periyar 522கதர் துணியின் விலை விஷயமாகவும், கதர் போர்டார் அதிக விலை வைத்துக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதின் மூலமாகவும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் ஒரு கதர் தொண்டருக்கும், திரு.ஸி.ராஜகோபாலாச்சாரிக்கும் வாதம் நடந்து வருவதை, ஒரு நண்பர் நமக்கு அனுப்பி நமது அபிப்பிராயத்தை கேட்டிருக்கின்றார்.

நமக்குத் தெரிந்த வரையில் மேற்படி இரு கனவான்கள் கணக்கிலும் பிசகு இருக்கின்றதென்பதே நமது அபிப்பிராயம். அதாவது இரண்டு பேர்களுக்கும் உண்மையான அசலுக்கு மேல் அதிகப்படுத்தி கணக்கு போடப்பட்டிருக்கின்றது. அதாவது பஞ்சு நூல் நூற்பதற்கு ராத்தல் ஒன்றுக்கு 5 அணா தான் கூலி கொடுக்கப்பட்டு வருகின்றது.

சில இடங்களில் 4 அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. நெய்வதற்கும் 54 இஞ்சுக்கு கெஜம் ஒன்றுக்கு 2 3/4 முதல் 3 அணாவே கொடுக்கப்பட்டு வருகின்றது. கெஜத்திற்கு 21/2 அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. 21/2 அணா அல்லது 2 3/4 அணா வீதம் கொடுப்பதாயிருந்தால் இப்பொழுது ஈரோட்டைச் சுற்றிலும் கோபியைச் சுற்றிலும் சுமார் 1000, 2000 தரிகள், தரி ஒன்றுக்கு 5 ரூபாய் வீதம் அட்வான்ஸ் கட்டிவிட்டு வருஷக்கணக்காக நெய்து கொடுக்க ஒப்பந்தம் பேசிக் கொள்ள காத்திருக்கின்றார்கள். இந்தப்படிக்கே சுமார் இரண்டு வருஷம் நெய்து கொண்டும் வந்தார்கள்.

கரூருக்கு பக்கத்தில் சில கிராமங்களில் ராத்தல் ஒன்றுக்கு 4-அணா வீதம் நூற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். லாபம் அதிகமாய் வருவதை உத்தேசித்து நெசவுக்குக் கூலி அதிகமாய் கொடுத்து வருகின்றார்கள்.

சாதாரணமாக 54 இஞ்சு கதர் 10 கெஜம் கொண்ட பீசு அதிக கஞ்சி இல்லாமல் கண்டிப்பாய் 4 ராத்தல் இடைக்குமேல் இருக்கவே இருக்காது. இதற்கு ஆதாரமாக படியூர் புளியம்பட்டி, ஊத்துக்குளி முதலிய இடங்களில் நெய்யப்படும் துணிகளை இன்றும் பார்க்கலாம்.

இன்று கருங்கண்ணி சாதாரண பஞ்சு விலை அதாவது திருப்பூர் கதர் வியாபாரிகள் வாங்கும் விலை 520 ராத்தல் பாரம் 1-க்கு, 215, 220-க்கு மேல் போவதே இல்லை. அப்படியானால் ராத்தல் ஒன்றுக்கு ரூ. விலை 0-6-81/4 அடக்கமாகும்.

எனவே 54 இஞ்சு 10 கெஜம் பீசு ஒன்றுக்கு பஞ்சு சேதாரம் உள்பட ராத்தல் 41/4 க்குக் கிரயம் ரூ. 1-12-6 மேல்படி நூலுக்கு நூற்புக்கூலி ராத்தல் ஒன்றுக்கு 5 அணா ரூ. வீதம் 1-5-3. நெசவுக்கூலி கெஜம் 1-க்கு 2 3/4 1-11-6 அணா வீதம் ஆக ரூ.4-13-3. கெஜம் 1-க்கு 3அணா கூலி வீதமானால் 1-14-0.

எனவே 54 இஞ்சு அகலம் 10 கெஜம் பீசு ஒன்றுக்கு ரூ. 4-13-3 அல்லது ரூ. 4-15-9 அசலாகும். ஒரு சமயம் ஆள் கூலி, கணக்குப்பிள்ளைக் கூலி மற்றும் சில்லரை செலவு போட்டாலும் கண்டிப்பாய் பீசு ஒன்றுக்கு ரூ. 5-4-0 மேல் அடங்குவதற்கு நியாயமே கிடையாது.

