periyarr 450எனது அன்பார்ந்த இந்து முஸ்லீம் சகோதரர்களே! இன்றைய தினமானது ஒரு பெரிய மகானின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆனால், அம்மகான் முகமதியர்களுக்கு மாத்திரம் சொந்த மானவர் என்றும், ஆதலால் அவர்கள் மாத்திரம்தான் அம்மகானின் பிறந்த நாள் கொண்டாட உரிமையுடையவர்களென்றும் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் அக்கூட்டத்தில் ஒரு இந்து என்பவனாகிய நான் எப்படித் தலைமை வகிக்கக் கூடுமென்றுகூட பலர் கருதலாம்.

மேலும் இவற்றிற்கு நான் சமாதானம் கூறும்போது எனது இந்து சகோதரர்கள் என்பவர்கள் பலர் என் மீதும் சந்தேகப்பட்டு நான் மகமதியர்களுக்கோ, மகமதிய மதத்திற்கோ வக்காலத்து வாங்கிப் பேசுவதாகவும் கருதலாம் என்றாலும் இந்துக்கள் என்பவர்கள் என்னைப் பற்றி எப்படிக் கருதுகிறார்கள் என்பதைப் பற்றி நான் சற்றும் கவலைப்படாமல் எனது மகமதிய சகோதரர்கள் என்னை இவ்விழாவில் கலந்து கொள்ள சந்தர்ப்ப மளித்ததுடன், மிகப் பெருமையான இவ்விழாவிற்குத் தலைமை வகிக்கும் கௌரவத்தையும் எனக்களித்ததற்கு முதன் முதலாக நான் என் மனப்பூர்வமான நன்றியறிதலை எனது முஸ்லீம் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மதம்

சகோதரர்களே! நான் மதங்கள் என்பவைகளையெல்லாம் மக்களின் இவ்வுலக வாழ்க்கை நலத்திற்கும், இன்ப அனுபவத்திற்கும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு அவ்வக்காலத்திய அறிஞர்களால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் என்றுதான் கருதுகின்றவனேயல்லாமல், அவற்றை ஒரு “ஆத்மார்த்த சாதனம்” என்றோ, “தெய்வீகத் தன்மை” யுடைய தென்றோ, இவ்வுலக வாழ்க்கைக்கு மேற்பட்ட ஏதோ ஒரு கதிக்கு மார்க்கமென்றோ நான் சிறிதும் கருதுவதும் இல்லை; அதைப் பற்றி நான் சிறிதும் கவலை கொள்ளுவதுமில்லை.

அப்படி வேறு யாராவது கருதுவதாய் இருந்தாலும் கூட இவ்வுலக வாழ்க்கையின் அனுபவத்தைப் பொறுத்துத்தான் அத் “தெய்வீக கதிகள்” என்பவைகளின் பலன்களும் இருக்கக் கூடுமே ஒழிய அதற்கு விபரீதமாய் இருக்க முடியாது.

ஆதலால் அதற்கென்று வேறு முயற்சிகள் வேண்டாம் என்றே அப்படிப்பட்டவர்களுக்கு நான் சொல்லுவது வழக்கம். மற்றும் அது போலவே தான் எந்த மதக் கொள்கைகளையும் ஒரு கடவுள் உண்டாக்கினார் என்றோ அது எப்போதைக்கும் பொருத்தமான தென்றோ, அவற்றில் ஒரு சிறிது கூட கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து மாற்றக்கூடாதது என்றோ நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளுவதுமில்லை.

அது போலவே எல்லா மதத் தலைவர்கள் என்பவர்களைப் பற்றியும் கூட நான் அவர்களை ஒரு பொதுநல சேவைக்காரர் என்றும், மக்களிடம் அன்பும் இரக்கமும் கொண்ட பெரியார் என்றும் உலக நன்மைக்காக தன்னலம் விடுத்து பிறர் நலத்திற்காகவே உழைத்த உத்தமத் தியாகிகள் என்றும்தான் நான் கருதுவதே தவிர, மதத் தலைவர்களை எல்லாம் கடவுள் என்பவர் என்றோ, கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றோ, கடவுள் அவதாரம் என்றோ, நான் சிறிதும் கருதுவதில்லை.

