திராவிடர் என்போர் பார்ப்பனர்

வரலாறு எழுதப்படும்போது, ஆதிக்கப் பிரிவினர் தமது நலன்களுக்கான அனைத்து உள்ளடக்கங்களையும் அவ்வரலாற்றில் கலந்துவிடுகின்றனர். தமிழர் வரலாறு இந்தச் சதியில் சிக்குண்டதால், தமிழ் இனம் போராடி விடுதலை பெற்றிருக்க வேண்டிய ஒரு நூற்றாண்டு காலத்தை இழந்து நிற்கிறது. திராவிடர் என்ற சொல்லின் உண்மைப் பொருளை மிகவும் தந்திரமாக மறைத்தனர். சில ஆதிக்க சாதியினர் ஃவர்க்கத்தினர், தமிழரல்லாத அவர்கள் தமிழரிடமிருந்து பறித்துக்கொண்ட உரிமைகள் கணக்கிலடங்காதவை.

        திராவிடர் என்ற சொல்லின் உண்மையான பொருள், ’தென்னாட்டு பார்ப்பனர்’ என்பதேயாகும். இதை விளக்க எண்ணற்ற சான்றுகள் உள்ளன. மேலும், திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கிய ‘தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் சபை’ தென்னிந்திய பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரின் சபையே என்பதை விளக்கவும் சான்றுகள் உள்ளன. தந்தை பெரியார் இந்தத் தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் சங்கத்திலிருந்துதான் தமது ‘திராவிட’ அரசியலை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

        இந்த விளக்கங்களுக்குள் செல்லும்முன், ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் தமிழர் மரபு தொடக்கம் முதலே தெளிவுடனும் உறுதியுடனும் இருந்தது என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த இரு பகுதிகளில் இக்கருத்தை விரிவாகக் கண்டோம்.

· அந்தணர் என்போர் அனைவரும் ஆரியப் பார்ப்பனர் அல்லர்.

· தமிழ்ச் சமூகத்தில் வர்க்கத்தால் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட பிரிவினரும் அந்தணராக இருந்தனர்.

· தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில், சாதியத்தை ஆதரிக்கும் கூறுகள் இல்லை.

· சங்க இலக்கியப் பாடல்கள் ஆரியப் பார்ப்பனரை இழிவுபடுத்திப் பாடும் போக்கைக் கொண்டிருந்தன.

- ஆகிய கருத்துகளைக் கடந்த பகுதிகளில் கண்டோம்.

        ’தமிழர் மரபு சாதியம் நிறைந்தது’ என்பது திராவிடம் கட்டிவிடும் கதை அன்றி உண்மையல்ல என்பதை நிறுவவே இந்தச் சான்றுகள் காட்டப்பட்டன. மேலும், ஆரியத்தைத் தொடர்ந்து எதிர்ப்பது தமிழியமே என்பதை இவ்விளக்கங்கள் வலியுறுத்துகின்றன.

        சங்ககாலச் சமூகம் முடிவுக்கு வந்த பின்னர், பிற்கால மூவேந்தர் ஆட்சிக் காலங்களிலும் ஆரியம் கட்டுக்குள்தான் வைக்கப்பட்டிருந்தது. ஆரியப் பார்ப்பனர்களின் அரச உருவாக்கக் கோட்பாட்டு நூலான அர்த்த சாத்திரமும் மனு நீதியின் வருணாசிரமக் கோட்பாடும் தமிழ்ப் பேரரசர்களால் முழுமையாக ஏற்கப்படவே இல்லை.

1. பார்ப்பனர்

2. சத்ரியர்

3. வைசியர்

4. சூத்திரர்

என்ற அதிகாரப் படிநிலை தமிழகத்தில் ஒருபோதும் தமிழ் அரசர்களால் கடைபிடிக்கப்படவில்லை.

ஆரியக் கோட்பாட்டை ஆரியப் பார்ப்பனர் சமூக நடைமுறையாக்கியதில் அரசுருவாக்கம்தான் முதன்மைப் பங்கு வகித்தது. அதாவது, அரசுகள் உருவாக்கப்பட்டதில், இந்திய நிலப்பரப்பில் ஆரியப் பார்ப்பனியத்தின் பங்களிப்பே மிகுதியாக இருந்தது. ஆய்வறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா இக் கூற்றைத் தமது ‘உலகாயதம்’ நூலில் விளக்கியுள்ளார்.