ரூபாய்க்கு ஒரு அணாவீதம் செலவு போட்டு வெளி ஊர்களில் விற்பதானாலும் ரூ.5-9-0 அல்லது அதிக லாபம் வைத்தாலும் ரூ. 5-12-0க்கு மேல் விற்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சென்ற வாரத்தில் நாம் ஈரோட்டில் கதர் இல்லாமல் சேலத்திற்கு சொல்லியனுப்பி கதர் வாங்கிக் கொண்டு வந்ததில் 54 இஞ்சு அகலம் 5 கெஜம் ஒரு ஜதை வேஷ்டிக்கு சேலம் காங்கிரஸ் கதர் டிப்போவில் ரூ.3-11-0 கொடுத்து வாங்கிவர வேண்டியதாயிற்று.

அப்படியானால் 10 கெஜத்திற்கு ரூ.7-6-0 வீதம் விற்கின்ற விலையாகின்றது. ரூ.5-12-0க்கு விற்க வேண்டிய வேஷ்டி ரூ. 7-6-0 வீதம் விற்றால் ஒரு பீசுக்கு ரூ. 1-10-0க்கு மேல் மனதார அதிக லாபம் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது.

ஏற்கனவே மில் துணி 54 இஞ்சு கெஜம் 5 அணாவுக்கும் 6 அணாவுக்கும் தாராளமாய் கிடைக்கும் போதும் இந்தப்படி விற்றும் இந்திய மில் வியாபாரிகள் தங்கள் முதலுக்கு 100-க்கு 20, 25 வீதம் லாபம் சம்பாதிக்கும் போதும் கதருக்கு ஊரார் பணங்களை 10, 20 லட்சக்கணக்காக வசூல் செய்து அவற்றிற்கு வட்டியில்லாமலும் அசலிலும் கதர் இலாகா நிர்வாகத்திற்கென்று வருஷம் ஒரு லட்சம் 50 ஆயிரம் ரூபாய்கள் என்று கைமுதல் நஷ்டமுமடைந்து கொண்டு மக்களை கெஜம் ஒன்றுக்கு 11 அணா 12 அணா வீதம் கிரயம் போட்டு வாங்கிக் கட்டும்படி சொல்வதென்றால் இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றோம்.

நூற்கின்றவர்களுக்கு கூலி கட்டவில்லை என்று ரூபித்தால், அப்போது “கூலிக்கு நூற்பதுவல்ல கதர் திட்டம். ஒவ்வொருவரும் ஓய்ந்த நேரத்தில் சொந்தத்தில் நூற்க வேண்டும் என்றும் அந்த அர்த்தத்தில்தான் கதரில் சுயராச்சியம் இருக்கின்றது” என்றும் சொல்லுவதும், சொந்தத்தில் நூற்க முடிவதில்லை என்று ரூபித்தால் “ஒரு அணா கூலியாவது கிடைப்பதற்கு வேறு வேலையில்லை.

ஆகையால் நடந்தவரை நடக்கட்டும்” என்பதும், இம்மாதிரி சமயத்திற்கேற்ற விதமாகப் பேசி மக்களை ஏமாற்றுவதாயிருக்கின்றதே ஒழிய வேறில்லை.

அன்றியும் திரு.காந்தியும் திரு.பஜாஜும் தென் இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது சில சோம்பேறிப் பார்ப்பனர்களை சாஸ்திரிகள் என்னும் பேரால் ஒன்று சேர்த்துக் கூட்டி திரு.காந்தி முன் உட்காரவைத்து அவர்களுக்கு சாஸ்திரி என்றும், கனபாடிகள் என்றும் பெயர் சொல்லி கையினால் துடையில் நூல் திரித்துக் காட்டி “சாஸ்திரிகள் எல்லாம் காந்தியின் கதர் திட்டத்தைப் பின்பற்றுகின்றார்கள்” என்று திரு.காந்தியையும் பஜாஜையும் நினைக்கும்படி செய்து வசூலான தொகைகளை இங்கேயே தட்டிப் பிடுங்கிக் கொண்டதல்லாமல், வேறு ஏதாவது அனுபோக சாத்தியமான காரியமோ யுத்திக்கு பொருத்தமான கருத்தோ இதில் இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றோம்.

