சுயமரியாதை மகாநாடு ஆலயப் பிரவேச மகாநாடு சுயமரியாதை கொள்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டன

periyar 389இப்போது உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை என்பது ஆகாயத்திலிருந்தோ மக்கள் பிறக்கும்பொழுது தாய் வயிற்றிலிருந்தோ உண்டாய் விடவில்லை. மதத்தினாலும், கடவுளினாலும், கோவிலினாலும் வேத புராணங்களினாலுமே உண்டாயிற்று. தீண்டாமை ஒழிய வேண்டுமானால் அதை வலியுறுத்தும் மதங்களும் கடவுள்களும், கோவில்களும் அவற்றிற்கு ஆதாரமான வேத சாஸ்திர புராணங்களும் அடியோடு ஒழிந்தாக வேண்டும். இவைகளில் ஒரு சிறிது மீதி இருந்தாலும் மறுபடியும் அது வளர்ந்துவிடும்.

இதுவரையில் தீண்டாமையை ஒழிக்கப் பிரயத்தனப் பட்டவர்கள் யாரும் தீண்டாமைக்கு அஸ்திவாரமான காரியத்தை அறியாமலும், சிலர் அதைப் பற்றி அறிந்தும் கவலை கொள்ளாமலும், சிலர் வேண்டு மென்றே தெரிந்து மறைத்துவைத்தும் மக்களையும் ஏமாறச் செய்து விட்டுப் போய் விட்டார்கள், இப்பொழுதும் சில போலித் தீண்டாமை விலக்கு பிரசாரக்காரர்கள் அதை வலியுறுத்தும் மதத்தையும் கோவிலையும் சாமிகளையும் அது சம்பந்தமான ஆதார புராணங்களையும் வைத்துக் கொண்டே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உங்களை ஏமாற்றுகின்றார்கள். உதாரணமாக பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பெயர் கொண்ட வர்ணாச்சிரமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் வேதம் மனுதர்ம சாஸ்திரம் என்பவைகள் உள்ள வரையிலும், தீண்டாமை ஒழியாது.

சூத்திரன் கடவுளை வணங்கியதற்காக பிராமணன் குழந்தை செத்துப் போனதாகவும், கடவுள் அவதாரமாகிய ராமன் என்பவன் அந்த சூத்திரனைக் கொன்ற பின் அந்தப் பிராமணக் குழந்தை உயிர் பெற்றெழுந்ததாகவும் சொல்லும் இராமாயணமும் இராமன் என்னும் கடவுளும் உள்ள வரையிலும் தீண்டாமை ஒழியாது,

அது போலவே ‘பறையன்’ என்னும் நந்தன் நெருப்பில் விழுந்த பிறகுதான் கடவுள் தரிசனை கிடைத்தது என்கின்ற பெரியபுராணமும் அதிலுள்ள கடவுள்களும் உள்ளவரையிலும் தீண்டாமை ஒழியாது!

ஜீவகாருண்யமும் அன்பும் ஒழுக்கமுமே பிரதானம் என்று சொன்ன பௌத்தரையும் சமணர்களையும் நாஸ்திகர்கள் என்னும் ஜீவ இம்சையும் இரக்கமற்ற தன்மையும் ஒழுக்கங்கெட்ட நிலைமையும் கொண்டுள்ளவர் களை பெரியோர்கள் சமயாச்சாரிகள், ஆழ்வார்கள் என்று கொண்டாடும் புராணங்களும் சமயங்களும் உள்ளவரையிலும் தீண்டாமை ஒழிந்து, ஒழுக்கமும் அன்பும் மக்களுக்குள் ஏற்படாது.