        இப்பின்னணியில் தமிழர் அரசு உருவாக்கத்தை ஆய்ந்தால், இங்கும் ஆரியத் தாக்கம் இருந்தது என்பதையும் அதேவேளை ஆரிய மேலாண்மை தமிழகத்தில் கட்டுக்குள்தான் வைக்கப்பட்டிருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

        இதன் விளைவாகவும் பலனாகவுமே, நால்வருண ஆதிக்கப் படிநிலை தமிழகத்தில் முழுமையாகச் செயல்படவில்லை. தமிழர் ஆட்சி நீடித்த வரை இப்போக்கு நிலவியது. தமிழ்நாட்டு ஆட்சியாளராக, பிறமொழியினர் வந்த பிறகுதான் ஆரியக் கோட்பாடு முழுவீச்சில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

 

        தமிழகத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் நிலை குறித்த தமது விரிவான ஆய்வின் முடிவுகளாக ஆய்வறிஞர் மே.து.இராசுகுமார் கூறும் கருத்துகள் சிலவற்றை முன் வைக்கிறேன்.

· ’’பார்ப்பனர் சமக்கிருதத்தைப் படித்தும் வேதங்களை ஓதியும் ஒரு சில வேள்விகளை நடத்தியும் வந்தார்கள் என்றாலும், அன்றாட வாழ்க்கையில் தமிழ் மொழியையே பேசினர்; தமிழைக்கொண்டே வருவாய் தேடி வாழ்ந்தனர்.

· தமிழ்க் கல்வி கற்பிக்க ஊர்கள் தோறும் பள்ளிகள் இருந்தன. ஆனால், பல ஊர்களுக்கு ஒரு சமக்கிருதப் பள்ளி மட்டுமே இருந்ததால், அது உறைவிடப் பள்ளியாகவும் மன்னனது உதவிகளை எதிர்பார்த்ததாகவும் இருந்தது.

· தங்களது தனிப்பட்ட வழிபாடுகளுக்குக் கோயிலில் வடமொழியைப் பார்ப்பனர் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், பொது வழிபாட்டுக்கும் வேளாளர் போன்றோருக்கு வழிபாடுகளை நடத்தித் தந்த போதும் கோயில்களில் தமிழே வழிபடு மொழியாக இருந்தது.

· பக்தி இயக்கத்தில் பங்குகொண்ட பார்ப்பன ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழில் பாடி, இறைவனுடன் ‘கலந்தார்’களேயன்றி, சமக்கிருதத்தில் பாடி இறைவனிடம் ’தொடர்பு’ கொள்ள முயலவில்லை.

· அரசு அதிகாரிகள், படைத் தலைவர்கள் போன்ற உயர் பதவிகளில் இருந்த பார்ப்பனர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

· தமிழ்ச் சமூகம் ஆரியவயப்படுவதற்கு மாறாக, பார்ப்பனர்கள் தமிழ்நிலைப்பட்டிருந்த நிலை இங்கு ஏற்பட்டிருந்தது.

· தமிழ்ச் சூழலில் பார்ப்பனர் செல்வாக்கும் பங்களிப்பும் வரலாற்றாளர்களால் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன.’’ (’சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்’- மக்கள் வெளியீடு-2004, டிசம்பர்- பக்கங்கள் 211 -215)

        இக் கருத்துகளின் அடிப்படைச் செய்தியாக நான் கருதுவது, நான்காயிரமாண்டுகளாகத் தொடர்ந்த ஆரிய-தமிழர் முரணில், சோழர் காலம்வரை, ஆரியப் பார்ப்பனியம் தமிழரை வெற்றிகொள்ளவில்லை என்பதே.

