நாம் சென்ற வாரம் ‘குடி அரசில்’ திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களைப் பற்றி எழுதியதில் ‘நவசக்தியின் சீர்திருத்தம்’ என்கிற கட்டுரையானது திரு. முதலியாரால் பேடித்தனமாகவும், திருட்டுத்தனமாகவும் நம்மைக் குறிப்பிட்டே ஜாடையாக எழுதப்பட்டதென்னும் பொருளைக் காட்டியதோடு அதை நாம் மறுக்கவோ, கண்டிக்கவோ ஆரம்பித்தால் உடனே, திரு.முதலியார் “அது குடி அரசைப் பற்றி எழுதவில்லை” என்றும் பொதுப்பட எழுதினது என்றும் எழுதி ஒளியப் பார்ப்பார் என்றும் எழுதியிருந்தோம்.

periyar 533அது போலவே இவ்வாரம் “நவசக்தி”யில் திரு.முதலியார் அவர்கள் “குடி அரசின் குதர்க்கம்” என்னும் தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டபடியே தமது பழங் குணத்தைக் காட்டியிருக்கிறார். அதாவது, “குடி அரசு” குதர்க்கத்தில் பேர் பெற்றது என்றும், அது தோன்றியது முதல் யாரையேனும் போருக்கிழுப்பதே அதன் வேலை என்றும், அது இவ்வாரம் தம்மீது (திரு. முதலியார் மீது) நாட்டத்தைச் செலுத்தி இருப்பதாகவும் எழுதிவிட்டு, “நவசக்தியில் தோன்றிய ‘சீர்திருத்தம்’ என்னும் கட்டுரை பொது நெறி பற்றி எழுதப்பட்டதே தவிர, ‘குடி அரசின்’ ஆசிரியரையோ அதன் இயக்கத்தையோ உளம் கொண்டு எழுதவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

இப்படி திரு, முதலியார் எழுதி மறையப் பார்ப்பார் என்று நாமும் நமது நண்பர்களும் முன்னமே நினைத்ததுதான். ஆனாலும், பின்னை அது யாரைப் பற்றி எழுதினது என்று கேட்டு இம்முறை திரு.முதலியாரின் நாணயத்தின் யோக்கியதையை சந்திக்கு இழுத்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் சென்ற வாரம் ‘குடி அரசில்’ “திரு.வி.கலியாணசுந்தர முதலியார்” என்கின்ற தலையங்கம் எழுதினோம்.

திரு.முதலியார், உடனே வெகு அவசரமாக அடுத்த வாரமே அது நம்மைப் பற்றி எழுதவில்லை என்று எழுதி தப்பித்துக் கொள்ளப் பார்த்தாரானாலும் வெகு ஆத்திரத்தின் மீது 5, 6 கலம் நீட்டி எழுதிய அதே கட்டுரையில் தம்மை அறியாமலே தமது விஷம் முழுவதையும் கக்கி விட்டார். அதாவது, “குடி அரசில் வரும் கட்டுரைகளில் பல எமக்கு (திரு.முதலியாருக்கு) பிடிப்பதில்லை” என்றும், “அதற்காக நான் அறப்போர் தொடுக்கப் போகிறேன்” என்றும் எழுதி அவ்வாதப் போரிட நம்மை அறைகூவி அழைத்திருக்கிறார்.

அதோடு “ஆண்டவன் அருளை முன்னிட்டே இப் போர்முனையில் நான் இறங்குகிறேன்” என்று சொல்லி ஆண்டவன் அருளில் போய் ஒளிகிறார். அதோடு நில்லாமல் “முரடர்களால் தாக்கப் பெறும் பேறும், கொல்லப் பெறும் பேறும் எமக்கு கிடைத்தால் அதுவே போதும்” என்றும் சோம்பேறி ஞானமும் பேசி பேடி வசவும் வைகிறார்.

அன்றியும் "பெரியோர்களை இழிந்த உரைகளால் தூற்றும் கட்டுரைகளைக் கொண்டு வெளிப்பட்டுள்ள ஒரு பத்திரிகையுடன் (குடி அரசுடன்) போர் புரிந்து உயிர் நீப்பதே எனது பிறவிப் பயன்” என்றும் எழுதுகிறார்.

அன்றியும் “குடிஅரசுத் தலைவருக்கு ஆள்வலி, தோள்வலி, பொருள் வலியுமுண்டு; எமக்கோ அத்தொன்றுமில்லை; ஆதலால் ஆண்டவன் அருள்வலி கொண்டு போர் தொடங்குகிறேன்” என்றும் எழுதி இருக்கிறார். இவ்வெழுத்துக்களின் யோக்கியதை எப்படி இருந்தாலும் இவ்வெழுத்துக்களுக்குள் எவ்வளவு புரட்டும் இழிகுணமும் நிறைந்திருந்தாலும் ஒன்று மாத்திரம் வெளிப்படையாய்த் தெரிகிறதா இல்லையா? என்றுதான் கேட்கின்றோம்.