தவிர திரு. காந்தியவர்கள் இனியும் தனக்கு கதரிலும் ராட்டினத்திலும் நம்பிக்கை இருக்கின்றது. அதன் மூலம்தான் சுயராச்சியம் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பதைப் பார்த்தால் இனியும் இந்த மாதிரி எத்தனை நாளுக்கு மக்கள் 5 அணா துணிக்கு 12 அணா விலை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.

தேசிய நேரமும், தேசிய பணமும், தேசிய ஊக்கமும் இந்தக் கதர் திட்டத்தினால் பாழாய்ப்போய்க் கொண்டிருப்பதை இனியும் எத்தனை நாளைக்கு பார்த்துக் கொண்டிருப்பது என்பதுவும் நமக்கு விளங்கவில்லை.

விலையில் 5 அணா துணிக்கு 11 அணாவும் துணி நயத்தில் 40 நெம்பருக்கு பதில் 10 நெம்பரும் உபயோகத்தில் 5 மாதம் வருவதற்கு பதில் 3 மாதத்தில் கிழியும் மாதிரியாகவும், சுமையில் ஒன்றுக்கு மூன்றாகவும், பிரயாணத்திற்கு பெருத்த அசௌகரியமாகவும் இருப்பதை ஆதரிப்பது தான் தேசியம் என்றால் திரு.காந்தியைப் போலும், திரு.ராஜகோபாலாச்சாரியைப் போலும் உள்ள ‘மகாத்மாக்களும், மகான்களும்’ தவிர மற்றபடி வேறு யாராலாவது இந்த தேசியத்தை பின்பற்ற முடியுமா என்றும் கேட்கின்றோம்.

நம்மைப் பொருத்தவரை பழக்கத்தினாலும் உயர்ந்த வேஷ்டி வாங்கும்படி நேரிடுவதில் ஏற்படும் செலவினாலும் கதரை விடமுடியாத நிலைமையில் இருக்கின்றோம். ஆனாலும் நம்மைப் போன்ற மற்ற நடுத்தர மக்களுக்கும் மூன்றாந்தர மக்களுக்கும் இது சாத்தியமாகுமா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

இதில் உள்ள பொருளாதாரத் திட்டமும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கின்றதென்பதும் இந்த இலாகா நிர்வாகத்தில் கலந்திருக்கும் ஆசாமிகளுக்கு பொருளாதார வரவும் வேலையில்லாத பார்ப்பனர்களுக்கு வேலை கிடைத்துத் தின்று கொழுப்பது மல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்பது நமது உறுதியான அபிப்பிராயமாகும்.

எனவே திரு.காந்தி அவர்களும் அவரது பிரதம சிஷ்ய கோடிகளும் கண்ணியமாய் இந்த மாதிரி கதர் இலாக்காவை மூடிவிட்டு இந்தப் பணச் செலவைக் கொண்டும் நேரச் செலவைக் கொண்டும் வேறு ஏதாவது பொது மக்களுக்கு நஷ்டமில்லாத கைத் தொழில் வளர்ச்சியில் ஈடுபடவோ அல்லது தீண்டாமை ஒழிவு, விதவைகள் துயரம் ஒழிவு என்பது போன்ற துறைகளில் ஈடுபடவோ செய்தால் நாட்டிற்கும், மனித சமூகத்திற்கும், நாணயத்திற்கும் நல்ல பயனை அளிக்கும்.

அப்படிக்கில்லாமல் எல்லா குற்றமும், பலவீனமும், நஷ்டமும் மனதாரத் தெரிந்தும் மேற்கொண்டும் அதையே செய்து கொண்டு இருப்பதென்றால் இவ்வியக்கத்தை வேண்டுமென்றே செய்யும் வெறும் புரட்டு என்று சொல்லுவதுடன் கதர் இயக்கம் என்பதை சங்கராச்சாரி மடம் பண்டார சன்னதி மடம் என்றும் சோம்பேரி மடங்கள் போன்ற திரு.காந்தி மடம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று சொல்லுவதற்கு வருந்துகின்றோம்.

