periyar 307தஞ்சை திரு. த.நா. நடராஜனைத் தமிழ் உலகம் நன்கறிந்திருக்கும். அவர் “எனது திடம்” என்னும் தலைப்பின் கீழ் “நேர்வழிகண்டது” என்ற உள் தலைப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு பகிரங்க அபிப்பிராயத்தை மற்றொரு பக்கம் வெளியிட்டிருப்பதைப் பார்த்தால், அவரது தேச தொண்டின் ஆர்வமும், பொதுநலத் தியாகமும் நன்றாய் தெரிய வரும்.

சுமார் 20 வருட காலமாய் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுழைத்திருக்கும் அவர், மற்ற இயக்கங்களோடு கலந்து இருந்து ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்துக் கடைசியாக சுயமரியாதை இயக்கத்தில் ஒருவாறு பற்றுக் கொண்டு அக் கொள்கைகளில் பலவற்றையும் ஏற்றுக் கொண்டு அவற்றிற்காக தனது வாணாளை உபயோகிக்கத் தீர்மானம் செய்து கொண்டிருக்கின்றார் என்பது விளங்கும்.

இவ்வித உறுதி கொண்ட மக்களையே இதுபோது உலகம் சிறப்பாக நமது நாடு எதிர்பார்ப்பதுடன் லட்சியம் கைகூடும்வரை ஒரே உறுதியுடன் நின்று அதற்காக சகலவிதமான தியாகத்தையும் எதிர்ப்பார்க்கின்றது. நிற்க அவரது கடிதத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும், அரசியல் கொள்கையையும் தம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை என்கின்ற குறிப்பும் காணப்படுகின்றது.

எனினும் அவர் மனதில் உள்ளதை ஒளிக்காமல் வெளியிட்டதற்கு நாம் அவரைப் பாராட்டுவதுடன், அதற்குச் சமாதானமும் சொல்லக் கடமை பட்டிருக்கின்றோம், பொதுவாக இந்தியாவானது எந்தக் காரணத்தாலோ யாருடைய சூழ்ச்சியாலோ பல மதக்காரர்களாகவும், பல ஜாதி வகுப்பார்களாகவும் உள்ள மக்களைக் கொண்ட தேசமாக இருக்கின்றது என்பதை யாவரும் மறுக்கமாட்டார்கள்.

அன்றியும் பல மதமும் பல வகுப்பும் ஒன்றுக் கொன்று மகா கொடூரமான ஏற்றத்தாழ்வு, துவேஷம், வெறுப்பு ஆகிய உணர்ச்சியோடு இருக்கின்றன. பல மதமும் பலஜாதி வகுப்பும், துவேஷமும் வெறுப்பும், உயர்வு தாழ்வும் ஒழிந்து ஒன்றாக வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கையானாலும் - அதுவரையிலும் இந்த மதப் பிரிவுக்கும் ஜாதி வகுப்புப் பிரிவுக்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு வேண்டியது அவசியமா அல்லது அவரவர்கள் தன் தன் கையாலானபடி நடந்து கொள்ள ஒருவருக்கொருவர் துவேஷத்துடனும் வெறுப்புடனும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதுதானா என்பதே நமது முக்கிய கேள்வி.

கையில் வலுத்தவன் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று அவர் சொல்ல வருவாரானால் நமக்கு இப்போதைய ஆட்சி முறையே மேலானது என்றுதான் சொல்லுவோம். அப்படிக்கில்லாமல் வலுத்தவனையும் இளைத்தவனையும் ஒன்றுபோல் பாவிக்கப்பட வேண்டுமானால் ஒருவனை ஒருவன் மோசம் செய்யாமல் அவனவன் பங்கை அவனவன் அடைய ஒரு ஏற்பாடு செய்துதான் ஆகவேண்டும் என்போம்.

இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்கு நன்மையா அல்லது இந்த ஆட்சிக்கும் பார்ப்பனருக்கும் நன்மையா என்பதற்கு ஒரே ஒரு பரீட்சை சொல்வோம். என்னவென்றால், அரசியலில் எந்தெந்த காரியம் பார்ப்பனனும் வெள்ளைக்காரனும் கூடாது என்கின்றார்களோ அவையெல்லாம் நமக்கு மிக்க அவசியமானது என்பது பொதுவாக எல்லாப் பெரியோர்களும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

ஏனெனில், இந்த நாட்டின் மீது இப்போதுள்ள கொடுமையான ஆட்சி முறைக்கு இந்த இரு கூட்டத்தார்களே அவர்களது சுயநலம் காரணமாக பொருட்டானவர்களாவார்கள். ஆகவே அவர்கள் ஒரு கொள்கையை வேண்டாம் என்று சொல்வார்களானால் அது அவர்களுக்கு விரோதமும் நமக்கு நம்மையும் என்றுதான் அறிவுள்ளவர்கள் கருதுவார்கள்.

இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. இதுதான் போகட்டும், என்றாலும் திரு. ஜவஹர்லால் நேருவைப் பின்பற்றுவதாகச் சொல்லும் திரு.நடராஜன் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பிடிக்கவில்லை என்று சொல்வது மிகவும் அதிசயமாய் இருக்கின்றது.

ஏனெனில் திரு.ஜவஹர்லால் அவர்கள் நாட்டில் ஏழை பணக்காரன் என்கின்ற வித்தியாசங்கூட இருக்கக்கூடாது என்றும் பணக்காரனுடைய பூமிகளை ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும் கூட கருதி இருப்பதாக ஜாடை காட்டியிருக்கின்றார்.

அப்படி ஒரு சமயம் பங்கிடும் சந்தர்ப்பம் வந்தால் அவர் எல்லோருக்கும் விகிதாச்சாரப்படி பங்கிட்டு கொடுப்பாரா? அல்லது கையில் வலுத்தவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று சண்டை போட்டு மண்டை உடைத்துக் கொள்ள விடுவாரா? என்றுதான் கேட்கின்றோம்.

அவனவன் உரிமை அவனவன் வகுப்புரிமை - அவனவன் மத உரிமை - அவனவன் நாட்டுரிமை - அவனவன் தேச உரிமை என்கின்ற முறைப்படி வந்தால்தான் உலகம் உண்மையான உரிமையை காண முடியுமே ஒழிய மற்றப்படி தலைகீழாய் போவதாய் ஒரு உரிமையும் பெற முடியாதென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

ஏனெனில் தன்னுரிமை பெற முடியாதவன் தன் வகுப்புரிமை பெற முடியாது. தன் வகுப்புரிமை பெற முடியாதவன் தன் மத உரிமை பெற முடியாது. தன் மத உரிமை பெற முடியாதவன் தன் நாட்டுரிமை பெற முடியாது. தன் நாட்டுரிமை பெறமுடியாதவன் தன் தேச உரிமை பெற முடியாது. இதுவே நமது முடிந்த முடிவு. ஆதலால் தான் நமது சுயமரியாதை இயக்கம் முதலில் தன் உரிமைக்கும் பிறகு தனது வகுப்புரிமைக்கும் பாடுபடுகின்றதை முக்கிய கொள்கையாய் கொண்டிருக்கின்றது.

ஒருவனுக்கு முதல் முதலாக தான் என்பதும் பிறகு தனது வகுப்பு என்பதும் பிறகு தனது நாடு என்பதும் பிறகு தனது தேசம் என்பதும் படிப்படியாக மறைந்து கடைசியாக எல்லாம் ஒன்று என்கின்ற சம நோக்குவரும் காலத்தில் தான் பொது உலக உரிமையை நாட முயற்சிக்க முடியும்.

அப்படிக்கில்லாதபோது தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் எங்கேயோ நடுவில் புகுந்து கொண்டு தன் உரிமை வேண்டாம் தனது வகுப்பு உரிமை வேண்டாம் தனது நாட்டு உரிமை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தேச உரிமையே பெரிது என்றால் இதில் ஏதாவது அர்த்தமுண்டா? என்றுதான் கேட்கின்றோம்.

உலகத்தில் மற்ற மனிதரைப் போல் திரு.நடராஜனும் ஒரு மனிதராய் இருக்கும் போது உலகத்தில் மற்ற தேசங்களைப் போல் இந்தியாவும் ஒரு தேசமாய் இருக்கும்போது, இந்தியா தேச உரிமையைப் பற்றி மாத்திரம் இவருக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்டால் அதற்கு அவர் என்ன பதில் சொல்லக் கூடும்? “இந்தியாவென்றும், இங்கிலாந்து என்றும் துருக்கி என்றும் ஏன் பாகுபடுத்த வேண்டும்? தேசவாரி உரிமை என்பது உலகத்தின் ஒற்றுமையைக் கெடுக்காதா? உலக முன்னேற்றத்திற்குத் தேசவாரி ஒற்றுமை முட்டுக் கட்டையல்லவா?” என்று யாராவது கேட்டால் இதற்கு தேசியவாதிகளின் பதில் என்ன என்று கேட்கின்றோம்.