        அதேவேளை, ஆரியக் கூறுகள் தமிழ்ச் சமூகத்தில் தாக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தன என்பதையும், தமிழர் அரசுருவாக்கத்தில் ஆரியப் பார்ப்பனரின் தாக்கம் மிகுதியாக இருந்தது என்பதையும் எனது கருத்தாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

        இந்த நிலைமைகள் எதைக் காட்டுகின்றன? தமிழர் வரலாறு என்பதன் அடிப்படையே, ஆரியத்தை எதிர்ப்பதுதான் என்பதை அல்லவா உணர்த்துகின்றன! இந்த ஆரிய எதிர்ப்பில் தமிழர் கூறுகள் பல சிதைந்து ஆரியக் கூறுகள் மிகுந்ததும் உண்டு; தமிழர் கூறுகளை உள்வாங்கி ஆரியப் பார்ப்பனர் அவற்றைத் தமதாக்கிக்கொண்டதும் உண்டு.

        தமிழர் மரபு ஆரியத்தை ஆதரித்தது எனக் கதைகட்டும் திராவிடக் ‘கோட்பாட்டாளர்கள்’ காலங்காலமாக முன்வைக்கும் குற்றச்சாட்டு, ’சோழர் காலத்தில்தான் ஆரியப் பார்ப்பனர்களுக்கு அளவிலா கிராமங்கள் மங்கலமாக/கொடையாகக் கொடுக்கப்பட்டன’ என்பதாகும்.

        மேற்கண்ட நூலில், சோழர் கால நிலவுடைமை நிலையை ஆய்வு செய்துள்ள அறிஞர் மே.து.இராசுகுமார் இந்தக் குற்றச் சாட்டை மறுக்கும் வகையில் பல சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் முகாமையான சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

        ‘சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பார்ப்பனர்களுக்குக் கொடை யளிக்கப்பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுக்களில் கிடைத்த 1300 ஊர்ப்பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பார்ப்பன ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25மூ மட்டுமே. கோயில் மற்றும் பார்ப்பனர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுக்களில் பெரிதும் இருக்கின்றன. எனவே, கோயில் கல்வெட்டுக்களில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்’ (மேலது நூல்,பக்கம் 214)

· பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மேற்பார்வை செய்வது அரச நடைமுறையாக இருந்தது. அவர்களது நில வருவாய் தணிக்கை செய்யப்பட்டது. கணக்குகளை முறையாக ஒப்படைக்கும்படி பார்ப்பனர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

· அதிகாரிகளுக்கும் படைத் தலைவர்களுக்கும் கொடை நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்களது நிலங்கள் மேற்பார்வை செய்யப்படவில்லை.

· பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் அவர்களுக்கு ஒருபோதும் முழு உரிமை இல்லை. அதாவது, மங்கலமாக வழங்கப்பட்ட நிலங்களை அரசன் அனுமதிக்கும் கால எல்லைவரைதான் பயன்படுத்த முடியும். அதன்பிறகு, கரையோலை முறை எனும் பொதுமுறையின்படி, இடம் மாற்றித் தரப்படும். தொடர்புடைய பார்ப்பனர்கள் அந்தப் புதிய இடம் தேடிச் செல்ல வேண்டும். இதனால், பார்ப்பனர்கள் தொடர்ந்து ஒரு ஊரில் நிலையாக வாழ இயலாமல், நிலம் ஒதுக்கப்படும் ஊர்களுக்கு அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

· முறையாகக் கணக்கு ஒப்படைக்காத பார்ப்பனர்களுக்குத் தண்டத் தொகை விதிக்கப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன - இச் செய்திகளே ஆரிய பார்ப்பனர் சோழர்காலம் வரையிலான தமிழ் மன்னர்களிடம் எந்தளவு செல்வாக்கு செலுத்த முடிந்தது என்பதை விளக்கும் அடிப்படைகளைக் கொண்டுள்ளன.

இவை தவிர, சில மன்னர்கள் ஆரியப் பார்ப்பனருக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், அது தமிழரின் பொதுவான போக்கு அல்ல; விதி விலக்குகள் மட்டுமே என்பதும் எனது கருத்தாகும்.

        வேளாளாராகவும் உள்ள (உழுவித்து உண்ணும்) அரச அதிகாரி, படைத் தலைவர், வேளாளர், ஆரியப் பார்ப்பனர் ஆகிய பிரிவினரில் எவருக்கும் நிலத்தைக் கொடையாக வழங்குவதும் அறம் அன்று. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் உழுது வாழ்ந்த அடித்தட்டு வர்க்கத்தினர் என்பதும், ஆதிக்கப் பிரிவினருக்கான கொடை நிலங்களில் உழைத்தவர்களும் இவ்வடித்தட்டு மக்களே என்பதும் சுரண்டலின் வெளிப்பாடுகள்தான்.

