சமயம் என்பதைப் பற்றி சென்ற வாரம் ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். இவ்வாரம் சைவ சமயம் என்பது பற்றி எழுதுகின்றோம்.

கொஞ்ச காலமாக சைவ சமயத்தின் பேரால் சிலர் போடும் கூச்சல் அளவுக்கு மேல் போகின்றது. சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்று கட்சி சேர்க்கின்றார்களாம். அரசியல் பிழைப்புக்காரர்கள் சிலர் அப்படித்தான், அதாவது, “சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும், அதை ஒழிக்காவிட்டால் சுயராஜ்யம் தடைபட்டுப் போகும்” என்று கூச்சல் போட்டார்கள். கூலி கொடுத்தும் கூச்சல் போடச் சொன்னார்கள். அவ்வளவு கூச்சல்களையும் அடக்கிக் கொண்டு இப்போது நமதியக்கம் தலை நிமிர்ந்து நிற்கின்றதையும் அரசியல்காரர்களில் பெரும்பாலோரும் இதை ஆதரிப்பதையும் பார்த்து ஒருவாறு அடங்கி விட்டார்கள். இப்போது சைவ சமயத்தார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலர் கிளம்பி சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டுமென பிரசாரம் செய்து வருகின்றார்கள். இச்சைவ சமயத்தார்கள் என்பவர்கள், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனீயத்தையும், பார்ப்பனர்களையும் கண்டிக்கும் பொழுதும், வைணவ சமயத்தையும் வைணவர்களையும் கண்டிக்கும் பொழுதும் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டு நம் மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் புகழ் புராணமும் கவியும் பாடிக் கொண்டிருந்தார்கள்.

periyar anna karunanidhi and mgrஅதாவது, பார்ப்பன ஆதிக்கத்தை கண்டித்து சங்கராச்சாரியாரை தாக்கி வரும் போது நமக்கு உதவியும் செய்தார்கள். பிறகு வைணப் புராணங்களின் வண்டவாளங்களை வெளியாக்கும்போதும் நமக்கு உதவி செய்து வந்தார்கள். இதுமாத்திரமல்லாமல், இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும், இந்து மதம் என்று சொல்லப்படுவது பார்ப்பனாதிக்கக் கொள்கைகள் கொண்டது என்றும் சொல்லும் போதும் அதை ஆதரித்து அதற்கும் வேண்டிய ஆதாரங்கள் உதவி வந்தார்கள்.

கடைசியாக சைவ மதப் புராணங்கள் என்பவைகளின் முறையில் அவற்றின் யோக்கியதைகளை வெளியாக்க நேரிட்டபோது மாத்திரம் ‘சுயமரியாதை இயக்கம் சமயங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது; மோக்ஷத்திற்குத் தடையாய் நிற்கின்றது’ என்று சொல்ல வந்து விட்டார்கள். எனவே சைவ மதம் என்றால் என்ன? அது பார்ப்பன மதமல்லாமல் வேறு தனி மதம் என்றோ அல்லது தமிழ் மக்கள் மதம் என்றோ யாராவது சொல்ல முடியுமா? என்பதை முதலில் கவனிக்க விரும்புகின்றோம்.

நம் நாட்டு சைவர்கள் பெரும்பாலும் தாங்கள் ‘பார்ப்பன மதத்தை வெறுக்கின்றோம்’ என்கின்றார்கள். அன்றியும் பார்ப்பனர்களது மத ஆதாரம் என்பவைகளாகிய நான்கு வேதங்கள் என்பதையும் சைவர்கள் தங்களுக்கு சம்பந்தப்பட்டதல்ல என்கின்றார்கள். பார்ப்பனர்களின் “மோக்ஷ” சாதனமான வேள்விச் சடங்குகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ளுகின்றதில்லை என்கின்றார்கள். மற்றும் புராணங்கள் என்பவைகளையும் ஆரிய சாஸ்திரங்கள் என்பவைகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ள முடியாது என்பதுடன் அவைகள் பொய் என்றும் கற்பனை என்றும் சொல்ல முன் வந்திருக்கின்றார்கள். பார்ப்பன ஆச்சாரியார்களும் அதாவது சங்கராச்சாரி போன்றார்களும் தங்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் அல்ல என்றும் சொல்லுகின்றார்கள்.