ஏனெனில், உலகில் பல மதங்களும், பல மதக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாகவும், ஒருவருக்கொருவர் ஒப்புக் கொள்ள முடியாமலிருக்கும் போது ஒரே கடவுள் இத்தனை மதங்களையும் உண்டாக்கி இருப்பாரென்று எப்படி ஒப்புக் கொள்ள முடியுமென்று தோன்று வதாலேயேதான், இது ஒருபுறமிருந்தாலும், மற்றொரு புறத்தில் இந்துமதத் தலைவர்கள் மாத்திரம் கடவுளாலேயே அனுப்பப்பட்டவர்களென்று கருதுகின்றவர்களுக்கு வேறு சமாதானம் என்ன வென்றால், “எல்லா படைப்பும் எல்லா தோற்றமும் எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப் பட்டது” என்று சொல்லப்படுகையில் ஒரு சிலருக்கு மாத்திரம் கடவுள் அவதாரம், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கின்ற பேர் எப்படிப் பொருந்தும் என்பதே நமது பதிலாகும்.

இப்படி இருக்க ஒரு சிலரை மாத்திரம் மக்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்றும், அவதார புருஷர்கள் என்றும், கடவுளால் அனுப்பியவர்கள் என்றும் ஏன் சொல்லுகின்றார்கள் என்று பார்ப்போமானால், அதற்கும் ஒரு சமாதானம் இருக்கின்றதென்பதே நமது அபிப்பிராயம்.

என்னவெனில் நாம் பொதுவாக மக்களின் சக்தியும் குணமும் இவ்வளவுதான் என்று ஒரு அளவுக்குட்படுத்தி நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றோம். அந்த அளவுக்கு மேற்பட்ட சக்தியையும் குணத்தையும் எங்காவது கண்டு அது மனிதத்தன்மைக்கு மீறியது என்பதாக நாம் முடிவு செய்யும்போது, சாதாரணமாக நமது வாழ்வில் மனிதத்தன்மைக்கு மீறினதாகக் கருதும் எதையும் நாம் ‘தெய்வத்தன்மை’ என்று கருதுகின்ற வழக்கமாய் விட்டதால் இதையும் “தெய்வத்தன்மை” என்று சொல்ல வேண்டியவர்களாகி விடுகின்றோம்.

எப்படியானாலும் அப்படிப்பட்டவர்கள் பெரியார்கள் என்பதிலும், பாராட்டப்படவும், கொண்டாடவும், மரியாதை செய்யப்படவும் உரியவர்கள் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை.

ஆனால் அவர்களைக் கொண்டாடுவது என்பது அவர்களைப் போன்ற உருவத்தை ஊர்வலம் செய்வதற்கோ, பூஜை, அபிடேகம், உற்சவம் செய்வதற்கோ, அவர்கள் மீது பாட்டு, பஜனை பாடுவதற்கோ, கொண்டாட்டம் செய்வது என்பது பைத்தியக்காரத்தனம் என்பதே நமது அபிப்பிராயம். மற்றபடி வேறு எதற்கு என்போமானால் நாம் பெரியார் என்றும், மனிதத்தன்மைக்கு மீறினவர் என்றும் ஒப்புக்கொண்ட ஒருவரை பின்பற்றவும், அவரது உபதேசப்படி நடக்கவும் மற்றும் அந்தப்படி மக்களை நடப்பிக்கச் செய்ய முயற்சிக்கவுமான காரியங்களுக்கேதான் அவ்வித பெரியாரின் கொண்டாட்டங்களை உபயோகிக்க வேண்டும் என்பேன்.

எனவே, இன்று நாம் கொண்டாடும் திரு.மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன்சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால் இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு.மகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாய்ச் சொல்லுவேன்.