உண்மையிலேயே கஷ்டப்படும் மக்களாகிய தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு இப்போதிருக்கும் “நரகத்தை”விட இனி வேறு நரகம் இல்லை. ஆத லால் இந்த நரகத்திலிருந்து மீள வேண்டும் என்கின்ற ஆசை உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் கட்டாயம் உங்கள் மீட்சிக்கு விரோதமாய் இன்றும் உங்கள் முன் தோன்றும் மதத்தையும் அதன் ஆதாரங்களையும் அடியோடு வெறுத்துத் தள்ள வேண்டுமென்றும், சில மதப் புரட்டர்களும், அதனால் வயிறு வளர்ப்பவர்களும், அவர்களால் அமர்த்தப்பட்ட கூலிகளும் உங்களிடம் வந்து “மதத்தின் தத்துவம் அதுவல்ல” வென்றும் “புராணத்தின் கருத்து இதுவல்ல” வென்றும் அது ‘இடைச்செருகல்’ ‘உட்கிடக்கை வேறு’ ‘அதற்கு அகச்சான்று இல்லை’ ‘இதற்கு புறச்சான்று இல்லை’ ‘என் வருணாசிரமம் வேறு’ ‘என் இராமன் வேறு’ ‘என் கிருஷ்ணன் வேறு’ என்றும் பேசி உங்களை மயக்கி ஏமாற்ற வருவார்கள் என்றும் அதை நீங்கள் கண்டிப்பாய் நம்பக் கூடாதென்றும் சொல்லி வந்து, உதாரணமாக சூத்திரன் கடவுளை ஸ்மரித்ததற்காக ராமன் அவனை கொன்றது என்கின்ற விஷயம் மத்தியில் பார்ப்பனர்களால் சேர்க்கப்பட்ட கதை என்று சொல்லி உங்களை சிலர் ஏமாற்றுவார்கள். ஆனால் அவர்களை நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேளுங்கள், அதாவது “சம்பூகனைக் கொன்ற இராமா! என்னைக் காப்பாற்று” என்று ஆழ்வார்கள் பாடின பாட்டு நாலாயிர பிரபந்தத்தில் இருக்கின்றதே அதற்கு என்ன சொல்லுகின்றீர்கள்? என்றும், அந்த ஆழ்வாரையும், பிரபந்தத்தையும் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும், அந்த ஆழ்வார் புரட்டாழ்வாரா? அல்லது அந்த பிரபந்தம் புரட்டா என்றும் தைரியமாக கேளுங்கள்!

அதோடு புத்தர் கடவுள் உண்டு என்று சொன்னார் என்றும், புத்தர் கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றும் சொல்லுபவர்கள் நாஸ்திகர்கள் என்றும் சில தற்குறிகள் உங்களிடம் பேசி விட்டுப் பார்ப்பனர் களிடம் கூலி பெறுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களை நீங்கள் ஒன்று கேளுங்கள். அதாவது புத்தர் நாஸ்திகர், கடவுள் இல்லை என்று சொன்ன பாதகர் என்று சொல்லி இருக்கும், இராமன் முதலிய கடவுள்களும், சமயாச் சாரிகளும், நாயன்மார்களும், ஆழ்வாராதிகளும் ஆராய்ச்சி அற்றவர்களா அல்லது பொய்யர்களா அல்லது அயோக்கியர்களா? அல்லது அவர்களின் அவ்வித இராமாயணம், பாரதம், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் முதலிய ‘வணங்கத் தகுந்த’ புஸ்தகங்கள் பொய்யா? அல்லது இடைச்செருகலா?அல்லது அகச்சான்று புறச்சான்றுகள் அற்றவையா? அல்லது நீவிரும் நும் குழாங்களும்............ளா என்று கேளுங்கள்.

கடைசியாக உங்களை யார் நாஸ்திகர் என்றாலும் பயப்படாதீர்கள் “ஆஸ்தி கர்”களைப் போல் கூலிக்காக நாம் நாஸ்தீக பிரசாரம் செய்யவில்லை என்றும், நாஸ்தீகர் என்றால் வேத சாஸ்திர புராணங்களின் புரட்டுகளை வெளிப்படுத்து வதைத் தவிர வேறில்லை. ஆதலால் நானும் நீங்களும் மற்றும் சுயமரியாதையையும், சமத்துவத்தையும் விடுதலையையும் வேண்டும் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களே ஆக வேண்டும். அதில்லாமல் வேறு வழியில்லை.

