periyar 368திரு. ராஜகோபாலாச்சாரியவர்களால் புதிதாக வெளியிடப்படும் “விமோசனம்” என்னும் மாத வெளியீட்டு முதற்பகுதி ஒன்று நமது பார்வைக்கு வந்திருக்கிறது. அதைப் பற்றி “திராவிடன்” எழுதியிருக்கும் தலையங்கமே “விமோசன”த்தைப் பற்றிய மதிப்புரையாகக் கொண்டு கீழே எடுத்துக் காட்டுகின்றோம். 

திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் காந்தி ஆச்சிரமத்தில் இருந்து “விமோசனம்” என்னும் ஒரு மாதப் பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். அதன் இப்போதைய உத்தேசம் மதுவிலக்கையே உறுதி கொண்டதாய் காணப்படுகின்றது.

ஆனாலும் மிஸ் மேயோ அம்மையார் இந்தியத்தாய் என்னும் புத்தகத்தை எழுதியிருப்பதில் அதில் உள்ள விஷயங்கள் எவ்வளவு சரியாயிருந்தாலும், இந்தியாவின் மீது வெளிநாட்டார் தப்பர்த்தம் கொள்ளவும், இந்தியா “சுயராஜ்ஜியத்திற்கு” அருகதை இல்லை என்று பிறர் நினைக்கவும் கருதி எழுதப்பட்டதாய் எப்படி சொல்லப் படுகின்றதோ, அப்படிப் போலவே, திரு.ஆச்சாரியாரின் “விமோசனம்” என்னும் பத்திரிகையையும் அதில் உள்ள விஷயங்களை எல்லாம் சரி என்றே வைத்துக் கொள்வதானாலும் - அது பார்ப்பனரல்லாதார் சிறிதளவாவது இப்போது அரசியலில் பெற்று இருக்கும் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்து மறுபடியும் பூரண பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடனேயே பாமர ஜனங்களை ஏமாற்ற ஒரு ஆயுதமாக உபயோகிப்பதற்காகச் செய்யப்படும் முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், குடிகாரர்களானாலும், கள் உற்பத்தி செய்கின்றவர்களானாலும் அவர்கள் பார்ப்பனர்களாயிருந்தால் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க முயற்சி செய்வதும், அவர்களை அரசாங்க ஆதிக்கத்தில் வைக்க முயற்சிப்பதுமான காரியங்கள் செய்வதும், மேலும் சட்டசபை தேர்தல் நெருங்குகின்ற காலங்களில் மாத்திரம் மதுவிலக்கு என்று கூச்சல் போட்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாத மந்திரிகளின் ஆட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து தேர்தல்களில் தோல்வி உண்டாக்கப்பார்ப்பதும், தேர்தல்கள் முடிந்தவுடன் சிறிதும் கவலையற்று வேறுவழியில் தொல்லை விளைவிப்பதும் கொஞ்ச காலமாக நமது திரு. ஆச்சாரியாரிடம் பார்த்து வருகின்றோம்.

தவிர, இப்போது ஒரு பார்ப்பனரல்லாத மந்திரியினால் சர்க்காரையே மதுவிலக்குப் பிரசாரம் செய்யும்படி சம்மதிக்கச் செய்திருப்பதை மக்களிடம் திரித்துக் கூறி, அது நடைபெறாமல் செய்ய தந்திரம் செய்து கொண்டு, மற்றொரு புறத்தில் தங்கள் இனத்தார்களுக்கே மதுவிலக்குப் பிரசாரப் பெருமை ஏற்பட்டு அதனால் அவர்கள் ஓட்டு சம்பாதிக்க வேண்டு மென்று காங்கிரசின் பேரால் சூழ்ச்சி செய்வதும் பார்த்து வருகின்றோம்.

எப்படி இருந்தபோதிலும் மிஸ் மேயோவின் புத்தகத்தை அலட்சியஞ் செய்யாமல், அதை வாங்கிப் படித்து அந்தம்மையின் எண்ணத்தைப் பற்றிச் சிறிதுங் கவலைப்படாமல் அந்தம்மாளால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும்.

நம் நாட்டிடை உள்ள குற்றங்களை ஒழிக்க நாம் எப்படி முயற்சி செய்கின்றோமோ, அதுபோலவே திரு. சி.ராஜகோபாலாச்சாரியார் எந்த எண்ணத்தைக் கொண்டு “விமோசனம்” என்னும் பத்திரிகையை போட்டாலும் அவரின் எண்ணத்தைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படாமல் அப் பத்திரிகையை ஒவ்வொருவரும் வாங்கி அவர் கூறும் குற்றங்கள் ஒழிய பாடுபட வேண்டியது அவசியம்.

(குடி அரசு - மதிப்புரை - 18.08.1929)