ஏனெனில் திரு.மகமது நபி அவர்களின் மதமே (கொள்கைகளே) மற்ற எல்லா மதத்தைவிட பிந்தியதும் சமீபமானதுமான மதமாகும். ஆதலால் அது மற்ற மதங்களில் உள்ள குற்றம் குறைகளை எல்லாம் நீக்கிச் சற்றேறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவு சீர்திருத்தமுடையதென்றும் சொல்லுவேன்.

எப்படியெனில் சுமார் இரண்டு மூன்று ஆயிர ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் எங்கும் இந்து மதக் கொள்கைகள், அதாவது, ஆரிய மதக் கொள்கைகளே பரவி வந்திருந்ததாகத் தெரிய வருகின்றது. அது எப்படியெனில், பல தெய்வ வணக்கமும், விக்கிரக வணக்கமும், ஜீவபலி யிடுவதும் முதலான காரியங்களே ஒரு காலத்தில் உலகத்தில் மதக் கொள்கையாய் இருந்து வந்திருக்கின்றது.

அதிலிருந்து ஒருபுறம் புத்தரும் மற்றொரு புறம் கிறிஸ்துவும், மற்றும் பல பெரியாரும் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டு மிகக் கஷ்டத்துடன் முயற்சி எடுத்து வந்திருக்கின்றார்கள்.

அவர்கள் முயற்சியானது அந்தக் காலத்திற்குப் புதியதாய்த் தோன்றிய தாலேயே அவர்கள் நாத்திகர்கள் என்று பழிக்கப்படவும், துன்பத்திற்காளாகவும் நேர்ந்ததுடன், கிறிஸ்து நாதர், சாக்கரடீஸ் முதலியவர்கள் கொல்லவும் பட்டார்கள். அதற்கும் வெகுகாலத்திற்குப் பிறகு அக்கொள்கைகளிலிருந்தும் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டவரே நமது திரு.மகமது நபி அவர்களாவார்கள்.

எனவே, நபி அவர்கள் உயரிய புதுக்கொள்கைகளை, அதாவது மிக்க மனிதத்தன்மை வாய்ந்ததாகவும், மனித வர்க்கத்திற்கு ஏற்றதும், அவசியமானதும், பெரிதும் அறிவிற்குப் பொருந்தியதாகவும் கண்டுபிடித்துப் பரப்பினார். இவ்வித உயரிய கொள்கைகள் அவருக்கு மாத்திரம் எப்படி தோன்றிற்று என்போமானால், அவர் மற்ற மதங்களின் குணதோஷங்களை எல்லாம் நன்கு அறிந்து கடைசியில் பிந்திய காலத்தில் ஏற்படுத்தின மதமாதலால் அது கூடுமானவரை திருத்தத்துடன் செய்ய முடிந்தது.

ஆனால் அப்பொழுதும் பழைய கொள்கைக்காரர்கள் திரு.நபி அவர்களையும் நாஸ்திகர் என்றும், கடவுள் துரோகி என்றும் சொல்லி பலவிதத்திலும் துன்புறுத்தி இருக்கின்றார்கள்; கொல்லவும் முயற்சித்திருக்கின்றார்கள். என்றாலும், திரு.நபி அவர்கள் எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் நின்று தமது கொள்கையை மக்களிடம் நன்றாய் பதியும்படி செய்திருக்கிறார்.

எனவே, அவரை அக்காலத்திற்கேற்ற ஒரு பெரிய சீர்திருத்தக்காரர் என்றும், தன்னல மற்ற பெரிய தியாகி என்றும், தீர்க்கதரிசி என்றும் சொல்லியாக வேண்டும். நான் இப்படிச் சொல்லுவதற்கு ஆதாரமாக இன்றையதினம் அப்பெரியாரின் கொள்கைகளின் பெருமைகளைப் பற்றியும், அவற்றிற்கும் நமது இந்து மதக் கொள்கைகள் என்பவற்றிற்கு முள்ள தாரதம்மியத்தைப் பற்றியும் தங்கள்முன் எனக்குத் தோன்றியதை எடுத்துச் சொல்வதில் நீங்கள் சற்று கவனம் செலுத்தி நடு நிலைமையில் இருந்து கேட்க வேண்டும் என்று இந்து முஸ்லீம் சகோதரர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தத்துவார்த்தமும் பிரத்தியட்ச அனுபவமும்