மற்றும் எவ்வளவோ, அதாவது, “ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!” என்று ஆரியத்தையும் தமிழையும் பிரித்து ஆரியத்திற்கும், தங்களுக்கும் தங்கள் சைவ மதத்திற்கும் சிறிதும் சம்மந்தமில்லை என்றும் தாங்கள் தனித்தமிழ்ச் சமயத்தார் என்றும் சொல்லிக் கொள்ளுவதுடன் அதற்கு வேண்டிய ஆதாரங்களையும் கண்டு வைத்திருக்கின்றார்கள். உதாரணமாக ‘தென்னாட்டு சிவனே போற்றி’ என்றும் பிரித்துச் சொல்லுகின்றார்கள். எனவே இந்நிலையில், சைவ மதம் என்றால் என்ன?

முதலாவதாக, கற்பனை என்றும் பொய் என்றும் ஆபாசமென்றும் அசம்பாவிதம் என்றும் சொல்லும்படியான கந்தபுராணம், சிவமகா புராணம் முதலாகிய புராணங்களை ஒதுக்கி விட்டு பார்த்தால் சிவனுக்கோ, சைவத்திற்கோ ஏதாவது கடுகளவு இடம் இருக்கின்றதா என்பதை கூர்ந்து நோக்கும்படி வாசகர்களை கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இரண்டாவதாக, இந்து மதத்தையோ, வைணவ மதத்தையோ, சைவ மதத்தையோ தனித் தனியாகவோ பொதுவாகவோ எடுத்துக் கொண்டு பார்ப்போமேயானால் அவைகளிலுள்ள பொதுவான கடவுள்களும், வைணவ, சைவ கடவுள்களும், சுரர்கள் என்னும் “தேவர்”களின் வேள்வி என்னும் யாகத்தை அழித்து வந்த அசுரர்கள் என்னும் “அரக்கர்களை” கொன்று வென்று யாகத்தைக் காக்க வந்தது என்கின்ற அஸ்திவாரம் தவிர வேறு மார்க்கத்தில் வந்த கடவுள்கள் ஏதாவது எங்காவது இருக்கின்றனவா? என்று பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

அல்லது பார்ப்பனர்கள் என்னும் ஆரியர்களின் வேதத்தை ஒப்புக் கொள்ளாததினாலோ, நிந்தித்ததினாலோ உலகம் “நீதியும் ஒழுக்கமும் கெட்டுப் போய்விட்டது” என்று சொல்லிக் கொண்டு அவதாரம் செய்ததாகவோ தோன்றியதாகவோ அல்லாமல் வேறுவழியில் வந்த ஏதாவது கடவுள்கள் உண்டா? இருக்கின்றனவா?

இந்து, வைணவ, சைவ சமய சம்மந்தமான எந்த புராணமும் இதைத் தவிர வேறு என்ன காரணங்களாவது கற்பிக்கின்றனவா?

உதாரணமாக, சைவ சமயச்சாரியார்கள் என்பவர்களும், “வேத வேள்வியை மக்கள் நிந்தனை செய்ததால் தோன்ற வேண்டியவர்களானார்கள். வேத வேள்வியை நிந்தனை செய்த மக்களையும் அழித்து வேத வேள்விச் சமயத்தையும் கடவுள்களையும் ஆதரிக்க வேண்டியவர்களானார்கள்” என்பதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் வேதத்தையும் வேள்வியையும் தள்ளிவிட்டு அவற்றைக் காப்பாற்ற வந்த கடவுள்களையும் தள்ளிவிட்டு ஆரியர்களால் புனையப்பட்டது என்கின்ற புராணங்களையும் தள்ளி விட்டால், தேவாரத்திற்கோ, திருவாசகத்திற்கோ மற்றும் “தமிழ் மறை”க்கோ எங்காவது இடமிருக்கிறதா என்று கேட்கிறோம்.

