ஞாலம் தமிழை எவன் வைத்தாலும்,
ஞாயம் என்னவிதி செய்தாலும்,
காலம் என்னவிடை சொன்னாலும்,
கனிய வேண்டியது தமிழீழம்!

தமிழன் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்,
தாங்கொணாத் துயரம் சூழ்ந்தாலும்,
குமுறி அழுதபடி வீழ்ந்தாலும்,
கொள்ள வேண்டியது தமிழீழம்!

கத்து கடலில் உயிர் கரைந்தாலும்,
காடையோர் கொடுமை தொடர்ந்தாலும்,
(இ)ரத்த நாளங்கள் வறண்டாலும்,
எய்த வேண்டியது தமிழீழம்!

குடிசை யாங்கெணும் எரிந்தாலும்,
குருதி எத்தனை சொரிந்தாலும்,
வெடிமுழக்கம் இனி விரிந்தாலும்,
வெல்ல வேண்டியது தமிழீழம்!

பகைமை பேயரசு புரிந்தாலும்,
பரத தேசம் அதை அறிந்தாலும்,
அகதி ஆயிரவர் குவிந்தாலும்,
அடைய வேண்டியது தமிழீழம்!

அண்டை நாடு துணை வந்தாலும்,
ஆயுதங்கள் பல தந்தாலும்,
கண்டபடி ‘கணை’கள் பாய்ந்தாலும்,
காண வேண்டியது தமிழீழம்!

ஆண்டு பலசென்று முடிந்தாலும்,
அவதியொடு பொழுது விடிந்தாலும்,
கூண்டில் சிறைப்பட்டு மடிந்தாலும்,
கூட வேண்டியது தமிழீழம்!

எந்த முயற்சி மேற்கொண்டாலும்,
இடர்கள் அதனையெதிர் கொண்டாலும்,
வந்த துயர் மீண்டும் வந்தாலும்,
வாழ வேண்டியது தமிழீழம்!

அழல் மிதித்தபடி நின்றாலும்
அடர்ந்த காட்டிடை உழன்றாலும்,
மழலை மாதரை இழந்தாலும்,
மலர வேண்டியது தமிழீழம்!

தென்னிலங்கை சிதறுண்டாலும்,
சிங்களப் பதர் வெகுண்டாலும்,
நன்னிலங்கள் செதில் உண்டாலும்,
நமக்கு வேண்டியது தமிழீழம்!..

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It