periyar 32ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களை அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கின்ற தீர்மானம் ஒன்றை நிர்வாகக்கமிட்டி தலைவருக்கு திருவாளர்கள் பி.எஸ். குருசாமி நாயுடு அவர்களும் எம்.தாமோதர நாயுடு அவர்களும் அனுப்பியிருக்கின்றார்கள்.

அதாவது “தற்கால நிலைமை மாறுதல்களை உத்தேசித்து பார்ப்பனர்களை தென்இந்திய நலவுரிமைச்சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஒரு விசேஷ மகாநாடு (ஸ்பெஷல் கான்பரன்ஸ்) கூட்ட வேண்டுமென்றும் இக்கமிட்டி தீர்மானிக்கின்றது” என்பதாகும்.

இப்பொழுது மேல்கண்ட இந்த தீர்மானத்தை அனுப்பியிருக்கும் கனவான்களே நெல்லூரில் பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கை கட்சியில் சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்கின்ற தீர்மானத்தை எதிர்த்தவர்கள்.

ஆனால் அப்படிப்பட்டவர்கள் இப்போது பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியிலேயே சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்திருப்பதற்குக் காரணம் “தற்கால நிலைமையை உத்தேசித்து” என்று தான் சொல்லுகின்றார்கள்.

பார்ப்பனர்களைச் சேர்த்துத் தான் ஆக வேண்டும் என்கின்ற அளவுக்கு தற்கால நிலைமை எப்படி மாறுதல் அடைந்திருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. சென்ற சட்டசபை தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியில் பலர் தோல்வி அடைந்து மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது முதல் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமும் காங்கிரசில் சேரவேண்டும் என்கின்ற எண்ணமும் அக்கட்சி பிரமுகர்கள் ஒவ்வொருவர் மனதிலும் துடித்துக் கொண்டேதான் இருந்தது.

காங்கிரசில் சேர்ந்தால் சாதித்து விடலாம் என்கின்ற எண்ணத்தைப் பரீட்சித்துப் பார்க்க கோயமுத்தூர் மகாநாட்டில் தாராளமாய் இடம் கொடுத்தோம், அது போலவே பலர் காங்கிரசுக்கும் போய் அதன் பலனையும் அனுபவித்துப் பார்த்து விட்டு இரண்டாம்பேர் அறியாமல் வீடுவந்து சேர்ந்தார்கள்.

அதுபோலவே இதற்காக கூடும் மகாநாட்டில் நாம் இந்த தீர்மானத்தையும் மகாநாட்டில் ஆட்சேபிக்கப்போவதில்லை. மற்றவர்கள் ஆட்சேபிப்பதையும் நாம் தடுக்கப் போவதில்லை. அதன் சம்பவத்தை அதுவே அடையட்டும் என்று தான் விட்டுவிடப் போகின்றோம். ஏனெனில்,

சமீபத்தில் தான் கோயமுத்தூரில் திருவாளர்கள் பி,முனுசாமி நாயுடு, பி.டி.ராஜன், ஆர்.கே.ஷண்முகம், சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், எ.ராம சாமி முதலியார், ஈ.வெ.ராமசாமி ஆகியவர்கள் கூடி பார்ப்பனர்களை அங்கத்தினர்களாக சேர்ப்பதா என்கின்ற விஷயமாய்ப் பேசி “வேண்டுமானால் அரசியல் சட்டசபை நடவடிக்கைகளில் (பொலிட்டிக்கல் கவுன்சில் பார்ட்டியில்) சேர்த்துக் கொள்ளலாம்” என்றும் “ஜஸ்டிஸ் கட்சியில் கண்டிப்பாய் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது” என்றும் பேசி முடிவு கட்டிக்கொண்டு அதை அடுத்தாப்போல் ஒரு விசேஷ மகாநாடு கூட்டி தீர்மானிப்பதென்றும் ஒப்புக் கொண்டு போனார்கள்.

ஆனால் அத்தீர்மானம் இனியும் ஒரு மாதம் ஆவதற்குள் “தற்கால நிலையை உத்தேசித்து”என்று மறுபடியும் அந்த விஷயத்தைக் கிளப்பியிருப்பதானது ஆச்சரியப்படக் கூடியதேயாகும். அன்றியும் இப்போது கொஞ்ச காலமாய் ஜஸ்டிஸ் கட்சிக்கு சற்று அதிக செல்வாக்கு ஏற்பட்டு இதுசமயம் அதில் கொஞ்சம் அதிகமான மெம்பர்கள் சேர்ந்து கட்சியின் கூட்டம் தாங்க முடியாத அளவுக்கு கும்பலாகி நெருக்கம் ஏற்பட்டு விட்டதாலும் அந்த நெருக்கத்திற்குத் தகுந்தபடி போட்டிகளும் பலமாய் விட்டதாலும் எப்படியாவது அதன் கூட்டத்தைச் சற்று கலைத்து சிலரை வெளியாக்கி நெருக்கத்தைக் குறைத்து போட்டியைக் கம்மிப்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணம் சில “ தலைவர்களுக்கு” ஏற்பட்டு விட்டதால் இது சமயம் அக் கட்சிக்கு ஒரு கொள்கையில் நிற்பதோ அல்லது ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டிருப்பதோ மிக்கமுடியாத நிலை மைக்கு போய்க் கொண்டிருக்க வேண்டியதாகிவிட்டது.

ஆதலால் அடிக்கடி நாமே முட்டுக்கட்டையாய் இருந்ததாகக் காட்டிக்கொள்ள இஷ்டமில்லை. இந்த நிலையில் அந்தத் தீர்மானம் கொண்டு வந்திருக்கும் கருத்தைப் பார்க்கும்போதும் திருவாளர்கள் சி,பி.ராமசாமி அய்யருடன் டி.ஆர். ராமச் சந்திர அய்யரும் போட்டியன்றி தெரிந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் போதும் அனேகமாய் விசேஷ மகாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற விடலாமென்றே நாம் நினைக்கின்றோம்.

எப்படியானபோதிலும் அது விஷயத்தைப் பற்றி நாம் இப்போதே நமது அபிப்பிராயத்தை சிறிதும் ஒளிக்காமல் சொல்லிவிடுகின்றோம். அதாவது பார்ப்பனர்களை தென் இந்திய நலவுரிமைச் சங்கத்தில் அங்கத்தினர்களாய்ச் சேர்த்துக் கொள்ளப்படுமானால் பார்ப்பனரல்லாதார் கட்சி என்று வழங்கும் ஜஸ்டிஸ் கட்சி துலைந்தது என்பதேதான் நமது முடிவு.

அதாவது இத்தீர்மானத்தின் பயனால் ஏதாவது இரண்டொரு பணக்காரர்களோ சூட்சிக்காரர்களோ சில பெரிய உத்தியோகங்களையும் பதவிகளையும் அனுபவிக்கலாமே யொழிய பதினாயிரக்கணக்கான படித்த வாலிபர்களின் கதியும் சமூக சமத்துவ முற்போக்கின் கதியும் இனி அதோகதிதான் என்பதும்.

வெகு கஷ்டப்பட்டு நிதானமாய் முன்னேறிவந்த இம்மாகாண பார்ப்பனரல்லாத சமூக நிலை இனி வெகுவேகமாய் பின்னோக்கி விடு மென்பதுவும் உறுதி! உறுதி!! அன்றியும்

அக்கட்சியில் கொள்கையோ நாணயமோ யோக்கியப் பொருப்போ சிறிதும் கூட இனி இருக்கவும் முடியாது என்பதும் நமது உறுதி.

(குடி அரசு - கட்டுரை - 23.03.1930)