தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் திருச்சிக்கும், ராசீபுரத்துக்கும் வருவதாக பத்திரிகையிலும், துண்டுப் பிரசுரங்களிலும் வெளியானபடி அவர் வரவில்லை. ஆதலால் பார்ப்பனக் கூலிப் பத்திரிகைகள் கல்யாணசுந்திர முதலியார் வரமாட்டார். அவர் பெயரை வேண்டுமென்றே தப்பிதமாய் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள் என்று எழுதிய வாசகம் உண்மையாய் இருக்கலாம் என்று சிலர் கருதக்கூடும். ஆதலால் நடந்த விபரங்களை எழுதுகின்றோம்.

periyar rajajiஒரு சுற்றுப்பிரயாணம் ஏற்படுத்த வேண்டுமென்றும், தானும் அதில் கலந்து கொள்ளுவதாகவும் தோழர் முதலியார் அவர்களே பிரஸ்தாபித்ததை ஒட்டித்தான் சுற்றுப்பிரயாணம் பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும், அவருடைய சம்மதத்தின் பேரிலேயேதான் பத்திரிக்கைகளிலும், துண்டு பிரசுரங்களிலும் பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும் நாம் நமது தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன், அதை நம்பியே தோழர் ஈ.வெ.ரா. ஒவ்வொரு ஊருக்கும் சென்றார் என்றும் தெரிவித்துக் கொள்வதோடு தோழர் முதலியார் அவர்கள் இரண்டு இடத்திற்கும் விஜயம் செய்யாத காரணம் திருச்சிக்கு மூலவியாதி தொந்திரவால் வரவில்லை என்றும், ராசீபுரத்துக்கு வராதது அவரது நெருங்கிய பந்து ஒருவரின் மரணம் காரணம் என்றும் சேதி வந்திருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் முதலியார் அவர்கள் 2934ந்தேதி ஈரோட்டிற்கு அழைக்கப் பட்டிருக்கிறார். அநேகமாய் வரக்கூடும் என்றும் கருதுகிறோம்.

(பகுத்தறிவு செய்திக் குறிப்பு 26.08.1934)

***

ஆலயப் பிரவேச மசோதா கருவிலேயே கருகி விட்டது

இந்திய சட்டசபையில் இருந்த ஆலயப் பிரவேச மசோதா 23ந்தேதி இந்திய சட்டசபை கூட்டத்துக்கு வந்து பொதுஜன அபிப்பிராயம் விரோதமாய் இருக்கின்றது என்கின்ற காரணத்தால் சர்க்காராரால் வாப்பீசு வாங்கிக் கொள்ளும்படி கேழ்க்கப்பட்டு அது வாப்பீசு வாங்கிக் கொள்ளப்பட்டதால் அது கருவிலேயே கருகி விட்டது.

(பகுத்தறிவு செய்திக் குறிப்பு 26.08.1934)