மன்னராட்சி முறையின் உட்கிடை இயல்புகள் இவை. வரலாற்றியல் நோக்கில் எதிர்மறைத் திறனாய்வுக்குட்படுபவை இக்கூறுகள். இக்கட்டுரையின் நோக்கம் ஆரிய - திராவிட ஆதிக்கம் குறித்தது என்பதால் விரிவாக இத்திறனாய்வுக்குள் செல்ல விரும்பவில்லை. அதேவேளை, அரசு நிலங்களை பார்ப்பனரல்லாத பிற ஆதிக்கத் தொழிற்பிரிவினருக்கு வழங்கியது ஞாயம் என்பதல்ல என்பதன்று கருத்து என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆரியப் பார்ப்பனரைக் கட்டுக்குள் வைத்திருந்தனர் தமிழ் மன்னர்கள் என்ற கருத்தை மேற்கண்ட சான்றுகளினூடாகப் பார்க்க வேண்டும்.

        இந்திய நிலப்பரப்பில், ஆரியப் பார்ப்பனர்களுக்கு இந்தளவு வரையறைகளை வைத்து, தண்டத் தொகை விதித்த இனம் வேறு எது? திராவிடம் என்று சொல்லப்படும் ஆந்திரம், கேரளம், கன்னடம் ஆகிய இனங்கள் இத்தகைய வரலாற்றைத் தமக்கென கொண்டுள்ளனவா? ‘திராவிட’ச் சிந்தனையாளர்கள் விடையளிக்க வேண்டும்.

        தமிழர் அரசாட்சிகள் வீழ்ச்சியடையும் வரை, பிறப்பின் அடிப்படியிலான சாதிப் பிரிவு தமிழர்களிடையே இல்லை. வேலைப் பிரிவினையாக, மரபுத் தொழிலாக சமூகப் பிரிவுகள் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தன. அதாவது, பல தலைமுறைகளாக ஒரே தொழிலில் அல்லது தொழில்நுட்பத்தில் ஈடுபடும் பிரிவுகளாக சமூக உற்பத்தி அலகுகள் வளர்ந்திருந்தன. புறத் தோற்றத்திற்கு இது சாதி போலத் தோன்றினாலும், தர்க்கப் பூர்வமாக இவை சாதிகள் அல்ல.

        மேற் குறிப்பிட்ட காலம் வரையில் பொதுவாக,

· குறிப்பிட்ட தொழில் செய்பவர் வேறு தொழில் செய்யக் கூடாது என்ற விதி இல்லை, வற்புறுத்தல் இல்லை, மீறுவோருக்குத் தண்டனை இல்லை.

· பிறப்பின் அடிப்படையில் தொழில் திணிக்கப்படவில்லை.

· கல்வி, பிறப்பின் அடிப்படையால் மறுக்கப்படவில்லை.

- இந்நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே அந்நிலையைச் சாதி என்று கூற முடியும். ஆயினும், சோழர் காலத்தில் வலங்கை, இடங்கை என்ற இரு பெரும் பிரிவுகள் இருந்தன. இப்பிரிவுகளுக்குள்ளான முரண்களும் இணைவுகளுமே அக்கால உற்பத்தியைத் தீர்மானித்தன.

        அடிப்படையில், வலங்கைப் பிரிவு - உழவர், வேளாளர், வண்ணார், நாவிதர், பனை மரத் தொழிலாளர், இடையர் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த, உற்பத்திக்குத் துணை செய்யும் தொழிற் பிரிவுகளாகும். இடங்கைப் பிரிவு - வணிகர், தச்சர், கருமான், கொத்தர், தட்டார், கொல்லர் உள்ளிட்ட வணிகம் மற்றும் கருவித் தொழிற்நுட்ப வல்லுநர் பிரிவுகளாகும்.