சகோதரர்களே! நான் அந்தப்படி சொல்லுவதில் குரானில் என்ன சொல்லியிருக்கின்றது என்பதைப் பற்றியோ, இந்து வேதம் என்பதாகிய நான்கு வேதங்களில் என்ன சொல்லி இருக்கின்றது என்பதைப் பற்றியோ சொல்லப் புறப்பட்டு அவ்வம்மத ஆதாரங்களான புத்தகங்களில் எழுதப் பட்டவைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

ஏனெனில், நான் அவைகளை எல்லாம் படித்தவனல்ல; அன்றியும் புத்தகங்களில் இருப்பதாகச் சொல்லும் பெருமைகள் நமக்கு ஒரு பலனையும் தரமுடியாது. ஒரு காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிக் கொண்டு நக்கினால் இனிக்குமா? அன்றியும் அவற்றிற்கு எப்படி வேண்டுமானாலும் “தத்துவார்த்தம்” செய்யக்கூடும். ஆதலால் அதைப்பற்றி பிரஸ்தாபிக்காமல், இரண்டு மதத்தின் பேராலும், பிரத்தியட்சத்தில் நாம் காணும் விடயங்களைப் பற்றியும் அவ்வம் மதக்காரர்கள் அனுபவிக்கும் பலனைப் பற்றியும் எடுத்துப்பேசுகின்றேன்.

ஏனெனில், எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு நாட்டிற்கு உண்டாக்கி இருக்கும் பலன்களைக் கொண்டுதான் நிச்சயிக்க வேண்டுமேயல்லாமல், அது ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் கதைகளைக் கொண்டோ, அம்மதத் தலைவர்கள், ஒரு காலத்தில் செய்ததாக சொல்லப்படும் அற்புதங்களைக் கொண்டோ, வியாக்கியானம் செய்வதால் ஏற்படும் அழகிய கருத்துக்களைக் கொண்டோ நிச்சயித்து விடமுடியாது.

அப்படி நிச்சயிப்பதால் உலகத்திற்கு ஒரு பலனும் ஏற்பட்டு விடாது. ஆதலாலேயே தான் பிரத்தியட்ச அனுபவத்தைச் சொல்லுகின்றேன்:-

மகமதிய மதம் என்பது ஒரு தேசீய மதமாகும். அம்மதத்தின் முக்கிய தத்துவம் என்னவென்றால், அம்மதத்தைப் பின்பற்றும் சமூகம் கொண்ட தேசங்களை அச்சமூக நன்மைக்கேற்றதான, ஆட்சிக்குள் இருக்கச் செய்வதென்பது முக்கியமானதாகும்.

அன்றியும் அம்மாதிரியான ஆட்சி நன்மைக்கே மதத்தைக் காப்பதுமாகும். மேலும் அது ஒரு சமத்துவக் கொள்கைக் கொண்ட மதமாகும். அதாவது மகமதிய மதத்தில் மக்களுக்குள் பிறவியில் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது. பணக்காரன், ஏழை, படித்தவன் படியாதவன்; இளைத்தவன் பலசாலி என்கின்ற வித்தியாச மில்லாமல் சகலருக்கும் வாழ்வில் சகல உரிமையும் அளிக்கின்றது. மேலும் மகமதிய மதம் ஒற்றுமையையே அதிகமாய்க் கொண்டிருக்கிறது. அதாவது அந்த மதத்தைச் சேர்ந்த ஒரு தனி மனிதனுக்கு ஒரு சிறு தீங்கு அந்நியனால் செய்யப்பட்டாலும், உடனே அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, தங்களுக்கு வந்ததுபோல் கருதி அவனுக்கு உதவி செய்ய அவசரமாய் முந்துகின்றார்கள்.