“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடு வோம்” என்று பாரதி சொன்னாரே அதுபோலவே தனி ஒரு வகுப்புக்கு உரிமை இல்லை என்றால் எவ்வித தேசீயத்தையும் அழித்திடுவோம் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமாகும்.

வகுப்புரிமை கிடைத்தவுடன் இனி கிடைக்க வேண்டிய உரிமை என்ன என்பது படிப்படியாக சுயமரியாதை இயக்கத்திற்குத் தெரியும் என்றே சொல்லுவோம். ஆதலால் நாட்டின் நலமானது வகுப்புரிமையில் கெட்டுப் போகாதென்றும் அதில்லாவிட்டால் தான் கையில் வலுத்தவன் பாடு என்பதானால் தான் கெட்டுப்போகும் என்றும் திரு.நடராஜனுக்குச் சொல்லுகின்றோம்.

தவிர அரசியல் கொள்கை பிடிக்கவில்லை என்கின்றார். அரசியல் என்றால் இன்னது என்பதை உணராத காரணத்தாலேயே இவ்விதம் சொல்ல நேரிடுகின்றதே ஒழிய வேறில்லை. திரு.நடராஜன் மாத்திரமல்லாமல் மற்றும் அநேக வாலிபர்கள் இப்படிச் சொல்லுவதைக் கேட்கின்றோம்.

வெள்ளைக்கார ஆட்சிக்கும் நமக்கும் உள்ள அபிப்பிராய பேதம் இன்னது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் திரு.நடராஜனின் அபிப்பிராயம் வெள்ளைக்காரர்களின் ஆட்சி கூடாது என்பது அபிப்பிராயமா? அல்லது உலகத்திற்கு ஒரு அரசாட்சியே தேவையில்லை என்பது அபிப்பிராயமா? என்பது முதலில் விளங்க வேண்டும்.

உலகத்திற்கு அரசாட்சியே வேண்டாம் என்று சொல்வதானால் சுயமரியாதை இயக்கம் அதை ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும். ஏனெனில் மதம் கடவுள் அரசு முதலியவைகள் எல்லாம் மனிதனின் சுயமரியாதையை ஒழித்து எப்படியாவது அடிமைப்படுத்துவதற்கு ஏதுக்களானவைகளே ஒழிய அவை ஒரு விதத்திலும் சுதந்தரம் அளிப்பவைகளல்ல.

அன்றியும் மேற்கண்ட மூன்றும் அயோக்கியத்தனம் ஒழுக்கவீனம் ஏமாற்றல் ஆகிய கல், மண், மரம் முதலியவைகளால் கட்டப்பட்ட கோட்டைகளாகும். அதற்குள் அகப்பட்டவன் சுதந்தரமாக இருக்கவே முடியாது. ஆகவே அம்மூன்றையும் இடித்து எறிவதில் சுயமரியாதை இயக்கத்திற்கு ஆட்சேபணை இருக்க நியாயமில்லை. ஆனால் “இந்தக் கடவுள் வேண்டாம் அந்தக் கடவுள் வேண்டும். இந்த ராஜா வேண்டாம் அந்த ராஜா வேண்டும் என்பது போன்ற வார்த்தைகள் மாத்திரம் அறிவற்றதும் பயனற்றதுமேயாகும்” என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றது. அரச ஆட்சியை அடியோடு விலக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை ஒப்புக் கொள்ளுவதானால் வெள்ளைக்கார அரசாட்சி வேண்டாம் என்று ஒரு நிறத்தின் பேரால் ஆட்சேபிப்பதில் அர்த் தமே இல்லை என்று தான் சொல்லுவோம்.

ஆதலால் அரசியல் விஷயங் களை அவர்கள் மிக்க ஜாக்கிரதையோடும் நுட்பத்தோடும் கவனித்துப் பார்க்க வேண்டும். திரு. நடராஜனோ அல்லது மற்ற நண்பர்களோ இந்த முறையில் பார்த்து பிறகு நமது அரசியல் கொள்கையில் என்ன தப்பு இருக்கின்றது? என்பதை நமக்கு விளக்குவார்களானால் அவசியம் நாம் சமாதானம் சொல்ல முயற்சிப்போம். மற்றபடி திரு.நடராஜனை மனமார வர வேற்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 18.08.1929)