அதாவது, தாம் இதுவரை எழுதிவந்த ‘சீர்திருத்தம்’ என்னும் கட்டுரைகள் ‘குடி அரசை’யோ அதன் கொள்கைகளையோ குறித்ததல்ல என்றும், பொதுவான சீர்த்திருத்தையே குறிக்கொண்டு எழுதப்பட்டது என்றும் எழுதி வந்ததும், இப்போது இப்படி எழுதுவதும் யோக்கியப் பொறுப்பற்ற பொய்யா அல்லவா? என்பதுதான்.

இம்மாதிரியான யோக்கியரைப் பற்றி தாம் வசை மொழிகள் எழுதி விட்டதாக மிக்க வருந்துகிறார். அதோடு இவரை கண்டித்திருக்கும் வார்த்தைகள் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்றும் எழுதுகிறார். எனவே பிறர் செய்யும் அயோக்கியத்தனங்களை மறைத்து வைப்பதுதான் திரு.முதலியார் அவர்கள் அகராதியில் சுயமரியாதைக்கு பொருள் போலும்.

தவிர திரு. முதலியார் நம்முடன் தொடங்கியிருக்கும் போர் அறப்போரா, மறப்போரா என்பதையும் பொது மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டுமாய் விரும்புகிறோம்.

அறப்போர் என்பது எதிரி என்ன குற்றம் செய்தான் என்பதை எடுத்துக் காட்டி, அது குற்றம்தானா? என்பதை ருசுப்படுத்தி, அதன் மீது போர் தொடுத்து கண்டித்தல் யோக்கியர்கள் செய்யும் அறப்போருக்கு உரிய தர்மமாகும்

நமது திரு. முதலியார் அவர்களின் அறப்போருக்கு இந்த தர்மங்கள் வேண்டியதில்லை போலும். அன்றியும் ‘நாஸ்திகம்’ ‘பெரியோரை நிந்தித்தல்’ என்று சொல்லிவிட்டு, பேடித்தனமாக வாயில் வந்தபடி மறைவாக வைது விட்டு யாராவது ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால் ‘உம்மையல்ல’ என்று சொல்லி விடுவதுதான் அறப்போர்க் குற்ற தர்மங்களாகிவிடும் போலும்.. இவ்வித அறப்போருக்கு நமது திரு. முதலியாருக்கு கடவுள் அருள் வேறு வேண்டுமாம்.

கடவுள் ஒன்று இருப்பதாக திரு. முதலியார் அவர்கள் உண்மையிலேயே எண்ணி இருப்பாரானால் அதன் அருளை தமக்கு மாத்திரம் சொந்தமாக்கிக் கொண்டிருக்க மாட்டார். அதுவும் தன்னுடைய ஒழுக்கமும், நாணயமும், ஆண்மையும் அற்ற மறப்போருக்கு ஆண்டவன் அருள் கிடைக்குமென்று ஒரு க்ஷணமும் நினைத்திருக்கவும் மாட்டார். எனவே, உலகத்தில் எப்படிப்பட்டவர்கள் தொட்டதற்கெல்லாம் கடவுளை நினைக்கிறார்கள் என்பதற்கும், கடவுள் அருளை வேண்டுகிறார்கள் என்பதற்கும் இதுவே ஒரு உதாரணமாகும்.

நிற்க திரு. முதலியாரவர்கள் புராணங்களைப் பற்றி எழுதும்போதும் திருட்டுத்தனமாகவே எழுதுகிறார். அதாவது புராணங்களைப் பற்றிய நமது கருத்து நேயர்களுக்கு முன்னமே தெரியுமாம். ஆதலால் இப்பொழுது எழுத வேண்டியதில்லை என்று மறைந்து கொண்டார். இந்தப் போருக்கோ கட்டுரைக்கோ ஜீவாதாரமான விஷயம் இப்புராண விஷயந்தான் என்பது யாவரும் அறிந்ததாகும். அப்படியிருக்க அதைப்பற்றி மற்றுமொரு சமயம் எழுதப் போகிறாராம். எப்பொழுது எழுதுவது? என்பது நமக்கு விளங்கவில்லை. புராணங்களைப் பற்றி குறை கூறுவதாக நம்மீது குற்றம் சுமத்தும் போது அதன் யோக்கியதைகளை எடுத்துச் சொல்லாமல் மற்று எப்போது சொல்லுவதற்காக அதை வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது விளங்க வேண்டாமா? இதற்குதான் அறப்போர் என்று பெயரிட்டிருப்பதுடன் ஆண்டவன் அருளை நம்பி போருக்கு எழுந்து விட்டாராம். அதோடு கூடவே தான் ஒருபடி இறங்கி “புராணங்களை கவி அழகு, இயற்கை வருணனை முதலியவற்றைக் கருதிக்கூடவா படித்தல் கூடாது” என்கிறார். அவ்வியற்கை அழகுக்கும் கவி அழகுக்கும் உதாரணமாக கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையுமே காட்டத் துணிந்து விட்டார். இவ்வளவாவது இறங்கி வந்தது நல்ல காலமே.

கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும், கவியழகையும், வருணனையும் குறிக்கொண்டு படிப்பவரிடம் நமக்கு வேலையில்லை என்பதை திரு. முதலியார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஆனால் பாமர மக்களைக் கூட்டி வைத்து அதைப் படிப்பதுதான் பக்தி என்றும், கேட்பதுதான் மோட்சமென்றும், அதில் உள்ளவைகளை நம்பாதவன் நாஸ்திகன் என்றும், முரடன் என்றும், கடவுளையும், கடவுள் நெறியையும், கடவுள் நெறியை உணர்த்திய பெரியார்களையும் தூஷிப்பவன் என்றும் சொல்லுகின்றார்களே அம்மாதிரியான மூடர்களின் பிரசாரம் ஒழிய வேண்டும் என்பதுதான் நமது கவலை.

மற்றும் திரு. முதலியார் அவர்கள் எழுதுவதாவது “பத்திரிகை உலகில் ஈண்டு ‘குடி அரசு’ உலவுவது போல கலைகளில் குப்பைப் புராணங்கள் உலவுகின்றன” என்றும்,

“நாயக்கர் போன்றாருக்கு உலகில் இடமிருக்கும் வரை புராணங்களுக்கும் இடமிருந்தே தீரும்” என்றும்,

“புராணக் கலைகளை நாயக்கர் போன்றாருக்கு உவமையாய்க் கூறலாம்” என்றும் எழுதி இருக்கிறார்.

இம்மூன்று வாக்கியங்களாலும் நாயக்கரை திரு. முதலியார் அவர்கள் எவ்வளவு இழிவாய்க் கருதி இருக்கிறார் என்பது ஒருபுறமிருந்தாலும், அப்படி இழிவாய் கருதுவதிலும் நமக்கு என்ன லாபமிருக்கின்றது என்று பார்த்தால் இதிகாச புராணங்கள் என்பவைகளை அவ்வளவு இழிவாய்க் கருதி இருப்பதாக திரு. முதலியார் இப்போதாவது ஒப்புக் கொள்கின்றாரே, அதுவே நமக்கு ஒரு பெரிய லாபமாகக் கொள்ளலாம். ஆனால் இந்தப் புத்தி எவ்வளவு நேரம் நிற்குமோ?

உள்ள இதிகாசங்களையும் புராணங்களையும் வெறும் கலையாக ஒப்புக் கொண்ட பிறகும், மற்றும் அவை “நாயக்கரை”ப் போன்ற அவ்வளவு இழிகுணமுள்ளதாகத் தீர்மானித்த பிறகும், திரு. முதலியார் அவர்கள் கடவுளையும் கடவுள் நெறியையும், கடவுள் நெறிகளை உணர்த்திய பெரியாரையும் வேறு எதிலிருந்து கண்டுபிடித்தார் என்பதையும், எப்படிப்பட்ட கடவுளையும் கடவுள் நெறியையும் நெறி உணர்த்திய பெரியாரையும் நாயக்கர் வைகிறார் என்பதையும் திரு. முதலியார் ஆண்மை இருந்தால் இப்போதாவது சொல்ல முன் வருவாரா? என்றுதான் கேட்கின்றோம்.

எனவே, திரு. முதலியார் அவர்கள், “சீர்திருத்தம்” என்று எழுதிய கட்டுரைகள் நம்மையும் நமது இயக்கத்தையும் பற்றி எழுதியதுதான் என்று நாம் கொண்டது சரியென்றும், திரு. முதலியார் நம்மைப் பற்றி எழுதியது அல்ல என்று சொல்வது நாணயப் பொறுப்பற்ற பேடித்தனம் என்றும், திரு. முதலியார் அவர்களாலேயே 13-6-28 தேதி “நவசக்தி”யில் “குடிஅரசின் குதர்க்கம்” என்று எழுதப்பட்ட தலையங்கத்திலேயே தாம் முன் எழுதிய ‘சீர்திருத்தம்’ என்னும் கட்டுரையை நம்மைப் பற்றியே எழுதியதாகவும், அதுவும் கடவுளையும், கடவுள் நெறியையும், அந்நெறி உணர்த்திய பெரியார்களையும் குறை கூறுவதானாலும். நாஸ்திகம் பரப்புவதானாலுமே நம்முடன் இப்போர் தொடுக்க நேரிட்டது என்றும் எழுதி ஒப்புக் கொண்டிருப்பதையும் வாசகர்களுக்கு மெய்பித்து விட்டோம் என நினைக்கிறோம்.

மற்றும், திரு. முதலியார் அவர்களின் கட்டுரையின்கண் காணும் இழிமொழிகளுக்கு அதாவது சிற்றினம் என்றும், நாய் என்றும் புன்மொழி என்றும், நாயக்கர் இறுமாந்தவரென்றும், நாஸ்திகத்தை புகுத்துகிறவர் என்றும், “குடிஅரசு” இழிவுரை உமிழும் பத்திரிகை யென்றும், “குடி அரசு” கடவுள் நெறிக்கும் கலைகளுக்கும் கேடு சூழ்ந்து வருகின்றது என்றும் மற்றும் அது போன்று காணும் பழிப்புகளுக்கும், இழி மொழிகளுக்கும், மற்றும் அதில் கண்ட பலவற்றிற்கும் பின்னால் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 17.06.1928)