அன்றியும், அது அன்பையும் சகோதரத்துவத்தையும், அடிப்படையாகக் கொண்ட மதமாகும். என்னவென்றால், ஊர்பேர் தெரியாதவர்களானாலும், மகமதியர் என்று தெரிந்தால், ஒரே இலையில் சாப்பிடும்படியான அன்பும் சகோதரத்துவமும் கொண்டிருக்கிறது.

அது “சண்டாளர்களையும்” ரட்சிக்கும் சமயமாகும். ஏனெனில் நம்மால் சண்டாளர்கள் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட மக்களைத் தங்கள் சமயத்தில் சேர்த்து அவர்களுக்குச் சகல உரிமையையும் கொடுக்கின்றார்கள்.

மற்றும் மகமதிய மதமானது வீரத்தையும் ஆண்மை யையும் கொடுக்கும் மதமாகும். எப்படியெனில் அவர்களுக்கு மற்றவர்களைவிட துணிவு அதிகம்; அவர்களைக் கண்டால் மற்றவர்கள் பயப்படுகின்றார்களே ஒழிய அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.

மகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. அதாவது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு; விதவா விவாகம் உண்டு; கணவனும் மனைவியும் ஒத்துக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ளச் சுதந்தரம் உண்டு; படிக்கச் சுதந்தரம் உண்டு; ஆனால் கோஷா முறையைப் பற்றி குற்றம் சொல்லலாம்.

ஆனாலும் வரவர அதுவும் விலக்கப்படுகின்றது. உதாரணமாக துருக்கியில் பெண்கள் உத்தியோகம் வகிப்பதும், ஆப்கான் தேசத்திலிருந்து பெண்களை வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பி இருப்பதும், ஹைதராபாத், நைசாம் அவர்கள், தனது புத்திரிகளுடன் தாராளமாய்ச் சென்னையில் உலவினதுமான காரியங்களைக் கவனித்தால் அதுவும் சீக்கிரத்தில் மாற்ற மடையக் கூடும்.

மகம்மதிய மதம் தெய்வ வணக்கத்தில் மிக்க கண்டிப்பையும் செலவு சுருக்கத்தையும் உடையதாகும். அதாவது, ஒரே கடவுள் என்பதும் அதுவும் நாமம், ரூபம், குணம், குறி முதலியவைகள் அற்றது என்பதும், அதற்கு விரோதமாய்ப் பல கடவுள்களை சொல்லுவதோ, அல்லது கடவுளுக்கு ரூபம், பெண்டு, பிள்ளை, வைப்பாட்டிகளை ஏற்படுத்துவதோ, பூசை, உற்சவம் முதலியவைகளில் செலவு செய்வதோ மிக்கதோஷம் என்றும் அப்படி கருதுகின்றவர்களையும் செய்கின்றவர்களையும் தங்கள் எதிரிகள் என்றும் கருதும்படி கற்பிக்கின்றது.

மகம்மதிய மதம் தர்ம விஷயத்தில் மிக்க பிரயோஜனமான காரியத்தைச் செய்விக்கிறது. அதாவது ஒரு முஸ்லிம் தனது சொத்தில், அல்லது தனது வரும்படியில் இன்ன பாகம் தர்மத்திற்குக் கொடுக்கவேண்டும் என்று இருப்பது அமுலில் இல்லாவிட்டாலும், கொடுக்கும் பணத்தை ஏழைகளுக்கும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சாப்பிட முடியாதவர்களுக்கும் அநாதைப் பிள்ளைகளைக் காப்பாற்றி, கல்வி, தொழில் கற்றுக் கொடுப்பதற்கும் உபயோகப்படுத்தப் படுகின்றதே ஒழிய தர்மத்தின் பேரால் சோம்பேறிகளை உற்பத்தி செய்வதில்லை.