        இப்பிரிவுகளில் உட் சுரண்டல் இருந்தது. ஆனால், அது வர்க்கச் சுரண்டல் வகைப்பட்டதே அன்றி சாதிச் சுரண்டல் என்றுகொள்ள இயலாது. சாதிச் சுரண்டல் என்பது பொருளாயதச் சுரண்டல் என்பதைக் காட்டிலும், பண்பாட்டுச் சுரண்டல் ஆகும். அதாவது, வர்க்கத்தால் மேம்பட்டவராயினும் சாதியால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவரை, வர்க்கத்தால் கீழ் நிலையில் உள்ள ஆதிக்க சாதிக்காரர் இழிவு செய்வதே சாதியின் தனித்துவம். இத்தனித்துவத்துடன் தமிழர் மரபில், சோழர் வீழ்ச்சி வரை சாதி நிலவவில்லை.

        ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் அரசவர்க்கத்தினர் சிலருக்கு நெருக்கமாக இருந்துகொண்டு ஆரியக் கருத்தியல் சீர்கேடுகளைத் தமிழர் மரபுக்குள் திணித்த போதும், ஆரியக் கருத்தியலான சாதியத்தைத் தமிழர் முழுமையாக ஏற்கவில்லை. மாறாக, ஆரியச் சுரண்டல் கோட்பாட்டின் வர்க்கச் சுரண்டலைத் தமிழ் மண்ணுக்கேற்ப மாற்றி உட்கொண்டனர். சான்றாக, கோயில்கள் என்பவை அரசியல் முடிவுகளை மக்கள் மீது திணிக்கப் பயன்படுத்தப்படும் இடங்கள் என்பது அர்த்த சாத்திரத்தின் கருத்து.

        தமிழகக் கோயில்களை மன்னர்கள் அரசியற் களமாகவும் நிர்வாகக் களமாகவும் படையெடுப்புகளின்போது அரண்களாகவும் பயன்படுத்தினர். கோயில்களில் ஆரியப் பார்ப்பனருக்கும் சமக்கிருதத்திற்கும் கட்டுக்கடங்கா அதிகாரங்களை வழங்கக் கூறியது அர்த்த சாத்திரம். தமிழ் மன்னர்கள் இதை நிராகரித்தனர். தமிழர் கோயில்கள், அடித்தட்டு வர்க்கத்தினரும் பங்களிப்பு செய்யும் ஜனநாயக மன்றங்களாகவும் திகழ்ந்தன; கலை வளர்க்கும் இடங்களாயின; தமிழ் செழிக்கும் மையங்களாகின. நிலவுடைமைச் சுரண்டலைத் தமிழ் மன்னர்கள் மேற்கொண்டபோது, அச்சுரண்டலை எதிர்த்துக் குடிமக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, சுரண்டலுக்கான நிலங்களைக் கோயில் நிலங்கள் என்ற பெயரில் கையாண்டனர்.

        சங்க இலக்கியங்களில், கோயில்கள் குறித்த தமிழரது கருத்துகள் வியக்கத்தக்கவை. ’கணவன் கோயில் செல்வதாகச் சொல்வதைக் கேலி செய்யும் பெண்’ கலித்தொகையில் இருக்கிறாள். ’ஆரியப் பார்ப்பனர் வளர்க்கும் வேள்வித் தீயில் நனைந்த ஆடைகளை உலர்த்தும் மகளிர்’ பரிபாடலில் உள்ளனர். ஆரியக் கருத்தியல் தாக்கம் பண்பாட்டுத் தளங்களில் ஊடுருவியதன் விளைவாகவும், இயல்பான அரசுருவாக்கத்தின் அங்கமாகவும் கோயில்கள் குறித்த கருத்துகள் தமிழரிடையே மாற்றம் பெற்றன.

        இதுபோன்ற எண்ணற்ற சான்றுகளைக் கொண்டு, ஆரியர் - தமிழர் முரண் வரலாற்றைத் தெள்ளத் தெளிவாக நிறுவலாம்.

        ‘திராவிடம்’ எனும் சொல்லே அல்லது கருத்தே ஆரியத்தை எதிர்க்கும் என்ற முழக்கத்திற்கென என்ன வரலாறு உள்ளது?

