periyar 849திருநெல்வேலியிலும், திருப்பாப்புலியூரிலும் சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர்கள் அண்ணாமலை பிள்ளை, சாமிநாத செட்டியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிருஷ்ணசாமி பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும், மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டுக் கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை,  பூவாளூர் செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவ சமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரசாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும் அதைப் பற்றி நாம் முன் எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாக பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன் மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1929)

***

“குடி அரசு” வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இந்த இரண்டு மூன்று வாரமாய் தெரிவித்து வந்தபடி நமது பத்திரிகாலயத்தை சென்னையில் நிறுவ வேண்டிய ஏற்பாடு செய்து வருகின்றோம். இதனால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் நமது பத்திரிகை தடைப்படலாம். பிறகு சென்னையிலிருந்து மேல்காகிதத்துடனும் 20 பக்கங்களுடனும் வெளிவரும்.

குறிப்பு :- “குடி அரசு” ஆரம்பித்த இந்த ஐந்து வருஷ காலத்தில், இரண்டாவது வருஷ முதலில் ஒரு தடவை ஒரே வாரமும், இப்போது ஒரு தடவையும் தான் அதுவும் அபிவிர்த்தி காரணமாகவேதான் தவக்கப்பட்டிருப்பதால், வாசகர்கள் அவசியம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.

( ப - ர் )

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 02.06.1929)

***

சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு

சகோதரி சகோதரர்களே!

இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர்களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப்பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரவேற்புக் கமிட்டியார் தெரிந்தெடுத்ததற்கு நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர்களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சௌந்திர பாண்டியனார், சொ. முருகப்பர், எஸ். குருசாமி ஆகிய முக்கியமானவர்களில் ஒருவராவார். ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடு கூடவே, செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக்கொள்கையையே பின்பற்றுகிறவருமாவார்.

நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்”க்கு பெயரளவில் நான் பத்திராதிபனே ஒழிய காரியத்தில் அவரேதான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர். அவரது எழுத்துக்களும், கருத்துக்களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளிமாகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்து விட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத்தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக்கிறது. இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாதாரர்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர, திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும் அறிவும் இருப்பதின் நிமித்தம் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக்கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவதென்றும், அதிலும் விதவையாயிருத்தலே மேலென்றும் தீர்மானித்துக் கொண்டிருப்பவர். எனவே இப்பேர்ப்பட்ட, அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்.

(குறிப்பு : பட்டுக்கோட்டையில் 24.05.1929 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டுத் தலைவரை வழிமொழிந்து ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 02.06.1929)