சிவம், சைவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்ற வார்த்தைகளும் ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்னும் வழக்கை சுலபத்தில் தள்ளிவிட முடியாது. மற்றும் சைவக் கடவுள்கள் பெயரும் அக்கடவுள்களின் பெண்ஜாதி பிள்ளைகளின் பெயரும் அனேகமாய் முழுதும் ஆரிய பாஷைப் பெயர்களே தவிர வேறில்லை. மற்றும் அப்பெயர்களுக்கு ஏற்ற காரணங்களும் அக்காரணங்களுக்கு ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட கதைகள்தான் ஆதாரமே ஒழிய வேறில்லை. மற்றும் அப்பெயர்களுக்கும் கதைகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட புராணங்கள் என்பவைகளும் பெரிதும் ஆரிய மூலத்திலிருந்து மொழி பெயர்த்ததாகச் சொல்லப்படுப்பவைகளே யல்லாமல் வேறல்ல.

நிற்க. சைவ சமயம் தென்னாட்டில் பரவி இருக்கின்ற அளவு மற்ற நாட்டில் அதாவது வடநாட்டில் பரவி இருப்பதாக சொல்ல முடியுமா? வட நாடு முழுவதும் ஏறக்குறைய வைணவ மதம் என்றே சொல்ல வேண்டும்.

தென்னாட்டில் மாமிசம் சாப்பிடாதவனுக்கு எப்படி சைவன் என்று சொல்லப் படுகின்றதோ அதுபோல வடநாட்டில் மாம்சம் புசிக்காதவனுக்கு வைஷ்ணவன் என்று சொல்லுவதுண்டு.

தென்னாட்டிலும் சமயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சிலர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் சைவ சமயத்தார்களோ சைவ சமயம் இன்னது என்று அறிந்தவர்களோ வெகு சிலர் என்றுதான் சொல்ல வேண்டும். பாக்கியுள்ள மக்கள் அதாவது 100 - க்கு 90 - பேர்கள் மாரி, கருப்பன், மாடன், மதுரை வீரன், பேச்சி என்பது போன்ற கடவுள் வணக்கக்காரரும் மற்றும் ஒரு சிலர் சைவ வைணவக் கடவுள்களையும் இக்கூட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கின்றவர்களுமே தவிர வேறல்ல.

ஏதோ பழைய காலத்து அரசர்கள் தங்கள் மடமையினால் கட்டி வைத்த கோவில்களும் அவர்கள் விட்ட சொத்துக்களால் நடக்கும் உற்சவங்களும், இப்போது சில கொடுமைக்காரர்கள் மக்களிடைத்திலிருந்து அனியாய வழிகளில் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு கீர்த்திக்கும் தங்களை உயர்த்திக் கொள்வதற்கும் சிலர் தாங்கள் செய்த கொடுமையினால் ஏற்படும் பாவத்தைத் தொலைப்பதற்கும் என்று பழுது பார்ப்பதும் புதுப்பிப்பதும் இல்லாவிட்டால் இவ்வளவு பெருமைகள் கூட சொல்லிக் கொள்ள வகை இருக்காது என்றே சொல்லலாம்.

சமயம் என்பதும், வைணவம் என்பதும், சைவம் என்பதும் என்ன என்று பொதுவாக யோசிக்குமிடத்தில் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு தங்களை அறியாமல் பார்ப்பனியத்திற்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் உழைக்கும் சாதனங்களா அல்லவா என்பதை நிதானித்து நடுநிலைமையில் இருந்து பார்த்தால் யாருக்கும் விளங்காமல் போகாது.

எனவே இப்படிப்பட்ட சைவத்தைப் பற்றியோ சமயத்தைப் பற்றியோ ஏதாவது எழுத நேரிடுவதால் “நாட்டின் ஷேமத்திற்கோ மக்களின் மோட்சத்திற்கோ” எவ்விதமான ஆபத்துக்கள் எப்படி நேரிட்டு விடும் என்பதைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி நிதானமாய் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 07.10.1928)