மகமதிய மதம் மற்ற மதங்களை விட, மிகவும் நாகரிகம் கொண்டது என்றுகூட சொல்லலாம். அதாவது மகமதியர்கள் உணவில் சத்துள்ள உணவு கொள்ளுகின்றார்கள். ஒரே வகை சாப்பாடு ருசி, பலம், சத்து, திருப்தி ஆகியவைகளைக் கொடுக் கும், நல்ல நல்ல பழ வர்க்கங்களும், சத்துள்ள விதை வர்க்கங்களும் பெரிதும் அவர்களாலேயே நமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

வைத்தியத்தில் மிக்க மேன்மையான முறையையுடையவர்கள். அல்வாவிலும் சர்ப்பத்தி லுமே எம்மாதிரியான வியாதிக்கும் மருந்து உண்டு.

சங்கீதமோ மற்ற சங்கீதத்தை விட மேன்மையானது. கட்டிடங்கள் கட்டுவதிலோ மற்றவர்களைவிட அலங்காரமாக சித்திர வேலைகளமைந் ததாகவும் கட்டுவார்கள்.

வாசனைத் திரவியங்களில் மற்றவர்களை விட சிறந்தவர்கள். அரசியல் ஆட்சி முறையில் அவர்கள் மிக்க ஞானமுடையவர்கள்; நீதி உடையவர்கள் என்றும் சொல்லலாம். எப்படி எனில், அரசியல் அதிகாரங்களுக்கு அநேகமாய் மகமதிய பெயர்களே இப்போதும் வழங்குகின்றது. அன்றியும் அவர்களுடைய மூர்தண்ணியமான ஆதிகாலத்திலும் இந்தியாவின் செல்வத்தை அந்நிய நாட்டிற்குச் சுறண்டிக் கொண்டு போகவில்லை.

அந்நியர் கொண்டு போக இடம் கொடுக்கவும் இல்லை. மற்றபடி ஏதாவது இரண்டொரு விஷயங்கள் மாறுபட்டதாகக் காணப்பட லாமாயின், அவைகள் மகமதிய கொள்கைகள் ஏற்படுத்தப்பட்ட அந்தக் காலத்திற்கும் இடத்திற்கும் இப்போதைய நிலைமைக்கும் உள்ள தார தம்மியத்தைப் பொறுத்திருக்கலாமே ஒழிய வேறில்லை.

மற்றும் முல்லாக்களால் ஏதாவது சில மூட நம்பிக்கைகளைப் புகுத்தியிருக்கலாம். ஆனாலும் அது அவர்கள் தேசீயத்தையாவது வாழ்க்கைச் சுதந்தரத்தையாவது கெடுக்கக்கூடிய அவ்வளவு கேடானதாக இல்லை.

அன்றியும், அது இப்போதைய நிலைமைக்கு காலதேசவர்த்தமானத்திற்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்து மாற்றிக் கொள்ளத் துணிந்தும் இருக்கின்றது. உதாரணமாக, துருக்கி சீர்திருத்தமும் ஆப்கான்ஸ்தான் சீர்திருத்தமும், அச்சீர்திருத்தம் செய்த அவ்வரசாங்கங்களை இந்திய மகமதியர்கள் ஆதரிப்பதும், ஆகிய வைகளைக் கவனித்தால் அதன் பெருமை விளங்கும்.

மேலும் மகமதிய மதம் மிக்க சுயமரியாதை உணர்ச்சியுடையது என்றும் சொல்லுவோம். எப்படி என்றால், அது இனி உலகத்திற்கு கடவுள் அவதாரங்களோ, நபிமார்களோ, தீர்க்கதரிசிகளோ வரக்கூடும் என்பதை ஒருக்காலும் ஒப்புக் கொள்ளுவதில்லை.

மனிதனை மனிதன் வணங்கு வதையோ, அவன் காலில் விழுவதையோ, அதுசிறிதும் சம்மதிப்பதில்லை. இனியும் இதன் பெருமைகள் அனந்தம் உண்டு.