யாராவது வந்து உங்களிடம் நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வதாகும் என்று சொல்ல வந்தால் அதற்கும் நீங்கள் பயந்து ஏமாந்து போகாமல் தைரியமாக அவர்களை ஒன்று கேட்க வேண்டும். அதாவது கடவுள் என்றால் என்ன? நீ எதைக் கடவுள் என்று நினைத்துக் கொண்டு பேசுகின்றாய் என்று முதலில் கேட்க வேண்டும். இந்தக் கேள்வி கேட்டால் முதலில் எவனும் விழிப்பான். ஒருவன் சக்தி என்பான்; ஒருவன் ஜோதி என்பான்; ஒருவன் அருள் என்பான்; ஒருவன் அன்பு என்பான்; ஒருவன் அறிவு என்பான்; ஒருவன் உயிர் என்பான்; ஒருவன் ஆன்மா என்பான்; ஒருவன் சித்து என்பான்; ஒருவன் சத்து என்பான்; ஒருவன் சைதன்னியமென்பான்; ஒருவன் பதி என்பான்; ஒருவன் அழகு என்பான்; ஒருவன் இன்பம் என்பான்; ஒருவன் சைபர் என்பான், ஒருவன் நாமரூப குணம் இல்லாதது என்பான், ஒருவன் அது உன் மனதுக்கும் அறிவுக்கும் எட்டாதது என்பான், கடைசியாக சர்வசக்தியும் சர்வ வியாபகமும் சர்வ தயாபரத்துவமும் அவனன்றி ஒரு அணுவும் அசையாத அதிகாரமும் பெற்ற ஒரு வஸ்து என்பான்;

இப்படியாக ஊமையன் கனாக்கண்டு சொல்வது போல் அவனுக்கும் புரியாமல் நமக்கும் தெரிய மார்க்கமில்லாமல் உளறிக் கொட்டுவான். கடைசியாக இந்த பயித்தியக்காரனுடன் இவ்வளவு நேரம் ஏன் பேசினோம்? நேரம் வீணாகப் போயிற்றே என்று தான் உங்களுக்குத் தோன்றும். ஆனாலும் சோர்வடைந்து விடாமல் அப்பேர்ப்பட்ட கடவுளை பரப்ப உன்னை அனுப்பினது யார்? நீ நினைத்துக் கொண்டிருக்கும் கடவுளா? அல்லது நீயாகவே வந்தாயா? என்று கேளுங்கள், அவன் கடவுள் அனுப்பித்தான் வந்தேன் என்றால், அந்தக் கடவுள் இது தன்னால் ஆகாத காரியம் என்று கருதி உனக்கு வக்காலத்துக் கொடுத்து எம்மிடம் அனுப்பினாரா? என்று கேளுங்கள்! அல்லது “நானாகவே வந்தேன்” என்றால் அப்பொழுது உனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லையா அவர் தன்னை எல்லோரும் அறியும்படி செய்து கொள்ள மாட்டாரா?

அன்றியும் கடவுள் திருவுளம் இல்லாமல் ஒருவன் கடவுளை இல்லை என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்பதோடு “பைத்தியக்காரா! உனக்குக் கடவுளைப் பற்றி இப்போதுதான் அ.ஆ தெரியும், எங்களுக்குக் கடவுளைப் பற்றி நாங்கள் என்று தீண்டாதவர்கள் என்று சொல்லப்பட்டோமோ அன்று முதலே தெரியும், ஆதலால் வேறு எங்காவது போய் உன் வயிற்று பிழைப்புக்கு இடம் பார்த்துக் கொள்” என்று மரியாதையாய்ச் சொல்லி அனுப்பிவிடுங்கள் என்றும் சொன்னதோடு, நாஸ்தீகம் என்கின்ற பழிப்புக்கு பயந்து கொண்டோ கலைகள் ஓவியம் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு பயந்து கொண்டோ தீண்டாமை கடவுள் செயல் என்பதாக முட்டாள்தனமாக கடவுளை நம்பிக் கொண்டோ நீங்கள் உங்கள் சுயமரியாதை முயற்சியில் அதாவது உங்கள்மீது கடவுள் பேராலும் மதத்தின் பேராலும், வேத சாஸ்திர புராணங்கள் பேராலும் - சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் இழிவிலிருந்து விடுதலை பெற ஒரு நிமிஷமும் தயங்காதீர்கள், கடவுள் அல்ல, மதம் அல்ல, வேத சாஸ்திர புராணமல்ல; சமயச்சாரியார்; நாயன்மார்கள்; ஆழ்வார்கள் அவதாரங்கள் அல்ல, மற்றும் உங்கள் உயிர்கள் அல்ல எதுவானாலும் சரி, அவைகளை யெல்லாம்விட சுயமரியாதையே பிரதானம் என்று எண்ணினீர்களானால் கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள்; அதில்லாதவரை இப்படியே இருப்பீர்கள்.

(குறிப்பு : 08.05.1929 திருவாங்கூரில் நடைபெற்ற சுயமரியாதை - ஆலயப்பிரவேச மாநாடு - சொற்பொழிவு .

குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1929)