திருவையாறு தமிழ்க் கல்லூரியைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்று அது, கலை அறிவியல் கல்லூரியாக மாறிவிட்ட தென்றாலும், நீண்ட காலம் தமிழ்க் கல்லூரியாகவே இருந்தது. தமிழ்ப் புலவர்கள், தமிழ் அறிஞர்கள் பலரை உருவாக்கிய கல்வி நிறுவனம் அது.

at_paneerselvamஆனால் 1937 வரையில், அது வெறும் சமற்கிருதக் கல்லூரியாக மட்டுமே இருந்தது என்பதைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தான் கொடுத்துள்ள இடமும், பணமும் சமற்கிருதத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று மன்னர் தன் உயிலில் எழுதிவைத்துள்ளதால், அங்கு அம்மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாக் கூறினார் கள்.

தமிழவேள் கரந்தை உமாமகேசுவரம் பிள்ளையும், திருமணம் செல்வகேசவராய முதலியாரும், அவ்வாறு ஏன் மன்னர் தன் உயிலில் எழுதினார் என்று அறியாமல் கவலை கொண்டனர். உயிலைப் படித்துச் செய்திகளை அறிய முயன்றனர். அது முழுக்க முழுக்க வடமொழியில் எழுதப்பட்டிருந்ததால், அவர்களால் படித்தறிய இயலவில்லை.

தமிழும், வடமொழியும் நன்கறிந்த திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளிடம் அதனைக் கொண்டுபோய்க் கொடுத்து, என்ன எழுதியுள்ளது என்று கேட்டனர். உயிலைப் படித்த ஞானியார் அடிகள் சிரித்தார். ‘அப்படி எதுவும் எழுதப்படவே இல்லையே’ என்றார். ‘இட மும், நிதியும் கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளதை விளக்கினார்.

அதற்கும் அன்று பார்ப்பனர்கள் விடை கூறினர். ‘கல்வி என்றால் சமற்கிருதம், சமற்கிருதம் என்றால் கல்வி. இதில் உங்களுக்கு என்ன குழப்பம்?’ என்று கேட்டனர்.

தமிழவேளும், செல்வகேசவராயரும் அடங்காச் சினம் கொண்டனர். இப்பொய்ம்மையைத் தகர்த்து, தமிழைக் கல்லூரிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினர். விருப்பத்தை நிறைவேற்ற, அரசின் நிர்வாகத்தை அணுக இயலாமல் தவித்தனர். இச்செய்தியைக் சர் ஏ.டி.பன்னீர்செல்வத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

அவர் அப்போது தஞ்சை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். செய்தியறிந்ததும் பதறிப்போன பன்னீர்ச் செல்வம், உடனடியாக அரசின் பார்வைக்கு அதனை எடுத்துச் சென்றார். அவருடைய முயற்சிக்கு உடனே பயன் கிடைத்தது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கித் தமிழும் அங்கு பாடமாகியது. பிறகு, படிப்படியாக அது பல்வேறு தமிழ்ப் படிப்புகளைக் கொண்ட தமிழ்க் கல்லூரி ஆயிற்று.

நீதிக்கட்சியும், திராவிடமும் தமிழ் உணர்வைக் குலைத்து விட்டதாக இன்றும் பலர் பேசித் திரிகின்றனர். ஆனால் நீதிக்கட்சியில் இருந்த, தந்தை பெரியாரின் சீடரான சர் ஏ.டி.பன்னீர்செல்வத்தின் முயற்சியினால்தான், தமிழறிஞர்களின் விருப்பம் நிறைவேறியது எனபதையும், திருவையாற்றுக் கல்லூரியில் தமிழ் ஒலிக்கத் தொடங்கியது என்பதையும் நன்றியுள்ளவர்கள் மறக்கலாமா?

தமிழ் வளர்ச்சிக்குத் திராவிட இயக்கம் என்றும் துணையாக இருந்துள்ளது என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.

(சான்று : திரு க. திருநாவுக்கரசு எழுதியுள்ள “நீதிக்கட்சி வரலாறு”)

*****

பாவலரேறுவின் தெளிந்த பார்வை

தனித்தமிழியக்க அன்பர்கள் சிலர், முதன்மொழி என்னும் ஏட்டில், திராவிட இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும் தரக்குறைவான மதிப்பீடுகளை அவ்வப்போது எழுதி வருகின்றனர்.

ஆனால், தனித்தமிழியக்கத்தைப் பேணி வளர்த்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள், பெரியார் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தனர். சரிந்து வீழ்ந்த தமிழின வரலாற்றை மீண்டும் நிமிர்த்திட்ட இருவரில் தந்தை பெரியார் ஒருவர் என்பதே அவர்கள் கருத்தாக இருந்துள்ளது.

பண்டைத் தமிழர் நாகரிகமும், பண்பாடும் என்னும் திரவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் அவர்களின் நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில் பெருஞ்சித்திரனார் எழுதியுள்ள வரிகளைப் பாருங்கள் :

தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல்காரர்களும், குமுகாயச் சீர்திருத்தக்காரர்களும், எத்தனையோ காரணங்களைத் தத்தம் வரலாற்று அறிவிற்கேற்பக் கூறினாலும், உண்மையான காரணங்கள் இரண்டு. ஒன்று தமிழனின் குமுகாயச் சரிவு; இரண்டு தமிழனின் மொழிச் சரிவு. இவ்விரண்டு சரிவுகளும், ஆரியர்கள் என்று இத் தமிழக மண்ணில் காலடி வைத்தனரோ, அன்றே தொடங்கின. இச் சரிவுக்குத் தடுப்புச் சுவர் கட்டக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழன் முயன்றான். ஆனால் ஆரியத்தால் ஏற்பட்ட சரிவை ஆரியத்தைக் கொண்டே சரிசெய்ய முயன்றதால் தோல்வியே கண்டான். இந்த இரண்டு சரிவுகளுக்கும், இந்நாட்டில் உள்ள சமயங்களே மண்வெட்டிகளாகப் பயன்பட்டன. முதற்சரிவைக் கண்டு காட்டியவர் பெரியார் ஈ.வே.ரா., இரண்டாம் சரிவைக் கண்டு காட்டியவர் மறைமலையடிகளார்.

மேலே உள்ள வரிகளின் மூலம், பாவலரேறு ஒரு வரலாற்றுத் தெளிவை ஏற்படுத்துகின்றார். ஆரியர்களின் பண்பாட்டுப் படையயடுப்பும், அவர்களின் மொழி ஆதிக்கமும்தான் தமிழனின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்பதை அவர் விளக்குகின்றார். நாம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது எவ்வளவு பெரிய புரட்டு.

நாம் ஆரியத்தால்தான் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம் என்பதைத்தானே பெருஞ்சித்திரனாரின் ஆய்வு வரிகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

Pin It