இவ்வளவு பெருமைகளுக்கும் காரணம் என்னவென்றால், முன் சொன்னபடி இது சமீபகால சீர்திருத்த மதமானதாலும், மகமது நபி அவர்கள் நல்ல அனுபவமும், ஞானமும், தீர்க்க தரிசனமும், உறுதியும் கொண்டவரானதாலும், உலகத்தில் உள்ள மதங்களில் எல்லாம் சிறந்த மதம் என்று சொல்லத்தக்க தாயிருக்கின்றது.

இதற்கு நேர் விரோதமாக நமது மதம் என்பதில் உள்ள குறைகளை எடுத்துச்சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள எனக்கு இஷ்டமில்லாததால் அவற்றை மற்றொரு சமயம் சொல்லலாம் என்று இருக்கின்றேன்.

கடைசியாக, நான் இந்து மகம்மதிய சகோதரர்களுக்குச் சொல்லுவதென்னவென்றால், மதத்தின் காரணமாக இந்து முஸ்லீம்களுக்குத் துவேஷம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதேயாகும். எக்காரணத்தை முன்னிட்டோ, மதங்கள் என்றாலே முதலாவது, மற்றொரு மதத்தினிடத்தில் துவேஷம் கொள்ளுவதே முக்கிய கடமையாயிருக்கின்றது.

உதாரணமாக இந்துக்கள் என்பவர் மகமதியர்களை வெகு இழிவாய்க் கருதுவது எனக்குத் தெரியும். அதாவது மகமதியனைத் தொட்ட அளவுக்கு சரீரத்திலுள்ள தசையை அறுத்தெறிய வேண்டும் என்று இந்துக்கள் சொல்லிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.

இப்போதும் துலுக்கர் என்றால் மிலேச்சர் என்று சமஸ்கிருதங்களிலும் அதைச் சார்ந்த தமிழ் அகராதிகளிலும் அர்த்தம் எழுதப்பட்டிருக்கின்றது.

துலுக்க பாஷையைக் கூட தமிழ் பாஷையைப் பார்ப்பனர்கள் சொல்லுவதைப் போலவே மிலேச்சபாஷை என்றே பார்ப்பன நிகண்டுகளிலும் அகராதிகளிலும் இன்னமும் இருக்கின்றது. இவ்வித துவேஷ உணர்ச்சி உள்ளவர்களிடம் மகமதியர்கள் எப்படி ஒற்றுமையாய் இருக்க முடியும்? ஆதலால் இந்துக்கள் தான் முதன் முதலாக மகமதியர்களிடம் சகோதரபாவம் காட்டி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும்.

கூட்டத்தில் ஒன்றாய் உட்காந்திருப்பதாலேயே ஒற்றுமை இருக்கின்றது என்று நினைத்துவிடக் கூடாது. இந்நாட்டில் உள்ள 8 கோடி மகமதியர் களை அலட்சியம் செய்தோ, அவர்கள் கூட்டுறவில்லாமலோ, நமது நாட்டிற்கு நல்லரசாட்சியை உண்டாக்கிவிடவோ திருப்திகரமான வாழ்க்கையை ஏற்படுத்தவோ முடியவே முடியாதென்றே சொல்லுவேன்.

அன்றியும் அவர்களை இருந்த நாட்டைவிட்டுத் துரத்தி விட முடியாதென்றும் சொல்லுவேன். இந்த நாட்டிலுள்ள 8 கோடி மகமதியர்களின் பலமானது 16 கோடி இந்துக்களின் பலத்திற்குச் சமானமானதென்றுகூட சொல்லுவேன்.

எப்படியென்றால், இந்துக்களிடத்தில் மகம்மதியர்களுக்கு அவநம்பிக்கை இல்லாமலிருந்திருந்தால் இந்தியாவுக்கு ஜவாப்தாரியான ஆட்சி வெகு காலத்திற்கு முன்பே ஏற்பட்டு அனுபவித்துக் கொண்டிருக்குமென்பதில் சிறிதும் எனக்குச் சந்தேகமில்லை.