ஏனெனில் 1922 முதல் 1925 முடிவு வரையில் கதரில் முழுநம்பிக்கை வைத்து திரு.காந்தி சொன்னவைகளையெல்லாம் அப்படியே நம்பி நாமும் சென்ற விடங்களுக்கெல்லாம் ராட்டினத்தைத் தூக்கிக் கொண்டு இரவும் பகலுமாய் நூற்றதுடன் படுக்கைக்குப் பக்கத்தில் இராட்டினத்தையும் மெழுகு திரி விளக்கையும் வைத்துக் கொண்டு மத்தியில் விழிப்பானால் மறுபடியும் தூக்கம் வரும்வரை நூற்றதுடன் நூல் சந்தாவையும் தவறாமல் அனுப்பிவந்ததோடு அதிகமாக நூற்றதால் கையில் இரத்த ஓட்டம் கெட்டு வலியெடுத்து அதற்காக திரு.காந்தியவர்களுக்கெழுதி, 2, 3 மாதத்திற்கு நம்மை நூல் சந்தா மெம்பரிலிருந்து விதிவிலக்கு செய்யும்படி கேட்டு அந்தப்படியே விதிவிலக்கும் வாங்கி சென்னைக்குச் சென்று டாக்டர் குருசாமியிடம் வைத்தியம் செய்து மறுபடியும் ஊரெல்லாம் சுற்றி சர்க்கார் சங்கங்கள் ஏற்படுத்தி கதர் கடைகளும் ஏற்படுத்தி உற்பத்தி சென்டர்களும் கண்டுபிடித்து ஏற்படுத்தி, திருப்பூர் காங்கிரஸ் காதி வஸ்திராலயத்தையும் நாமே உண்டாக்கி நேரில் மேற்பார்வை பார்த்து மற்றும் புதுப்பாளையம் காந்தி ஆச்சிரமத்தையும் நமது கையாலேயே திறந்து வைத்து அதற்கு வேண்டிய உதவியையும் கூடுமான அளவு செய்து, மற்றும் தனிப்பட்ட நபர்களுக்காக பல கதர் ஸ்தாபனங்களையும் கதர் கடைகளையும் திறந்து வைத்து, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை எல்லாம் அதாவது பனகல் அரசர், ராமசாமி முதலியார், எம்.டி. சுப்பிரமணிய முதலியார் முதலியவர்களையெல்லாம் கதர் கட்டச் செய்து மற்றும் இது போன்ற பல காரியங்களை கதருக்காகவென்றே செய்து கதர் விஷய பிரசாரத்தால் 124 ஏ முதலிய பிரிவுகள்படி சர்க்காரால் வழக்கும் தொடரப்பட்டு மற்றும் எவ்வளவோ விதத்தில் மனதார உழைத்துப் பார்த்த பிறகே அதிலுள்ள பலனற்ற தன்மையையும் சிலர் தங்கள் சுய நலத்திற்காக அந்த ஸ்தாபனத்தை உபயோகித்துக் கொண்டிருப்பதுடன் பொதுவில் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு நேர் விரோதமாக அந்த ஸ்தாபனத்தை உபயோகப்படுத்தப்பட்டு வருவதையும், இவ்வளவிற்கும் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணமே வீணாவதையும் மனதாரப் பார்த்த பிறகே கதர் புரட்டைப் பற்றி வெளியில் தைரியமாய் எடுத்துச் சொல்லத் துணிந்தோமே தவிர, மற்றபடி ஒன்றும் அறியாமலோ, பிறர் சொல்வதைக் கேட்டுக் கொண்டோ அனுபவமில்லாமலோ, ஒன்றும் சொல்ல வரவில்லை என்பதையும் பொதுஜனங்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனால் இதைப் பார்த்தவுடன் பார்ப்பனரல்லாத சில கிளிப்பிள்ளை தேசியவாதிகள் ஆத்திரம் பொங்கி நம்மீது பாய்ந்தாலும் பாய்வார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயபுத்தியை கொண்டு நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அடையும்போது நாம் சொன்னது சரி முற்றும் சரி என்பதை உணர்வார்கள் என்கின்ற தைரியம் நமக்கு உண்டு.

எப்படி எனில் முதன்முதல் ஒத்துழையாமையை அழிக்க ஆரம்பித்த - சுயராஜ்யக் கட்சியையும் அதற்காக பார்ப்பனர் கையாளாக இருந்த திரு.சி.ஆர்.தாசையும் மற்றும் சில பார்ப்பனர்களையும் நாம் தாக்கும்போது பலருக்கு வெகு ஆத்திரம் வந்ததானாலும் ஒரு வருஷம் பொறுத்து யோக்கியர் எல்லோரும் நாம் சொன்னது முற்றிலும் சரியென்று உணர்ந்தார்கள்.