        திராவிடர்தான் ஆரியரின் எதிரிகள் என்று முழங்கிவிட்டு, சான்றுகள் காட்டும்போது, தமிழரையே ‘திராவிடர்’ என்று அழைத்து பதுங்கிக்கொள்வது என்பதுதான் கடந்த எண்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் திராவிடக் கோட்பாட்டாளர்கள் செய்துவரும் ‘ஆய்வு’ப் பணி!

        ’திராவிட நாடு என்று நான் சொல்வது தமிழ் நாட்டைத்தான்’ என்றும் தந்தை பெரியார் கூறியுள்ளார். அப்படியெனில், திராவிடர் என்போர் தமிழர் மட்டும்தானா? ஆம் என்றால், நாலாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுப் பெருமிதத்துடன வாழ்ந்து வரும் தமிழருக்கு, திராவிடர் என்ற பெயர் சூட்டும் வேலை எதற்கு? ’திராவிடர் என்றால்தான் பார்ப்பனர்கள் வரமாட்டார்கள். தமிழர் என்றால் பார்ப்பனர்கள் வந்துவிடுவார்கள்’ என்பது அடுத்த பதிலுரை.

        நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஆரியர் எனும் கூட்டம் இந்திய நிலப்பரப்புக்குள் வருவதற்கு முன்பிருந்தே ’தமிழர்’ எனும் அடையாளத்துடன் வாழ்ந்து வரும் இனம் எப்படி தமிழர் என்ற பெயர்க் காரணமாக மட்டுமே, பார்ப்பனர்களை உள்ளடக்கிவிடும்?

        இந்தியாவில் ஆரியத்தின் பெரும் எதிரி இனம், தமிழர் இனமே! திராவிடம் என்ற சொல், ஆரியத்தை எதிர்க்க வந்த சொல் அன்று. மாறாக, ஆரியப் பார்ப்பனியத்தின் மறுவடிவமாக, தென்னிந்திய பார்ப்பனர்களின் மற்றும் தென்னிந்திய உயர் சாதி ஆதிக்கப் பிரிவினரின் சுரண்டலை நிலைநாட்ட, அப்பிரிவினரால் கையாளப்பட்ட சொல்தான் ‘திராவிடர்’ என்பது.

        இதற்கான சான்றுகளைக் காண்போம்.

        ‘’பஞ்ச திராவிடீ எனத் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை அழைத்துக்கொண்டபோது, ’திராவிடம்’ என்ற சொல் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட, துளு நிலப்பகுதிகளைக் குறிக்கிறது’ (’இந்து தேசியம்’ - தொ.பரமசிவன், யாதுமாகி பதிப்பகம் -2009, பக்கம் 14)

        அதாவது திராவிடர் என்போர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழியினத் தாயகங்களைச் சேர்ந்த பார்ப்பனர்தான் என்பது இதன் பொருள்!

        இக் கூற்றை மட்டும் வைத்து ‘திராவிடர்’ என்போர் தென்னிந்திய பார்ப்பனர் மற்றும் ஆதிக்கச் சாதியினர்’ என நான் கூறுதல் போதாமையாகும். ஆகவே, வரலாற்று வழிப்பட்ட சான்றுகள் பலவற்றைக் காண்போம். அதற்குமுன், ’திராவிடர்’ என்றால் அது ஆரிய எதிர்ப்பு என்று உரைக்கும் திராவிடக் கோட்பாடு பிறந்த அமைப்பான தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் சபையின் நிறுவனர்கள் குறித்தும் அவர்களது கொள்கை முழக்கங்கள் குறித்தும் அறிந்துகொள்வோம்.

· நாயக்கர் எனும் சாதி, பட்டர் எனும் ஆரியப் பார்ப்பன சாதியுடன் தொடர்புடையதுதான்!

· திராவிடரான நாயக்கர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் ஆரியப் பார்ப்பனியம் எவ்வாறு செழித்து வளர்ந்தது?

· திராவிடரான நாயக்கர் ஆட்சி, சமக்கிருதம் வளர எப்படித் துணை புரிந்தது? ’இந்துத்துவ வெறி’யை நாயக்கர் ஆட்சி, அரசியலாக்கிய வரலாறு என்ன? இவற்றுக்கான சான்றுகள் இனி வரும்!

(தொடரும்)

Pin It