாலாறைத் தடுத்து பேதமங்கலம் கரையை 9 அடி யிலிருந்து 18 அடியாக உயர்த்த வும் ராமசாகரில் 2000 மில்லி யன் கன அடி நீரைத் தேக்க அணை கட்ட முயன்றபோது தமிழக விவசாயிகள் காவிரிப் பாக்கத்தில் மாநாடு கூட்டி எதிர்த்துள்ளனர்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி 1955ல் ஆற்காடு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எஸ். அய்யங்கார் தலைமையிலான குழுவினர் சார்பில் பிரதமர் நேரு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டு அணை கட்டுவதை தடுத்து பாலாற்று உரிமையை பாதுகாக்கக் கோரி உள்ளனர்.

மொழிவாரி மாநிலம் பிரிந்த பின்பு பாலாற்றில் நீர் உரிமைகோரிட ஈ.வி.கே. சம்பத் நாடாளுமன்றத்திலும், அறிஞர்அண்ணா சட்டமன்றத்திலும் கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

இப்படியாக பல்லாண்டு காலமாக நம் முன்னோர்கள் தொடங்கி இன்று வரை தமிழகத்தின் நீராதாரம் கேள்விக்குள்ளானதோடு, அதை எதிர்த்துப் போராட்டங்களும் வெடித்தெழுந்துள்ளன.

ஆனால் தற்போதைய தமிழினத் தலைவரோ, தமிழகத்தின் உரிமைகள் குறித்து மறந்தும் பேசத் தயாராயில்லை.

எதிர்க்கட்சித் தலைவருக்கோ, ஓய்வெடுப்பதும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஆளைக் கூட்டுவதுமே அரசியலாகி விட்டது. பாலாற்றங்கரையோரம் 5 சட்டமன்ற உறுப்பினர்களக் கொண்டுள்ள பா.ம.க. வோ தேர்தல் நெருங்குவதால் போராட்டம் நடத்துவோம் என காலம் கடந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க. போன்ற கட்சிகளுக்கு இதுகுறித்து வாய்திறக்கவில்லை.

இத்தாலியைத் தலைமையகமாகக் கொண்ட காங்கிரசோ, காமராசர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என வாய் கிழிய முழங்குகின்றனர். ஆனால் அண்டைமாநிலத்தில் தன் கட்சியைச் சேர்ந்த பொம்மை முதல்வர் ரோசய்யாவுக்கும், அவரின் பரிவாரங்களுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள்.

ஆனால் இதே நிலை ஆந்திராவிலோ, கர்நாடகா விலோ, கேரளாவிலோ உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்தால் அம்மக்கள் அவர்களைஓடஓட விரட்டுவார்கள். நம் தமிழ் நாட்டிலோ இவர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். ஒருவேளை இவர்கள் நேரடியாக எதிர்க்கவோ, அல்லது ஆந்திரம் அணை கட்டுவதை தடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசுக்குத்தான் உண்டு அன்றோ கூறுவார்களா என்றால் அதுவும் கிடையாது.

1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறு சட்டம் கூறுவது என்ன?

மாநிலங்களுக்கிடையோன நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட்டுத் தீர்க்க முடியாது. மாறாக தனியாக ஒரு நடுவர் மன்றம் வைத்து இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம்.

அல்லது நீர் பிரச்சினையை அணுக வாரியம், ஆணையம் அமைத்து மைய அரசே பொறுப்பேற்று செய்யலாம் என்ற இரு விதிமுறைகளைக் கூறுகிறது. ஆனால் இந்த இரு வழிகாட்டு முறைகளுமே இந்திய அரசால் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

குறிப்பாக ஆந்திரம் அணை கட்டும் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேசித் தீர்வு காண உயர்நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் புறந்தள்ளி விட்டு 200 கோடி செலவில் குப்பம் பகுதியில் அணை கட்ட முயல்கிறது ஆந்திர அரசு. இந்த ஆந்திர நீர் பாசன வளர்ச்சிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள நிதி 2000ம் கோடி நீரின்றித் தவிக்கும் தமிழகத்திற்கோ 20 கோடி.

ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பையும் தடவும் இந்திய அரசின் இப்போக்கு ஆந்திரத்தை உற்சாகமூட்டத்தான் செய்யுமே தவிர அணை கட்டுவதை நிறுத்த உதவாது. தற்போது மைய ஆட்சியில்உள்ள காங்கிரசு அரசு தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதனாலேயே தமிழகத்தைப் பற்றி எத்தகைய அக்கறையையும் காட்டியதில்லை.

அத்தோடு தமிழர்கள் பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் என்பதனாலே இந்திய அதிகார வர்க்கம் தமிழகத்தைக் கண்டுகொள்வதேயில்லை. ஆனால் காங்கிரசை விரட்டவும், பார்ப்பனியத்தை எதிர்க்கவும் தலைமை ஏற்ற திராவிடக் கட்சிகளோ இந்த இந்திய தேசிய காங்கிரசுக்கும், இந்திய அதிகார வகுப்பிற்கும் மாறி மாறி பல்லக்குத் தூக்குவதிலேயே குறியாக உள்ளனவே தவிர தமிழகத்தின் நலன் பற்றி துளியும் கவலைப்படத் தயாராயில்லை.

ஏற்கனவே பாலாற்றின் பல முனைகளில் இயந்திரங்களை வைத்து மணல் கொள்ளை அடித்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிய மயக்கத்தில் இருந்தவர்களுக்கு தற்போதைய ஆந்திரத்தின் அணை கட்டும் அறிவிப்பு தேனாகத்தான் இனிக்கும். அணை கட்டினால் இனி கொஞ்சம் கொஞ்சமாக வரும் தண்ணீரும் வராது. அதனால் காலம் முழுக்க வறண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். பாலாற்றை கூறு போட்டு விற்று விடலாம் என்கிற நினைப்புத்தான் தோன்றும்.

இவர்களை நம்பினால் நம் தலை முடி கூட மிஞ்சாது. மேலும் என் தாய்நாடு இந்தியா, நான் இந்தியக் குடிமகன், பாரத மாதா, தேசப் பிதா என்று நாம் கூப்பாடுப் போடுவதாலேயோ, இந்திய அரசாங்கம் ஆற்று நீர் சிக்கலில் தலையிட்டு தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதினாலோயோ இந்தியா ஓடோடி வந்து பிரச்சினையைத் தீர்க்காது. தமிழகத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு இடையூறும் வராது என இந்தியா எண்ணுகிறது.

இந்தியா தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிப்ப தில்லை இன்னும் சொல்லப் போனால் தமிழர்களை இந்தியர்களாக ஏற்கக் கூட இந்திய அதிகார வகுப்புத் தயாராக இல்லை. மாறாக இந்திய அடிமைக ளாகத்தான் கருதுகிறது. ஆந்திரத்தவர்களும் கன்னடர் களும் கூட இந்திய அடிமைகள்தான்.

இதை அவர்கள் புரிந்து கொள்ளாததன் விளைவே நதி நீர் சண்டை உள்ளிட்ட பல்வேறு முரண்கள்.இதன் மூலம் அனைத்து தேசங்களையும் ஒடுக்கி தேசங்களுக் கிடையேயான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி தப்பித்துக் கொண்டிருக்கும் பொது எதிரியை நாம் அடையாளம் காண மறுக்கிறோம்.

அத்தகைய பொது எதிரியான இந்திய ஆளும் வகுப்பை அடையாளம் கண்டு அதனை வீழ்த்துவதற் கான பணிகளை நாம் முன்னெடுக்கும்போது மட்டும் நம் அடிமை விலங்கும் உடையும். தேசங்களுக் கிடையேயான நதிநீர் சிக்கல் உள்ளிட்டப் பல்வேறு முரண்பாடும் களையப்படும்.

Pin It