பிறகு பெல்காம் காங்கிரசில் ஒத்துழையாமையை காங்கிரஸ் கைவிட்டதிலிருந்து காங்கிரசை தாக்க ஆரம்பித்த போதும் “காங்கிரஸ் இருப்பதா? இறப்பதா?” என்று பெரிய எழுத்தில் விளம்பரம் செய்து பார்ப்பனர்கள் நம் மீது பாமர மக்களை ஏவி விட்டதும் பிறகு ஒரு வருஷத்திற்குள் முக்கியமான மனிதரெல்லாம் நாம் சொன்னது சரியென்று ஒப்புக்கொண்டு காங்கிரசை விட்டு ஓடிவிட்டார்கள்.

மற்றும் ஜஸ்டிஸ் கட்சியை நாம் ஆதரிக்கத் தொடங்கிய போதும் இதே மாதிரி நம்மை ‘ஜஸ்டிஸ்’ கட்சியில் தேசத் துரோக கட்சியில் சேர்ந்துவிட்டதாகத் தூற்றி கடைசியாக திருவாளர்கள் கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு, சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டதாக பொதுக் கூட்டத்தில் சொன்னதும் மற்றும் அநேகர் படல் படலாய் சேர்ந்து வருவதும் மற்றும் திரு.காந்தி தென்னாட்டில் வருணாச்சிரமப் பிரசாரம் செய்த காலத்தில் அவரைத் தாக்கின காலத்திலும் இதே மாதிரி நம்மீது பலர் குற்றம் சொல்லியதும் இப்போது வெகுபேர் நாம் சொன்னதை ஒப்புக்கொண்டதோடு தாங்களும் அதைப் போல சொல்லி வருவதும் கடைசியாக மத விஷயத்திலும் இந்து மதம் என்பதின் புரட்டையும் அது சம்பந்தமான சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய புரட்டுகளையும் வெளியாக் கினபோதும் கடவுள் போச்சு, கடவுளைக் கண்டவர் போச்சு, மதம் போச்சு, மத ஆச்சாரிகள் போச்சு, சமயம் போச்சு, சமய ஆச்சாரிகள் போச்சு என்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது வாய் திறவாமல் மூலையில் பதுங்கி யிருப்பதும், லட்சக்கணக்கான மக்கள் அதையே சொல்லுவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பற்றி சொன்ன காலத்திலும், தேசம் போச்சுது, தேசியம் போச்சுது, ஒற்றுமை போச்சுது என்று கத்தினவர்கள், இப்போது வகுப்புவாரித் தொகுதிகளில் தேர்தலுக்கு நிற்க ஆசைப்படுவதும், உத்தியோகத்திலும், வகுப்பு விகித சுதந்திரத்தில் உத்தியோகம் பெறுவதும் அதுவே சர்க்கார் கொள்கையாயிருப்பதும் மற்றும் செங்கல்பட்டு மகாநாட்டைக் கண்டு பயந்தவர்கள் அம் மகாநாட்டுத் தீர்மானங்களில் பலவற்றை தங்கள் தங்கள் சொந்த காரியங்களில் நடத்தி வைக்க முயற்சிப்பதும், சிலவற்றை பிரசாரம் செய்வதும் சில சுதேச அரசாங்கங்கள் அவற்றிற்காக சட்டம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் செய்ததைப் பார்த்து பாராட்டுவதையும் பார்த்து வருகின்றோம்.

எனவே, இதுவரை நாம் சொல்லிவந்த எவற்றையும் ஆரம்பத்தில் தப்பாய் கருதியிருக்கலாமானாலும் மொத்தத்தில் பொது மக்கள் ஆட்சேபித் ததாகவோ தள்ளிவிட்டதாகவோ எதிர்பிரசாரம் செய்து மக்களிடை நம்மீது வெறுப்பை உண்டாக்குவதில் வெற்றி பெற்றதாகவோ சொல்வதற்கில்லாமல் இருந்து வந்திருக்கின்றோம்.

ஆகவே இதே முறையில் கூடிய சீக்கிரத்தில் இந்த கதர் புரட்டையும் மக்கள் மனமார அறிந்து நாம் சொல்லுவதை ஒப்புக் கொள்ளுவதுடன் இதுவரை தாங்கள் ஏமாந்து இருந்ததற்கும் வருந்துவார்களென்றே நினைக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 06.10.1929)