தோழர் செல்வபெருமாள் நினைவரங்கில் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. 30 ஆண்டுகளில் டிஒய்எப்ஐ என்ற தலைப்பில் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.சி. கருணாகரன், இளைஞர் முழக்கமும், இருபத்தைந்து ஆண்டுகளும் என்ற பொருளில் இதழின் முன்னாள் ஆசிரியர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

இளைஞர்களும், இயற்கையும் என்ற தலைப்பில் நம்மாழ்வார் பேசியதாவது:

உலகின் 75 சதவீதமான இயற்கைச்சீரழிவிற்கு அமெரிக்காவே காரணம் இன்றைய தட்ப வெப்பநிலை பெரிதும் மாறியிருக்கிறது. இயற்கையை நாம் பாதித்தால் அது நம்மை பாதிக்கிறது. இயற்கை மாபெரும் சக்தி. தாய் மடியில் உள்ள குழந்தைகளுக்கும், அந்த தாய்க்குமான உறவினைப் போல் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு அமைய வேண்டும் என்று மாமேதை பிரடரிக் ஏங்கெல்ஸ் கூறியுள்ளார். கோவையில் மழை இல்லை, தார் பாலைவனத்தில் வெள்ளம் ஓடுகிறது. ரஷ்ய நாடு வரலாறு காணாத வறட்சியை சந்திக்கிறது, அதனால் அங்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய அந்த நாடு தடை விதித்துள்ளது. லே பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வெள்ளச் சேதத்தால் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் எந்த தேசத்திலும் எதுவும் நடக்கலாம். உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு பசி, பஞ்சம், பட்டினிச் சாவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகளின் புகை, வாகனப் புகை, காடுகள் அழிப்பு, உணவு உற்பத்தி, இரசாயன மயமாக்கம், எந்திரமயமாக்கலால் பூமி சூடாகி கரிவளையம் உருவாகிறது. இதனால் பனிமலைகள் உருகி ஆறாக ஓடுகின்றன. கடல் மட்டம் உயருகிறது. இந்தியாவில் கூட 30 சதவீத மக்கள் கடல் ஓரத்தில் 50 கி.மீக்குள் தான் வசிக்கின்றனர். 5000 வருட நிலவளத்தை நாம் 50 ஆண்டுகளில் அழித்துவிட்டோம். 1952ல் ராக் பெல்லர், போர்டு நிறுவனங்கள் விவசாயத்தை மேம்படுத்துவதாகச் சொல்லி இந்தியா வந்தனர். வறுமை இருந்தால் கம்யூனிசம் வந்துவிடும் என்று பயந்த காங்கிரஸ்காரர்கள் அவர்களைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் உணவுச் சங்கிலியில் முக்கிய கண்ணியான மாடுகளை ஒழித்துவிட நினைத்தார்கள். அதற்கு அவர்கள் வைக்கோலை முதலில் ஒழித்தார்கள். இப்படி உலகெங்கும் இயற்கைச் சமநிலையைக் குலைத்து இயற்கைச் சீரழிவுக்கு காரணம் அமெரிக்க நாடுதான். இயற்கைச் சீரழிவை இன்று தடுத்தால் கூட பழைய நிலை திரும்ப 150 ஆண்டுகள் ஆகும். ஆழிப் பேரலைகளால் 2004ல் பாதிப்பு வந்தபோது எனக்கும் முன்னால் அங்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டவர்கள் வாலிபர் சங்கத் தோழர்கள். எதிர்கால உலகம் இளைஞர்களுக்கே என்பதால் இயற்கையைப் பாதுகாக்க போராட இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.பி. ஜனநாதன்

சினிமாவும் இளைஞர்களும் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் பேசியதாவது:

இடதுசாரி சிந்தனையுள்ளவன்தான் நல்ல செயலின் பின்னால் இருப்பான். கூலி, விலை, இலாபம் குறித்து பேராண்மை படத்தில் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். என் வாழ்நாளில் நான் கண்ட சிறந்த சினிமா இது என்றார் கவிஞர் புவியரசு. உங்களுக்கு ரெட் சல்யூட் என்றார் பி.ஆர். நடராஜன் எம்.பி. இந்த பாராட்டுக்களை விட வேறு என்ன வேண்டும். வலதுசாரி அரசுகளிடம் விருதுகள் பெறுவதை விடவும் இடதுசாரிகளிடம் பாராட்டுப் பெறுவதை நான் விரும்புகிறேன். இன்று சினிமா தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. ஆனால் இதில் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வந்தவன், கழித்துக்கட்டப்பட்டவன், கொள்கைகளோ, உணர்வோ இல்லாதவர்கள் தான் பெரும் பகுதி நிறைந்துள்ளனர். அதற்கு மாறாக சினிமா உலகம் இடதுசாரி சிந்தனையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட வேண்டும்.

லெனின் கூறியதுபோல் இன்று கலையே தொழில் நுட்பமாக உள்ளது. இதுவரை பெரும் செலவு பிடிக்கும் விஷயமான சினிமா தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் செலவு குறைந்து நுட்பம் மிகுந்துள்ளது. எனவே தத்துவார்த்தமான இளைஞர்களை உள்வாங்கும் வாய்ப்பு உள்ளதால் நாம் சினிமாவை அமைப்பாக, இயக்கமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் சாதனையாளர்கள் பலர் பாராட்டுப் பெற்றனர்.

Pin It