இப்பொழுதும் நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்னும் ஆறரைக் கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் நாளைக்கு மகமதியர்களாகிவிட்டால் மறுநாளே இந்தியாவின் நன்மைக்கேற்ற அரசாங்கம் ஏற்பட்டுவிடும் என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

நிற்க, இந்தியாவுக்கு ஏதாவது ஒரு காலத்தில் பொறுப்பாட்சி ஏற்பட யோக்கியதை உண்டாகிவிட்டது என்று சொல்லப்படும் காலம் வருமானால், அந்தக் காலத்தில் இந்தியாவில் 15 கோடி மகம்மதியர்களாவது இருப்பார்கள்.

ஏனெனில், அந்தப்படி 15 கோடி மகம்மதியர்கள் இருந்தால் தான் இந்தியாவுக்கும் பொறுப்பாட்சி அடைய யோக்கியதை வரக் கூடும் என்பதாகவும் சொல்லுவேன்.

ஏனெனில் பொறுப்பாட்சி அடைவதற்கு விரோதமான கொள்கைகள் மகமதிய மதத்தில் கிடையவே கிடையாது என்பதுதான் நான் இவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னதன் தத்துவமாகும்.

அது போலவே மகமதியர்களும் கவனிக்க வேண்டிய விடயமும் உண்டு. மகமதியர்கள் இனி இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றோ, அல்லது இந்துக்களை இந்தியாவில் இல்லாமல் இருக்கும்படி செய்யலாம் என்றோ கருத முடியவே முடியாது.

எப்படியானாலும் இந்த நாட்டில் இருவர்களும் இருந்துதான் ஆக வேண்டும். பொதுவாக இந்தியாவுக்கு ஏற்பட்ட லாப நஷ்டத்தில் இருவர்களுக்கும் பங்கு உண்டே தவிர மகம்மதியர்கள் எவ்விதத்திலும் விலக்கப்பட்டவர்கள் அல்ல.

நாட்டின் நன்மையைக் கருதி இந்துக்களுடன் ஒத்துழைத்துத் தீர வேண்டிய அவசியம் அவர்களுக் கும் உண்டு. கூடிய சீக்கிரத்தில் இந்துக்கள் என்பவர்களுக்குள் இருக்கும் அநேக குறைபாடுகள் விலகிவிடக்கூடும் என்றே நினைக்கின்றேன்.

அப்பொழுது இந்துக்கள் முஸ்லீம்கள் என்கின்ற வித்தியாசம் இவ்வளவு காணப்பட மாட்டாது. இந்து யார்? முஸ்லீம் யார்? என்று சுலபத்தில் பிரித்துக் காண முடியாத அளவு ஒற்றுமை ஏற்படப் போகின்றது என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை இருக்கின்றது.

மதத்தின் பேரால் உள்ள வெளி வேடங்கள் எல்லாம் மறைந்து மனித வர்க்கத்தின் நன்மைக்கு ஏற்ற அவசியமான ஒழுக்கங்களுடன் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாய்க் காணப்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆதலால் மகம்மதிய சகோதரர்கள் மதத்தைவிட, தேசத்தைவிட முதலாவது நாம் எல்லோரும் மனிதர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மனித சமூகத்தின் நன்மைக்கு ஏற்ற மார்க்கத்தில் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.

மூடப் பழக்க வழக்கங்களையும் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விரோதமானவைகளையும் உதறித் தள்ள மனிதர்கள் என்பவர்கள் எல்லாம் தயாராயிருக்க வேண்டும்.

கொள்கைகள்தான் மதமே ஒழிய, சடங்குகள், வேடங்கள் மதம் அல்ல என்கின்ற உணர்ச்சி தாராளமாய் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். இவைகளே இப்போது எனக்குத் தோன்றிய கருத்துக்களாகும்.

இவற்றை ஒளிக்காமல் உங்கள் முன்னிலையில் சொல்லிவிட்டேன். ஏதாவது தவறுதல்கள் இருந்தால் அதை தள்ளிவிட்டு தங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.

குறிப்பு : 18.08.1929 ஆம் நாள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மகமது நபி பிறந்தநாள் விழா சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 25.08.1929)